Monday, December 19, 2016

287. தோழி கூற்று

287.  தோழி கூற்று

பாடியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார்.
திணை: முல்லை.
கூற்று: பிரிவிடை வேறுபட்ட தலைவி நம்மைத் துறந்து வாரார் என்று கவன்றாட்குப் பருவம் காட்டித் தோழி, வருவரெனச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பிரிந்த காலத்து, "தலைவர் நம்மைத் துறந்தார்; இனி வர மாட்டார்." என்று கவலைப்பட்ட தலைவியை நோக்கி, "இதோ கார்காலம் வந்தது; இனி அவர் உன்னைப் பிரிந்து இருக்க மாட்டார்; வருவர்." என்று தோழி கூறுகிறாள்.


அம்ம வாழி தோழி காதலர்
இன்னே கண்டுந் துறக்குவர் கொல்லோ
முந்நாற் றிங்க ணிறைபொறுத் தசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே.

கொண்டு கூட்டு: தோழி! வாழி! அம்ம! முந்நால் திங்கள் நிறை பொறுத்து, அசைஇ, ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு, விசும்பு இவர்கல்லாது,  தாங்குபு புணரி, செழும்பல் குன்றம் நோக்கிப் பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுது காதலர் இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ?

அருஞ்சொற்பொருள்: அம்ம - நான் சொல்லுவதைக் கேட்பாயக என்ற பொருளில் வந்த அசைச்சொல்; இன்னே = இப்பொழுதே; துறக்குவர் = துறந்து வாழ்பவர்; முந்நால் = பன்னிரண்டு (3 x 4 = 12); நிறை = நிறைவு; அசைஇ = தளர்ந்து, சோர்வுற்று; ஒதுங்கல் = நடத்தல்; செல்லா = இயலாத; பசும்புளி = புளியங்காய்; சூல் = கருப்பம்; கடுஞ்சூல் = முதற்சூல் (முதற் கருப்பம்); விசும்பு = ஆகாயம்; இவர்கல்லாது = ஏற முடியாமல்; தாங்குபு = தாங்கிக்கொண்டு; புணரி = ஒன்றுசேர்ந்து; செழு = செழுமையான; கலி = ஆரவாரம்; வானம் = மேகம்; ஏர்தரும் = சூழ்ந்து எழும்.

உரை: தோழி! நான் சொல்லுவதைக் கேட்பாயாக! பன்னிரண்டு மாதம் நிறை கருப்பம் தாங்கித் தளர்ந்து, நடக்க முடியாமல், புளியங்காயைத் தின்பதில் விருப்பமுடைய, முதன்முதலாகக் கருப்பம் அடைந்த மகளிரைப் போல, நீரை முகந்து கொண்டு, வானத்தில் ஏற முடியாமல், அந்த நீர்ச்சுமையைத் தாங்கிக் கொண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து, வளம் மிக்க பல மலைகளை நோக்கி, பெரிய முழக்கத்தோடு மேகங்கள் எழுகின்ற கார்ப் பருவத்தை, இப்பொழுது பார்த்த பிறகும், நம்மைப் பிரிந்து சென்ற தலைவர், வாராமல் இருப்பாரோ? வருவர்.


சிறப்புக் குறிப்பு: மகளிர் பன்னிரண்டு மாதங்கள் கருவுற்றிருக்கக் கூடும் என்ற கருத்து பழங்காலத்தில் நிலவியது போலும்.

2 comments:

  1. ஐயா,
    தாங்கள் காட்டியுள்ள உரையில் ஒரு நடைமுறை முரண்பாடுள்ளதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்
    புளிவேட்கை என்பது மசக்கைக் காலம் என்று சொல்லப்படும் முதல் மூன்று மாத காலத்துக்குப் பின் இராது . அதனால், 12மாதம் நிறைந்த, புளிச்சுவையில் விருப்ப முடையவள் என்பது பொருந்தாது. முன் நான்கு திங்கள் 3 x 4 =12 எனப் பொருள் கொள்ளாமல்
    நாற்றிங்கள் முன் = நாலாவது திங்கள் தொடங்கும் முன் அதாவது முதல் மூன்று மாத காலம் வரை. பாடலில் எதுகை கருதி முன்னாற்றிங்கள் எனவானது.
    இப்பாடலில் ஒப்புவமையாவது சூல்கொண்ட பெண்ணும் நீர்மொண்ட மேகமன்றாம் .
    சூளூற்ற காலத்து பெண்ணொருத்தி புளி வேட்கையை ஒதுக்கித் தள்ளமுடியாதது போன்று கார்காலத்தில் தன் துணையின் நினைவைக் காதலரால் தவிர்த்தற் கியலாது . அதனால் அவர் வருவது உறுதி(யாம்) என்பது இப்பாடற் கருத்தாகிறது.

    ReplyDelete