Monday, December 19, 2016

289. தலைவி கூற்று

289.  தலைவி கூற்று

பாடியவர்: பெருங் கண்ணனார்.
திணை: முல்லை.
கூற்று: காலங்கண்டு வேறுபட்டாள் எனக் கவன்ற தோழிக்கு, “காலத்து வந்திலரென்று வேறுபட்டேன் அல்லேன். அவரைப் புறத்தார் கொடியர் என்று கூறக் கேட்டு வேறுபட்டேன்என்று தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் திரும்பிவருவதாகக் கூறிச்சென்ற பருவம் வந்தது. தலைவி உடல் மெலிந்து காணப்பட்டாள். அதைக் கண்ட தோழி, தலைவன் வராததால் தலைவி வருந்துகிறாள் என்று நினைத்து, “தலைவர் விரைவில் வந்துவிடுவார். அவரை நினைத்து நீ வருந்தாதே!” என்று  தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.  தலைவி, “நான் அவரை நினைத்து வருந்தவில்லை. தலைவர் என்னைப் பிரிந்து சென்றதால், இவ்வூர் மக்கள் என்மீது கவலை உடையவர் போல் நடிக்கின்றனர்இவர்கள் அவரைக் கொடியவர் என்று கூறுகிறார்கள் என்பதை அறிந்துதான் நான் வருந்துகிறேன்.” என்று கூறுகிறாள்  


வளர்பிறை போல வழிவழிப் பெருகி
இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழைபிசைந் தனையே மாகிச் சாஅய்
உழையர் அன்மையின் உழப்ப தன்றியும்
மழையுந் தோழி மான்றுபட் டன்றே
பட்ட மாரி படாஅக் கண்ணும்
அவர்திறத் திரங்கு நம்மினும்
நந்திறத் திரங்குமிவ் வழுங்கல் ஊரே. 

கொண்டு கூட்டு: தோழி!  வளர்பிறை போல வழிவழிப் பெருகிஇறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு குழைபிசைந்த அனையேம் ஆகி, சாஅய்உழையர் அன்மையின் உழப்பதன்றியும்மழையும் மான்று பட்டன்றுபட்டமாரி படாஅக் கண்ணும் இவ் அழுங்கல் ஊர், அவர் திறத்து இரங்கும் நம்மினும்நம் திறத்து இரங்கும். 

அருஞ்சொற்பொருள்: இறை = மணிக்கட்டு (முன்கை); எவ்வம் = துன்பம்; எவ்வ நோய் = துன்பம் தரும் நோய் (காம நோய்); குழை = தளிர்; சாஅய் = மெலிந்து; உழையர் = அருகில் இருப்பவர் (தலைவர்); உழப்பது = துன்புறுவது; மான்று = மயங்கி; மாரிமழை; பட்டமாரி = இப்பொழுது பெய்கின்ற மழை; படாஅக் கண்ணும் = பெய்யாத பொழுதும்; அழுங்குதல் மிக வருந்துதல்;

உரை: தோழி! வளர்பிறைத் திங்களைப்போல், மேலும்மேலும் பெருகி, என் முன்கையில் உள்ள வளையல்களை நெகிழச் செய்த காமநோயுடன், தளிரைக் கசக்கிப் பிசைந்தது போலாகி நான் மெலிந்தேன்தலைவர் பக்கத்தில் இல்லாததால், நாம் துன்பப்படுவது மட்டுமல்லாமல், காலமல்லாத காலத்தில் இந்த மழை மயங்கிப் பெய்யத் தொடங்கியது. இம் மழை பெய்வதற்கு முன்னரே, இந்த வருத்தம் மிகுந்த ஊரில் உள்ளவர்கள், அவருக்காக வருந்தும் நம்மைக் காட்டிலும், நமக்காக மிகவும் வருந்துகின்றனர்.


சிறப்புக் குறிப்பு: காலமல்லாத காலத்தில் பெய்கின்ற மழை என்று தலைவி எண்ணியதால், அது மயங்கிப் பெய்தது என்று கூறுகிறாள்.  

No comments:

Post a Comment