Sunday, April 2, 2017

330. தலைவி கூற்று

330.  தலைவி கூற்று
பாடியவர்: கழார்க் கீரனெயிற்றியனார்.
திணை: மருதம்.
கூற்று : பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவி, பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வருந்துகிறாள், “இந்த மாலை நேரத்தில் நான் துன்பத்தால் தனிமையில் வாடுகிறேன். தலைவர் சென்ற நாட்டில், இந்த மாலைக்காலமும், தனிமையும் இல்லையோ?” என்று தலைவி தோழியிடம் கேட்கிறாள்.

நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்துத்
தலைப்புடைப் போக்கித் தண்கயத் திட்ட
நீரிற் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்
பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ
இன்கடுங் கள்ளின் மணமில கமழும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே.

கொண்டு கூட்டு: தோழி! நலத்தகைப் புலைத்தி, பசைதோய்த்து எடுத்துத் தலைப்புடைப் போக்கித் தண்கயத்து இட்ட நீரில் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்பேரிலைப் பகன்றைப் பொதி அவிழ் வான்பூஇன்கடுங் கள்ளின் மணம்இல கமழும் புன்கண் மாலையும் புலம்பும்அவர் சென்ற நாட்டு இன்றுகொல்?

அருஞ்சொற்பொருள்: நலம் = நற்குணம்; தகை = அழகு; புலைத்தி = வண்ணாத்தி; தலைப்புடை = முதல் துவைப்பு; தண் = குளிர்ந்த; கயம் = குளம்; பரூஉ = பருத்த; திரி = முறுக்கினது (இங்கு, முறுக்கிய ஆடையைக் குறிக்கிறது); கடுக்கும் = ஒக்கும்; பகன்றை = ஒருவகைக் கொடி; பொதி = தளை அவிழாத மொட்டு; வான்பூ = வெண்மையான பூ; புன்கண் = துன்பம்; புலம்பு = தனிமை.
உரை: தோழி! நற்குணமும் அழகுமுடைய வண்ணாத்தி, கஞ்சியிலே தோய்த்து எடுத்து, முதலில் துவைக்க வேண்டிய முறைப்படி துவைத்துவிட்டு, குளிர்ந்த நீர்நிலையில் போட்டபின், அந்நீரில், பிரியாத பருத்த ஆடையின் முறுக்கை ஒத்திருக்கின்ற, பெரிய இலைகளையுடைய பகன்றையின் முறுக்குடைய மொட்டுக்கள் விரிந்து மலர்ந்த வெண்மையான மலர், இனிய கடுமையான கள்ளைப் போல நல்ல மணமில்லாமல் நாறுகின்ற, துன்பத்தைத் தரும் மாலைக்காலமும், தனிமையும், தலைவர் நம்மைப் பிரிந்து சென்ற நாட்டில், இல்லையோ?
சிறப்புக் குறிப்பு: பகன்றையின் மலர்கள் வெண்ணிறமானவை. அதன் மலர்கள் நல்ல மணமில்லாதவை. பன்றையின் மொட்டு, முறுக்கிய துணியைப் போல் காட்சி அளிக்கும். முறுக்கிய துணி பகன்றை மொட்டுக்கு உவமை.

எனக்குத் துன்பதைத் தரும் மாலைக்காலமும் தனிமையும் தலைவர் சென்ற நாட்டில் இல்லை போலிருக்கிறது. அவை அங்கு இருந்தால், என்னைத் துன்புறுத்துவது போல் அவரையும் துன்புறுத்தும். அவர் அத் துன்பத்திலிருந்தும் தனிமையிலிருந்தும் நீங்க விரும்பிஇங்கு வந்திருப்பார்.” என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள்.

329. தலைவி கூற்று

329. தலைவி கூற்று
பாடியவர்: ஓதலாந்தையார்.
திணை: பாலை.
கூற்று : பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறத்துந் தோழிக்கு யான் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலைவி வருத்தத்தோடு அழுதுகொண்டிருந்தாள். அதைக் கண்ட தோழி, “நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர் விரைவில் வந்துவிடுவார். அவரை நினைத்து, நீ தூங்காமல் இருப்பதையும் அழுவதையும் நிறுத்து.“ என்று கூறுகிறாள். அதற்கு மறுமொழியாக, “நான் பொறுத்துக்கொண்டுதான் இருக்க விரும்புகிறேன். இருந்தாலும், என் கண்கள் தானாகவே தூக்கத்தை இழந்து அழுகின்றன. அதற்கு நான் என்ன செய்வேன்.?” என்று தலைவி தன் கண்களை வேறுபடுத்திக் கூறுகிறாள்

கான விருப்பை வேனல் வெண்பூ
வளிபொரு நெடுஞ்சினை உகுத்தலி னார்கழல்பு
களிறுவழங்கு சிறுநெறி புதையத் தாஅம்
பிறங்குமலை அருஞ்சுரம் இறந்தவர்ப் படர்ந்து
பயிலிருள் நடுநாள் துயிலரி தாகித்
தெண்ணீர் நிகர்மலர் புரையும்
நன்மலர் மழைக்கணிற் கெளியவாற் பனியே. 

கொண்டு கூட்டு: கான இருப்பை வேனல் வெண்பூ வளி பொரு நெடும் சினை உகுத்தலின்,  ஆர்கழல்புகளிறு வழங்கு சிறுநெறி புதையத் தாஅம் பிறங்கு மலை அருஞ்சுரம் இறந்தவர்ப் படர்ந்துபயில் இருள் நடுநாள் துயில் அரிதாகித் தெள்நீர் நிகர்மலர் புரையும் நன்மலர் மழைக்கணிற்கு பனி எளிய

அருஞ்சொற்பொருள்: கானம் = காடு; இருப்பை = ஒருவகை மரம்; வேனல் = வேனிற்காலம்; வளி = காற்று; பொருதல் = தாக்குதல்; சினை = கிளைஉகுத்தல் = உதிர்த்தல்; ஆர் = காம்பு; கழல்பு = கழன்றுபுதைய = மறைய; தாஅம் = பரவும்; பிறங்குதல் = விளங்குதல்; இறந்தவர் = கடந்தவர்; படர்தல் = நினைத்தல்; பயில்தல் = நெருங்கல்; நிகர் = ஒளி; புரையும் = போன்ற; பனி = நீர்த்துளி.

உரை: காட்டில் வளர்ந்த இருப்பை மரத்தின்,  வேனிற்காலத்திலே மலரும் வெண்ணிறமான பூக்கள்,  காற்றால் அலைக்கப்பட்ட நெடிய கொம்புகள் உதிர்ப்பதால், காம்பினின்றும் கழன்று, யானைகள் செல்லும் சிறிய வழி மறையும்படி, பரவிக் கிடக்கும்அத்தகைய  மலைகளையுடைய, கடத்தற்கு அரிய பாலைநிலத்தைக் கடந்து சென்ற தலைவரை நினைத்து, மிகுந்த இருளையுடைய நடு இரவில், தூங்காமல்,  தெளிந்த நீரில் உள்ள ஒளி பொருந்திய மலரைப் போன்ற, நன்றாக விளங்குகின்ற, குளிர்ச்சியையுடைய என் கண்களில், நீர்த்துளிகள்  எளிதில் உண்டாகின்றன

328. தோழி கூற்று

328. தோழி கூற்று
பாடியவர்: பரணர்.
திணை: நெய்தல்.
கூற்று : வரைவிடை வேறுபடும் கிழத்தியை, அவர் வரையும் நாள் அணித்தெனவும், அலரஞ்சலெனவும் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்குச் சென்றிருக்கிறான். அவனுடைய பிரிவைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “ஊரில் உங்கள் இருவரையும் பற்றி அலர் மிகுதி ஆயிற்று. அதனால், நல்லதே நடக்கும். உன் சுற்றத்தார் அனைவரும் தலைவனைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவனை உனக்குக் ஏற்ற கணவனாகக் கருதி, விரைவில் உன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வர். ஆகவே, இந்த அலரைக் கண்டு  நீ அஞ்ச வேண்டியதில்லை.” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

சிறுவீ ஞாழல் வேரளைப் பள்ளி
அலவன் சிறுமனை சிதையப் புணரி
குணில்வாய் முரசின் இரங்குந் துறைவன்
நல்கிய நாள்தவச் சிலவே அலரே
வில்கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர்
புலிநோக் குறழ்நிலை கண்ட
கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே. 

கொண்டு கூட்டு: சிறுவீ ஞாழல் வேர் அளைப் பள்ளிஅலவன் சிறுமனை சிதைய, புணரி
குணில் வாய் முரசின் இயங்குந் துறைவன் நல்கிய நாள்தவச் சில. அலர் வில்கெழு தானை விச்சியர் பெருமகன்வேந்தரொடு பொருத ஞான்றை,  பாணர் புலிநோக்கு உறழ்நிலை கண்டகலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே. 

அருஞ்சொற்பொருள்: வீ = பூ; ஞாழல் = ஒரு வகை மரம்; அளை = வளை; பள்ளி = இடம்; அலவன் = நண்டு; சிதைத்தல் = அழித்தல்; புணரி = அலை; குணில் = குறுந்தடி; இரங்குதல் = ஒலித்தல்; நல்குதல் = அன்பும் அருளும் காட்டுதல்; தவ = மிக; ஞான்று = பொழுது; உறழ்தல் = ஒத்தல்; கலி = ஆரவாரம்; ஆர்ப்பு = முழக்கம்.    சிலவே என்பதில் உள்ள ஏகாரம் பிரிநிலைஅலரே, பெரிதே என்பவற்றில் உள்ள ஏகாரங்கள் அசை நிலை.
உரை: சிறிய மலரையுடைய ஞாழல் மரத்தின் வேரில் உள்ள வளையிடமாகிய நண்டின் சிறிய வீடு அழியும்படிக் கடலலைகள் மோதும். அவ்வலைகள் குறுந்தடியால் அடிக்கப்படும் முரசைப் போல முழங்கும் கடற்றுறையையுடைய தலைவன், உன்னிடம் அன்போடும் அருளோடும் பழகிய  நாட்கள் மிகவும் சிலவேயாகும். விற்படையோடு கூடிய விச்சியர்களுக்குத் தலைவன், அரசர்களோடு போர் செய்த காலத்தில், பாணர்களது புலியைப் போன்ற பார்வையைக் கண்டு,  குறும்பூரில் உள்ளவர்கள் மிகுந்த ஆரவாரம் செய்தார்கள். அவர்கள் செய்த ஆரவாரத்தைவிட ஊராரின் பழிச்சொற்களால் உண்டாகிய  முழக்கம் பெரிதாக உள்ளது.
சிறப்புக் குறிப்பு: போர் நடக்கும் இடத்தில் உள்ள மக்கள் ஆரவாரம் செய்தாலும், முடிவில் போரில் ஒருவர் வெற்றி பெறுவதைப்போல், ஊரார் அலர் தூற்றினாலும், தலைவிக்கும் தலைவனுக்கும் திருமணம் விரைவில் நடைபெறும் என்று தோழி குறிப்பாகக் கூறுகிறாள்.
 புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும் விச்சிக்கோன் என்ற ஓரு குறுநிலமன்னனைப் பற்றிய செய்தி காணப்படுகிறது. இப்பாடலில் குறிப்பிடப்படும் விச்சியர் பெருமகன் அவனாக இருக்கலாம் என்று உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

பாணர் போர்க்களத்திற்குச் சென்று, போரில் வெற்றி பெற்ற  மன்னனை களவழிப்பா, பரணி முதலிய பாடல்களால் புகழ்ந்து பாடுதல் மரபு. போர் முடியும்வரை போரில் யார் வெற்றி பெறுவார் என்பதைப் பாணர்கள் அறியாததால், அவர்கள் ஒதுங்கி இருந்து, இருதரத்தாரும் போர் செய்வதைக் காண்பர். புலி மற்ற விலங்குகளை வேட்டையாடும்பொழுது பதுங்கி இருந்து, பார்த்துத் தக்க சமயத்தில் பாய்வதைப்போல், பாணர்கள் ஒதுங்கி இருந்து போரில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்பது வழக்கம். இங்கு, புலியின் பார்வை பாணர்களின் பார்வைக்கு உவமை.

Sunday, March 19, 2017

327. தலைவி கூற்று

327. தலைவி கூற்று
பாடியவர்: அம்மூவனார்.
திணை: . குறிஞ்சி.
கூற்று : கிழவன் கேட்கும் அண்மையனாக அவன் மலையினின்று வரும் ற்றிற்கு  உரைப்பாளாய்க் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைக் காண்பதற்காகத் தலைவியின் வீட்டுக்கு வந்து, வேலிக்கு வெளியே நிற்கிறான். அவன் வரவை அறிந்த தலைவி, அவன் காதுகளில் கேட்குமாறு, ஆற்றை நோக்கித் தலைவன் தனக்குச் செய்த கொடுமையைப் பற்றிக் கூறுகிறாள்.

நல்கின் வாழும் நல்கூர்ந் தோர்வயின்
நயனில ராகுதல் நன்றென உணர்ந்த
குன்ற நாடன் தன்னினும் நன்றும்
நின்னிலை கொடிதால் தீய கலுழி
நம்மனை மடமகள் இன்ன மென்மைச்
சாயலள் அளியள் என்னாய்
வாழைதந் தனையாற் சிலம்புபுல் லெனவே. 

கொண்டு கூட்டு: தீய கலுழிநம் மனை மடமகள், இன்ன மென்மைச்  சாயலள்; அளியள்.” என்னாய்சிலம்பு புல்லென வாழை தந்தனை. ”நல்கின் வாழும் நல்கூர்ந்தோர் வயின் நயன்இலர் ஆகுதல் நன்றுஎன உணர்ந்தகுன்ற நாடன் தன்னினும் நின்னிலை நன்றும் கொடிது.

அருஞ்சொற்பொருள்: நல்குதல் = அருள் செய்தல்; நல்கூர்ந்தார் =  வறுமையுற்றோர் (இங்கு, தலைவனின் அன்பைப் பெறாத வறியவர்); வயின் = இடம்; நயன் = அன்பு; நன்றும் = மிகவும்; கலுழ் = நீர்ப்பெருக்கம் (இங்கு காட்டாற்றில் வரும் வெள்ளத்தைக் குறிக்கிறது); மடமகள் = இளம்பெண்; அளியள் = இரங்கத் தக்கவள்; சிலம்பு = மலைப் பக்கம்; புல் = இழிவு; புல்லென = புல் + என  = பாழாகும்படி (அழகு இழக்கும்படி).

உரை: தீமை இழைக்கின்ற வெள்ளப் பெருக்கோடு வருகின்ற காட்டாறே!   நாம் செல்லும் வழியின் அருகில் உள்ள வீட்டில் உள்ள இளம்பெண், இவ்வாழையைப் போன்ற  மெல்லிய சாயலை உடையவள், இரங்கத் தக்கவள் என்று கருதாமல், மலைப்பக்கம் அழகு இழக்கும்படி  அங்கே வளர்ந்த வாழை மரத்தை நீ பெயர்த்துக் கொண்டுவந்தாய். அதனால், தாம் அருள் செய்வதால் வாழ்கின்ற வறியோரிடம்அன்பு இல்லாதவராக இருப்பது நல்லது என்று உணர்ந்த குன்ற நாடனது (தலைவனது)  நிலையைக் காட்டிலும்,  உனது இயல்பு மிகவும் கொடியது.

326. தலைவி கூற்று

326. தலைவி கூற்று
பாடியவர்: இவர் பெயர் தெரியவில்லை.
திணை: நெய்தல்.
கூற்று : சிறைப்புறம்.
கூற்று விளக்கம்: தலைவியைக் காண்பதற்காகத் தலைவன் தலைவியின் வீட்டுக்கு வந்து, வேலிக்கு வெளியே, மறைவான இடத்தில் நின்றுகொண்டிருக்கிறான். அவன் வந்திருப்பது  தலைவிக்கும் தோழிக்கும் தெரியும். ”தலைவன் ஒருநாள் என்னைப் பிரிந்தால்கூட, எனக்கு அதனால் உண்டாகும் துன்பம் பலநாள் என்னை வருத்துகிறது.” என்று தலைவி தலைவனுக்குக் கேட்குமாறு தோழியிடம் கூறுகிறாள்.

துணைத்த கோதைப் பணைப்பெருந் தோளினர்
கடலாடு மகளிர் கான லிழைத்த
சிறுமனைப் புணர்ந்த நட்பே தோழி
ஒருநாள் துறைவன் துறப்பின்
பன்னாள் வரூஉம் இன்னா மைத்தே. 

கொண்டு கூட்டு: தோழி! துணைத்த கோதைப் பணைப் பெருந்தோளினர் கடலாடு மகளிர் கானல் இழைத்த சிறுமனைப் புணர்ந்த நட்புதுறைவன் ஒருநாள் துறப்பின் பன்னாள் வரூஉம் இன்னாமைத்து

அருஞ்சொற்பொருள்: துணைத்த = இரண்டிரண்டு மலர்களாக வைத்துக்  கட்டிய; கோதை = மாலை; பணை = மூங்கில்; கானல் = கடற்கரைச் சோலை; இழைத்த = செய்த; துறைவன் = நெய்தல் நிலத்தலைவன்; துறப்பின் = பிரிந்தால்; இன்னாமைத்து = துன்பத்தை உடையது.
உரை: தோழி! இரண்டிரண்டு மலர்களாக வைத்துக் கட்டிய மாலையை அணிந்த, மூங்கிலைப் போன்ற, பருத்த தோளையுடைய, கடல்நீரில் விளையாடும் மகளிரோடு சேர்ந்து, கடற்கரைச் சோலையிலே சிறிய மணல் வீடு கட்டி விளையாடிக்கொண்டிருந்த பொழுது,  நான் நெய்தல் நிலத்தலைவனைக் கண்டு கூடிய நட்பு, அத்தலைவன் ஒருநாள் என்னைப் பிரிந்தால்,  பல நாட்ளுக்குத் தொடர்ந்துவரும் துன்பத்தைத் தருவதாக உள்ளது.

சிறப்புக் குறிப்பு: பிரிவு நேராத வண்ணம், திருமணம் செய்துகொள்வதே சிறந்தது என்று தலைவி தலைவனுக்குக் குறிப்பாக உணர்த்துகிறாள்.

325. தலைவி கூற்று

325. தலைவி கூற்று
பாடியவர்: நன்னாகையார்.
திணை: நெய்தல்.
கூற்று : பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றதை அறிந்த தோழி, தலைவிக்கு ஆறுதல் கூறுவதற்காக வந்தாள்.  “தான் பிரிந்து செல்லப் போவதாகத் தலைவன் பலகாலம் சொல்லிக்கொண்டிருந்தான். ஒருநாள் அவன் அவ்வாறு என்னிடம் சொன்ன பொழுது, அவன் மீண்டும் பொய் சொல்லுவதாக நினைத்து, என் பக்கத்தில் நில்லாமல் போ என்று சொன்னேன். அவன் உண்மையாகவே என்னைப் பிரிந்து சென்றுவிட்டான். எனக்கு ஆதரவாக இருந்த அவன் இப்பொழுது எங்கே இருக்கின்றானோ?” என்று தலைவி வருத்தத்தோடு தோழியிடம் கூறுகிறாள்

சேறுஞ் சேறு மென்றலின் பண்டைத்தன்
மாயச் செலவாச் செத்து மருங்கற்று
மன்னிக் கழிகென் றேனே அன்னோ
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
கருங்கால் வெண்குருகு மேயும்
பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே. 

கொண்டு கூட்டு: சேறும் சேறும் என்றலின் பண்டைத் தன் மாயச் செலவாச் செத்து மருங்கு அற்று மன்னிக் கழிகஎன்றேன். அன்னோஆசு ஆகு எந்தை யாண்டுளன் கொல்லோஎன் முலைஇடை நிறைந்துகருங்கால் வெண்குருகு மேயும் பெருங்குளம் ஆயிற்று.

அருஞ்சொற்பொருள்: சேறும் = செல்லுவேன்; மாயச் செலவு = பொய்ச் செலவு (போகாமலே போகப் போவதாகப் பொய் சொல்லுவது); செத்து = எண்ணி; மருங்கு = பக்கம்; மன்னுதல் = நிலைபெறுதல்; ஆசு = பற்றுக் கோடு; எந்தை = என் தந்தை போன்ற என் தலைவன்.

உரை: ”உன்னைப் பிரிந்து செல்லப் போகிறேன்; உன்னைப் பிரிந்து செல்லப் போகிறேன்.” என்று தலைவன் பலகாலமாகச் சொல்லிக்கொண்டிருந்தான். ஒருநாள் அவன் அவ்வாறு சொல்லும் பொழுது, அவன் முன்பு போலப் பொய் சொல்லுகிறான் என்று எண்ணி, “என் பக்கத்திலிருந்து ஒரேயடியாக நிலைபெற்று நீங்குக.” என்றேன்.    ஐயோ!  நமக்குப் பற்றுக்கோடாகிய தலைவன் இப்பொழுது எங்கே இருக்கின்றானோ! அவனது பிரிவால் அழுத என் கண்ணீரால் என் முலைகளின் இடையிலுள்ள இடம் நிறைந்து, கரிய காலையுடைய வெண்ணிறமான நாரை, உணவை உண்ணும் பெரியகுளம் போல ஆயிற்று.

324. தோழி கூற்று

324. தோழி கூற்று
பாடியவர்: கவை மகனார்.
திணை: நெய்தல்.
கூற்று : செறிப்பறிவுறுக்கப்பட்டு, "இரா வாரா வரைவல்" என்றாற்கு த் தோழி அது மறுத்து வரைவு கடாயது. (இரா வாரா இரவில் வந்து; வரைவல்திருமணம் செய்துகொள்வேன்)
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் பகலில் சந்தித்துக் களவொழுக்கத்தில் தங்கள் காதல் வாழ்க்கையைத் தொடர்ந்து வந்தார்கள். தலைவியின் தாய்க்குத் தலைவியின் காதலைப் பற்றித் தெரிய வந்ததால், தாய் அவளை வீட்டில் காவலில் வைக்கவேண்டும் என்று முடிவு செய்தாள். அதை அறிந்த தோழி, “ தலைவியின் தாய் அவளை வீட்டில் காவலில் வைக்கப் போகிறாள். ஆகவே, இனிமேல் நீ அவளைக் காண இயலாது. நீ அவளை விரைவில் திருமணம் செய்துகொள்வதுதான் முறையான செயல்.” என்று தலைவனிடம் கூறுகிறாள். அதற்குத் தலைவன், “ நான் எவருக்கும் தெரியாமல் தலைவியை இரவில் சந்திக்க விரும்புகிறேன். அதற்குப் பிறகு, நான் அவளைத் திருமணம் செய்துகொள்வேன்.” என்று கூறுகிறான். தலைவனின் கூற்றுக்கு தோழியின் மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது.

கொடுங்கால் முதலைக் கோள்வ லேற்றை
வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறை
இனமீன் இருங்கழி நீந்தி நீநின்
நயனுடை மையின் வருதி யிவடன்
மடனுடை மையின் உயங்கும் யானது
கவைமக நஞ்சுண் டாஅங்
கஞ்சுவல் பெருமவென் னெஞ்சத் தானே. 
கொண்டு கூட்டு: பெரும! நீ நின் நயனுடைமையின், கொடுங்கால் முதலைக் கோள்வல் ஏற்றைவழிவழக்கு அறுக்கும் கானலம் பெருந்துறைஇனமீன் இருங்கழி நீந்தி வருதி. இவள் தன் மடன் உடைமையின் உயங்கும். யான் கவைமக நஞ்சு உண்டாங்கு என் நெஞ்சத்தான் அது அஞ்சுவல்!
அருஞ்சொற்பொருள்: கொடுங்கால் = வளைந்த கால்; கோள்வல் = கொல்லுதலில் வல்லமை பெற்ற; ற்றை – விலங்குகளின் ஆணுக்குப் பொதுப்பெயர் (இங்கு ஆண் முதலையைக் குறிக்கிறது); வழக்கு அறுதல் = போய் வருதலைத் தடுத்தல்; கானல் = கடற்கரைச் சோலை; இனமீன்மீன் இனம்; நயன் = அன்பு; மடன் = அறியாமை;  உயங்குதல் = வருந்துதல்; கவை மகவு = இரட்டைக் குழந்தைகள்; பெரும = தலைவ.
உரை: தலைவ!  நீ உனது அன்புடைமையால், வளைந்த கால்களையுடைய, கொல்லுதலில் வல்ல ஆண்முதலைவழிச்செல்வோரைச் செல்ல விடாது போய்வருதலைத் தடுக்கும் கடற்கரைச் சோலைகளையுடைய பெரிய கடற்றுறையில், திரளாக மீன்களை உடைய கரிய கழியை நீந்திக் கடந்து வருவாய். தலைவி, உன் வலிமையை  அறியாததால் வருந்துவாள். நான்  என் மனத்தினுள்ளே,  இரட்டைக் குழந்தைகள் நஞ்சுண்டால், இருவருக்காகவும் ஒரு தாய் வருந்துவது போல, நீ அவ்வாறு வருவதை நினைத்து அஞ்சுவேன்.

சிறப்புக் குறிப்பு: நீ உன் அன்பினால் தலைவியைக் காணபதற்காக  வர விரும்புகிறாய். நீ வருவதைத் தடுப்பது முறை அன்று. நீ வரும் வழியில் உனக்கு இன்னல்கள் நேரலாம். அதை எண்ணித் தலைவி வருந்துவாள். அதனால், நீ இரவில் வருவது சரி அன்று. உங்கள்  இருவருக்கும் துன்பமுண்டாகும் இந்நிலையில், இரட்டைக் குழந்தைகள் நஞ்சுண்டால், அவர்கள்  இருவருக்காகவும் இரங்கும் தாயைப் போல, நான் உங்கள் இருவருக்காகவும் வருந்துவேன். ஆகவே, ”நீ விரைவில் தலைவியைத் திருமணம் செய்துகொள்வதே சிறந்தது.” என்று தோழி தலைவனுக்கு குறிப்பால் உணர்த்துகிறாள்.