Sunday, December 4, 2016

282. தோழி கூற்று

282.  தோழி கூற்று

பாடியவர்: நாகம் போத்தனார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: வினைவயிற் பிரிந்தவிடத்துத் தோழி கிழத்திக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்:  கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறித் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். கார்காலம் வந்து விட்டது. ஆனால், இன்னும் தலைவன் வரவில்லை. தலைவி மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறாள்.  “தான் வருவதாகக் கூறிச் சென்ற கார்காலம் வந்துவிட்டது என்பதற்கான அறிகுறிகளைத் தலைவர் தான் சென்ற இடத்தில் கண்டிருப்பார். தான் இன்னும் வராததால், நீ வருத்தமாக இருப்பதை எண்ணிப் பார்த்து அவர் விரைவில் திரும்பி வருவார். நீ வருத்தப்படாதே!” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

செவ்விகொள் வரகின் செஞ்சுவற் கலித்த
கௌவை நாற்றின் காரிரு ளோரிலை
நவ்வி நாண்மறி கவ்விக் கடன்கழிக்கும்
காரெதிர் தண்புனங் காணிற் கைவளை
நீர்திகழ் சிலம்பின் ஓராங் கவிழ்ந்த
வெண்கூ தாளத் தந்தூம்பு புதுமலர்
ஆர்கழல் புகுவ போலச்
சோர்குவ வல்ல என்பர்கொல் நமரே. 

கொண்டு கூட்டு: நமர், செஞ்சுவல் கலித்த  செவ்வி கொள் வரகின் கௌவை நாற்றின், கார் இருள் ஓரிலை நவ்வி மறி கவ்வி, நாள் கடன்கழிக்கும் கார் எதிர் தண்புனம் காணின், நீர்திகழ் சிலம்பின் ஓராங்கு அவிழ்ந்த,  வெண் கூதாளத்து  அம் தூம்பு புதுமலர்,
ஆர் கழல்பு உகுவ போலக் கைவளை சோர்குவ அல்ல என்பர் கொல்

அருஞ்சொற்பொருள்: செவ்வி = தக்க சமயம் (பருவம்); சுவல் = மேடு; கலித்த = தழைத்த; கௌவை = ஒன்றுடன் ஒன்று உராயும் ஒலி; நவ்வி = மான்; மறி = குட்டி; தண் = குளிர்ச்சி; புனம் = கொல்லை; சிலம்பு = மலை; கூதாளம் = ஒரு வகைச்செடி; தூம்பு = துளை; ஆர் = காம்பு; சோர்குதல் = சோர்தல்.
உரை: நம்மைப் பிரிந்து சென்ற தலைவர், செம்மண்ணை உடைய மேட்டின் மேல் தழைத்த, கதிர் ஈனும் பருவத்தை அடைந்து காற்றில் அசைந்து ஒலிக்கும் வரகின் நாற்றில் மிகுந்த கருமை நிறத்தை உடைய ஓரு இலையை மான்குட்டி கடித்துத்  தின்றுஅந்நாளுக்கான தன் பசியைத் தீர்த்துக்கொள்ளும் இடமாகிய கார்காலத்தை ஏற்றுக் கொண்ட குளிர்ந்த கொல்லையைக்  காண்பார். அங்குநீர்வளம் விளங்குகின்ற மலைப்பக்கத்தில், ஒன்றுபோல் மலர்ந்த, வெண்மையான கூதாளத்தின் துளையை உடைய அழகிய புதிய மலர்கள், காம்பிலிருந்து கழன்று உதிர்வதைப் போல, உன் கைவளையல்கள் கழன்று வீழ்வன அல்ல என்று எண்ணுவாரோ? எண்ண மாட்டார்.
சிறப்புக் குறிப்பு: வரகு செம்மண்ணை உடைய முல்லை நிலத்தில் கார் காலத்தில் வளரும் பயிர் என்பதும், அதனை மான் மேயும் என்பதும் இப்பாடலிலிருந்து தெரிகிறது. மான்குட்டி தன் இளமையினால் ஒரே ஒரு இலையை மட்டும் உண்டு தன் பசியைத் தீர்த்துக்கொண்டது.

வரகு விளைவதைக் கண்டு, தாம் மீள்வதாகக் கூறிய கார்ப்பருவம் வந்ததையும், கூதாளத்தின் மலர்கள் உதிர்வதைக் கண்டு, பிரிவினால் தலைவியின் கைவளையல்கள் நெகிழும் என்பதையும் உணர்ந்து, தலைவர் விரைவில் திரும்பி வருவார் என்று தோழி கூறுகிறாள்.

No comments:

Post a Comment