Sunday, December 4, 2016

276. தலைவன் கூற்று

276.  தலைவன் கூற்று

பாடியவர்: கோழிக் கொற்றனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று : தோழிக்குக் குறைமறாமல் (வேண்டுகோளை மறுக்க வேண்டாம் என்று)  தலைவன் கூறியது. 
கூற்று விளக்கம்: சில நாட்களாகத் தலைவன் தலைவியைக் காணமுடியவில்லை. தோழியைச் சந்தித்து, தலைவியைக் காண்பதற்கு உதவி செய்யுமாறு தலைவன் வேண்டுகிறான். தோழி, “ தலைவி மிகவும் சிறுவயதினள். அவள் உன்னோடு பழகுவதை, அவள் பெற்றோர்கள் விரும்பவில்லை. ஆகவே, நீ இனி அவளைச் சந்திப்பது இயலாது.” என்று கூறுகிறாள். தலைவன், “ எனக்கும் அவளுக்கும் இடையே இருந்த உறவை நான் அரசவையில் கூறி, நீதி கேட்டால் என்ன ஆகும் தெரியுமா? என் வேண்டுகோளை மறுக்காமல் எனக்கு நீ உதவி செய்வதுதான் நல்லது.” என்று தோழியை அச்சுறுத்துகிறான்.

பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும்
பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்து மற்றிவள்
உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்
முறையுடை யரசன் செங்கோல் அவையத்
தியான்றற் கடவின் யாங்கா வதுகொல்
பெரிதும் பேதை மன்ற
அளிதோ தானேயிவ் வழுங்கல் ஊரே. 

கொண்டு கூட்டு: பணைத்தோள் குறுமகள் பாவை தைஇயும் பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்து மற்று இவள் உருத்து எழு வனமுலை ஒளிபெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்முறையுடை அரசன் செங்கோல் அவையத்து யான் தன் கடவின், யாங்கு ஆவதுகொல்இவ் அழுங்கல் ஊர் மன்ற பெரிதும் பேதை! அளிது!

அருஞ்சொற்பொருள்: பணை = மூங்கில்; குறுமகள் = இளம்பெண் (தலைவி); பாவை = பதுமை (பொம்மை); தைஇயும் = தைத்துப் பொம்மையாகச் செய்தும்; பஞ்சாய் = ஒருவகைக் கோரை; உருத்து = தோன்றிய; வனமுலை = அழகிய முலை; தொய்யில் = சாந்தினால் உடலில் (ஆண்கள் பெண்களின் மார்பில்) இடும் கோலம்; அறிதலும் அறியார் = முற்றிலும் அறியார்; கடவின் = வினவினால்; அழுங்கல் = வருத்தம்; மன்ற = நிச்சயமாக; பேதை = அறிவின்மையை உடையது; அளிது = இரங்கத் தக்கது.

உரை: மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய இளம்பெண்ணாகிய தலைவிக்கு நான்  பாவை செய்து தந்ததும்,  அந்தப் பாவையைச்  செய்வதற்காக பஞ்சாய்க் கோரை வளர்ந்த பள்ளமாகிய நீர் நிலைகளைச் சுற்றி அலைந்ததும்,  இவளது நிமிர்ந்து எழுந்த அழகிய முலைகளில் ஒளி பெறுமாறு தொய்யில் எழுதியதும் இவளைப் பாதுகாப்பவர்கள் முற்றிலும் அறியார். நீதியை உடைய அரசனது,  செங்கோன்மையை உடைய அறங்கூறும் அவையில், நான் இவைபற்றித் தலைவியை வினவினால், நிலைமை என்ன ஆகும்?  வருந்தத்தக்க இந்த ஊர், நிச்சயமாக மிக்க அறியாமையை உடையது; இரங்கத் தக்கது!

No comments:

Post a Comment