Sunday, December 4, 2016

278. தலைவி கூற்று

278. தலைவி கூற்று

பாடியவர்: பேரி சாத்தனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 81- இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று : பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் உரைத்தது.
கூற்று விளக்கம்: பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலைவி வருந்துகிறாள். ”தலைவர் விரைவில் வந்து விடுவார். எப்படியாவது இந்தப் பிரிவை நீ பொறுத்துக்கொள்வதுதான் சிறந்தது.” என்று தோழி ஆறுதல் கூறுகிறாள்தலைவி, “அவர் என்னை மறந்துவிட்டார். அவர் மிகவும் கொடியவர்.” என்று தோழிக்கு மறுமொழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

உறுவளி உளரிய அந்தளிர் மாஅத்து
முறிகண் டன்ன மெல்லென் சீறடிச்
சிறுபசும் பாவையும் எம்மும் உள்ளார்
கொடியர் வாழி தோழி கடுவன்
ஊழுறு தீங்கனி உதிர்ப்பக் கீழிருந்
தேற்பன ஏற்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலையிறந் தோரே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! கடுவன் ஊழுறு தீங்கனி உதிர்ப்பக் கீழிருந்து ஏற்பன ஏற்பன உண்ணும்பார்ப்புடை மந்திய மலை இறந்தோர் உறுவளி உளரிய அம் தளிர் மாஅத்து முறி கண்டன்ன மெல்என் சீறடிச் சிறுபசும் பாவையும் எம்மும் உள்ளார்கொடியர்.

அருஞ்சொற்பொருள்: வளி = காற்று; உறுவளி = பெருங்காற்று; உளரிய = கோதிய; மாஅத்து = மாமரத்தின்; முறி = இளந்தளிர்; சீறடி = சிறிய அடி; பாவை = பொம்மை; உள்ளார் = நினையார்; வாழி அசைநிலை; கடுவன் = ஆண்குரங்கு; ஊழ்உறு = முதிர்ந்த; ஏற்பன = ஏற்பவற்றை; உதிர்ப்ப = உதிர்க்க; பார்ப்பு = குட்டி; மந்தி = பெண்குரங்கு.
உரை: தோழி , நீ வாழ்க! முதிர்ந்த இனிய பழங்களை மரத்தின்மேல் இருந்து ஆண்குரங்கு உதிர்க்க, அம்மரத்தின் கீழே இருந்து, தகுந்தவற்றைத் ஆர்வத்தோடு தின்னுகின்ற, குட்டிகளை உடைய பெண்குரங்குகள் உள்ள மலையைக் கடந்து சென்ற தலைவர்,  மிகுந்த காற்றால் அசையும் அழகிய தளிரையுடைய  மாமரத்தின் தளிரைப் போன்ற, மெல்லிய சிறிய அடியை உடைய,  பசிய தாது முதலியவற்றால் செய்த விளையாட்டுப் பாவையையும் எம்மையும் நினையார்; அவர் கொடுமையானவார்.
சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில் காதலி விளையாடுவதற்காகத் காதலன் பசுமையான பஞ்சாய்க் கோரை, பூந்தாது ஆகியவற்றால் பொம்மை செய்து கொடுப்பதும்  அதைத் தன் குழந்தையாகக் காதலி  கற்பனை செய்துகொண்டு விளையாடுவதும் வழக்கமாக இருந்ததாகத் தெரிகிறது.  

 ஆண்குரங்கு மரத்தில் ஏறிப் பழங்களை உதிர்ப்பதையும், அவற்றைப் பெண்குரங்கும் குரங்குக் குட்டிகளும் உண்பதையும் கற்பனை செய்த தலைவி, தன் குழந்தை போன்ற பாவையையும் தன்னையும் தலைவர் காண  வராமல் இருப்பதால், “ பசும் பாவையும் உள்ளார்; கொடியர்.” என்று கூறுகிறாள். “ஏற்பன ஏற்பனஎன்று இருமுறை கூறியது, குரங்குக் குட்டிகள் ஆர்வத்தோடு பழங்களைப் பொறுக்கி எடுத்து உண்பதைக் குறிக்கிறது.

No comments:

Post a Comment