Monday, December 19, 2016

283. தலைவி கூற்று

283. தலைவி கூற்று

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ.
திணை: பாலை.
கூற்று: தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி ஆற்றாளெனக் கவன்ற (கவலைப்பட்ட) தோழிக்கு, "அவர் பிரிய, ஆற்றேனாயினேன் அல்லேன்; அவர் போயின கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்" என்று கிழத்தி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடச் சென்றிருக்கிறான். தலைவனைப் பிரிந்திருப்பதால் தலைவி வருந்துவாள் என்று எண்ணிக் கவலைப்பட்ட தோழி, தலைவிக்கு  ஆறுதல் கூறுகிறாள். ”அவர் பிரிவுக்காக நான் வருந்தவில்லை. அவர் சென்ற பாலை நிலத்தில் உள்ள வழிப்பறிக் கள்வர்கள் செய்யும் கொடுமைகளை எண்ணி நான் அஞ்சுகிறேன்.” என்று தலைவி கூறுகிறாள்.

உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவெனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி யென்றும்
கூற்றத் தன்ன கொலைவேல் மறவர்
ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த
படுமுடை பருந்துபார்த் திருக்கும்
நெடுமூ திடைய நீரில் ஆறே. 

கொண்டு கூட்டு: தோழி! உள்ளது சிதைப்போர் உளர் எனப் படாஅர்; இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு எனச் சொல்லிய வன்மை தெளியக் காட்டி, என்றும் கூற்றத்து அன்ன  கொலை வேல் மறவர் ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த படுமுடை பருந்து பார்த்திருக்கும் நெடுமூது இடைய நீர் இல் ஆறு சென்றனர், வாழி!

அருஞ்சொற்பொருள்: சிதைத்தல் = அழித்தல் (செலவழித்தல்); இரவு = யாசித்தல்; இளிவு = இழிவு; வன்மை = சொல்லியபடி செய்யும் மனவலிமை; கூற்றம் = எமன்; மறவர் = பாலைநில மக்கள் (வழிப்பறிக் கொள்ளையர்); அல்கி = தங்கி; வழங்குதல் = நடத்தல்; செகுத்தல் = வெட்டிக் கொல்லுதல் (அம்பெய்து கொல்லுதல்); படுதல் = உண்டாதல்; முடை = புலால்; மூது = முதுமை; ஆறு = வழி.

உரை: தோழி!  தம்முடைய முன்னோரால் தேடி வைக்கப்பட்ட பொருளைச் செலவு செய்து அழிப்பவர்கள் செல்வம் உடையவர்கள் என்று உலகத்தாரால் கருதப்பட மாட்டார்கள்.  தாமாக ஈட்டிய பொருள் இல்லாதார், மூதாதையோரின் பொருளின் பயனைத் துய்த்து வாழ்தல், இரத்தலைக் காட்டினும் இழிவானது என்று, மனவலிமையோடு, நமக்குத் தெளிவாக எடுத்துக் கூறி,  நம் தலைவர் பொருள்தேடச் சென்றார். எப்பொழுதும் கூற்றுவனைப் போன்ற, கொலைத் தொழிலைச் செய்யும் வேலை உடைய வழிப்பறிக் கொள்ளையர், வழியில் தங்கி இருந்து (மறைந்திருந்து), வழிப்போக்கர்களைக்  கொன்றதனால் உண்டான புலாலைப் பருந்துகள் எதிர்நோக்கித் தங்கி இருக்கின்ற,  நெடிய பழைய இடத்தை உடைய, நீர் இல்லாத பாலை நிலத்து வழிகளிலே, தலைவர் சென்றார். அவர் வாழ்வாராக!


சிறப்புக் குறிப்பு: முன்னோர்கள் விட்டுச் சென்ற செல்வத்தைச் செலவழித்து வாழ்தல் பெருமைக்குரியது அன்று. தன் முயற்சியால் பொருள்தேடித் தான்பெற்ற செல்வத்தால் இல்லறத்தை நடத்துவது ஆண்மைக்கு அழகு என்று தலைவிக்கு எடுத்துக் கூறித் தலைவன் பொருள்தேடச் சென்றான். அதனால், தலைவன் பொருள் தேடச் சென்றதில் தலைவிக்கு உடன்பாடு உண்டு. ஆனால், அவன் சென்ற வழியில் கொலை செய்வதையும் கொள்ளை அடிப்பதையும் தொழிலாகக் கொண்ட ஆறலைக் கள்வர்களின் கொடுமையை நினைத்துத் தலைவி வருந்துகிறாள்.  

No comments:

Post a Comment