Monday, March 14, 2016

167. செவிலித்தாய் கூற்று

167. செவிலித்தாய் கூற்று

பாடியவர்: கூடலூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 166 –இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று: கடிநகர்ச் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது. (கடிநகர் – மணவீடு; இங்கு, திருமணமான பிறகு கணவனும் மனைவியும் நடத்தும் தனிக்குடித்தனத்தைக் குறிக்கிறது.)

கூற்று விளக்கம்: தலைவி ஒரு செல்வந்தர் வீட்டுப் பெண். அவள் தன் வீட்டில்  செல்லமாக வளர்ந்தவள்.  அவளுக்குச் சமைத்துப் பழக்கமில்லை. திருமணம் முடிந்தவுடன் தன் கணவனுடன் தனிக்குடித்தனம் போய்விட்டாள். ”அவளுக்குச் சமைக்கத் தெரியாதே! அவள் என்ன செய்கிறாளோ? எப்படிக் குடும்பம் நடத்துகிறாளோ?” என்று தலைவியின் தாய் வருந்துகிறாள். அப்பொழுது அங்கு வந்த தலைவியின் செவிலித்தாய் ( தலைவியை வளர்த்தவள்) தான் போய்த் தலைவி எப்படி இருக்கிறாள் என்று பார்த்துவருவதாகத் தலைவியின் தாயிடம் சொல்லிவிட்டு, தலைவியின் வீட்டிற்கு போகிறாள்.  அங்கு, தலைவி மோர்க்குழம்பு செய்வதையும், கணவனுக்கு அவள் அதைப் பரிமாறும் காட்சியையும்,  ”நீ சமைத்த மோர்க்குழம்பு மிகவும் இனிமையாக இருக்கிறது” என்று சொல்லி,  மகிழ்ச்சியோடு அவள் கணவன் உண்ணுவதையும், கணவனின் பாராட்டுதலைக் கேட்ட தலைவி புன்முறுவல் பூப்பதையும் பார்த்த செவிலித்தாய் அந்தக் காட்சியைத் தலைவியின் தாயிடம் கூறுகிறாள்.

முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே. 

கொண்டு கூட்டு: முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ, குவளை உண்கண் குய்ப்புகை கமழத், தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின், ஒள்நுதல் முகன் நுண்ணிதின் மகிழ்ந்தன்று. 

அருஞ்சொற்பொருள்: முளி = நன்றாகக் காய்ச்சிய பாலால் உண்டாக்கிய கெட்டித் தயிர்; காந்தள் = காந்தள் மலர்; கழுவுறுதல் = துடைத்தல்; கலிங்கம் = ஆடை; கழாஅது = கழுவாமல் (துவைக்காமல்); உடீஇ = உடுத்தி; உண்கண் = மை தீட்டிய கண்கள்; குய் = தாளிப்பு, கழுமல் = நிறைதல்; துழத்தல் =கலத்தல்; அட்ட = சமைத்த; தீ = இனிமை; பாகர் = குழம்பு; பாகம் = பக்குவமய்ச் செய்தது; ஒள் = ஒளி; நுதல் = நெற்றி.

உரை: கட்டித் தயிரைப் பிசைந்த, காந்தள் மலரைப் போன்ற மெல்லியவிரல்களைத் துடைத்துக் கொண்ட ஆடையைத் துவைக்காமால் உடுத்திக்கொண்டு,  குவளை மலரைப் போன்ற, மைதீட்டிய கண்களில், தாளிப்பின் புகை நிறைய, தானே துழாவிச் சமைத்த, இனிய, புளிப்பையுடைய மோர்க்குழம்பைத் தன் கணவன், இனிதென்று உண்பதனால், தலைவியின் முகம் மிக நுட்பமாகத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.


சிறப்புக் குறிப்பு:  தயிர் கட்டியாக இருந்ததால், தலைவி மோர்க்குழம்பு செய்யும் பொருட்டுத் தன் மெல்லிய விரல்களால் துழாவித் தாளிதம் செய்தாள். விரைவில் சமைக்க வேண்டுமென்று விரும்பியதால் தயிர் பிசைந்த கையைத் துடைத்த ஆடையை மாற்றிக்கொள்வதற்குத்  தலைவி மறந்தாள்.  அவள் சமைத்த உணவைத் தன் கணவன் “இனிது” என்று விரும்பி உண்டதால், தலைவியின் அகமகிழ்ச்சியை அவள் முகம் வெளிப்படுத்தியது. இயல்பாகவே அழகாக இருந்த நெற்றி, மகிழ்ச்சியால் மேலும் அழகாகத் தோன்றியது. 

166. தோழி கூற்று

166. தோழி கூற்று

பாடியவர்: கூடலூர் கிழார். சங்க காலத்தில், கூடலூர் என்ற ஓரூர், இன்று கேரள மாநிலத்தில் உள்ள பாலைக்காட்டு வட்டத்தில் இருந்தது. இப்புலவர் அந்த ஊரைச் சார்ந்தவராக இருந்திருக்கலாம் என்று ஔவை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இப்புலவர் புறநானூற்றில் இயற்றிய  ஒருபாடல் (229) மட்டுமின்றி, குறுந்தொகையில் மூன்று பாடல்களையும் (166,167, 214) இயற்றியுள்ளார்.  சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் வேண்டுகோளுக்கு இணங்கி, எட்டுத்தொகையில் உள்ள ஐங்குறுநூறு என்னும் நூலை இவர் தொகுத்ததாகக் கூறப்படுகிறது. இவர் வானவியலில் மிகவும் சிறந்த அறிஞர் என்பது அவர் இயற்றிய புறநானூற்றுப் பாடலிலிருந்து நன்கு தெரியவருகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தாய் முதலியோரின் பாதுகாவலில் வைக்கப்பட்டதால், தலைவி தலைவனோடு பழக முடியவில்லை. தலைவனைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லாததால், தலைவி வருத்தமாக இருந்தாள். அவள் வருத்தத்தைக் கண்ட தோழி, “ இந்த மரந்தையூர் நல்ல ஊராக இருந்தாலும், தனிமையில் இருப்பவர்களுக்கு அது மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை
நாரை நிரைபெயர்ந் தயிரை யாரும்
ஊரோ நன்றுமன் மரந்தை
ஒருதனி வைகிற் புலம்பா கின்றே. 

கொண்டு கூட்டு: தண்கடற் படுதிரை பெயர்த்தலின், வெண்பறை நாரைநிரை பெயர்ந்து அயிரை ஆரும். மரந்தை ஊரோ நன்றுமன். ஒருதனி வைகின் புலம்பாகின்றே. 

அருஞ்சொற்பொருள்: தண் = குளிர்ச்சி; படு திரை = தோன்றும் அலை; பறை = சிறகு; நிரை = கூட்டம்; அயிரை = அயிரை மீன்; ஆர்தல் = உண்ணுதல்; மரந்தை = சேர நாட்டிலிருந்த கடற்கரை நகரம்; ஒருதனி = தனியாக; வைகுதல் = இருத்தல்; புலம்பு = தனிமையால் வரும் வருத்தம்.
உரை: குளிர்ந்த கடலில் தோன்றும் அலைகள் மீன்களைப் இடம்பெயரச் செய்வதால்,  வெண்மையான சிறகுகளையுடைய நாரையின் கூட்டம் அங்கிருந்து  பெயர்ந்து அயிரை மீன்கள் உள்ள இடத்திற்குச் சென்று அவற்றை உண்ணும். அத்தகைய ஊராகிய மரந்தை, தலைவனோடு இருக்கும்பொழுது மிகவும் நன்றாக உள்ளது. ஆனால், தலைவனைப் பிரிந்து தனியே இருந்தால் வருத்தத்தைத் தருகிறது.


சிறப்புக் குறிப்பு:  அலைகள் அயிரை மீன்களை இடம்பெயரச் செய்தாலும், அவை இருக்கும் இடத்தே சென்று, நாரைகள் அவற்றை உண்பது போல, தாய் முதலியோர் தலைவியை வீட்டில் காவலில் வைத்திருந்தாலும் தலைவன் தலைவியிருக்குமிடத்து வந்து அவளைக் கண்டு இன்புற வேண்டுமென்பது குறிப்பு.

165. தலைவன் கூற்று

165.  தலைவன் கூற்று

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 19 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: பின்னின்ற தலைமகன், மறுக்கப்பட்டுப் பெயர்த்துங் கூடலுறு நெஞ்சிற்குச் சொல்லியது.

கூற்று விளக்கம்: தலைவன் ஒருபெண்ணைப் பார்த்தான். அவள்மீது காதல்கொண்டான். அவளைச் சந்திக்க வேண்டுமென்று மிகவும் விரும்பினான்.  அந்தப் பெண்ணின் தோழியிடம், அந்தப் பெண்ணைச் சந்திப்பதற்கு உதவி செய்யுமாறு வேண்டினான். “அவள் உன்னைச் சந்திக்க விரும்பவில்லை” என்று தோழி கூறி அவன் வேண்டுகோளை மறுத்தாள். ஆனால், அவனுக்கு அந்தப் பெண்ணின்மீது உள்ள காதல் குறையவில்லை. “நீ அவளை விரும்பினாய். அவள் உன்னை விரும்பவில்லை.; உன்னைச் சந்திக்கக்கூட அவள் மறுத்துவிட்டாள். ஆனால், நீ இப்பொழுது நாணத்தையும் மனவலிமையையும் இழந்து அவளை மீண்டும் விரும்புகிறாயே!” என்று தன் நெஞ்சை நோக்கித் தலைவன் கூறுகிறான். 


மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு
விழைந்ததன் றலையும் நீவெய் துற்றனை
அருங்கரை நின்ற உப்பொய் சகடம்
பெரும்பெய றலையவீந் தாங்கியவள்
இரும்பல் கூந்தல் இயலணி கண்டே. 

கொண்டு கூட்டு: அருங்கரை நின்ற உப்புஒய் சகடம் பெரும்பெயல் தலைய வீந்தாங்கு, இவள் இரும்பல் கூந்தல் இயல் அணி கண்டு, மகிழ்ந்ததன் தலையும் நறவு உண்டாங்கு,  விழைந்ததன் தலையும் நீ வெய்து உற்றனை.

அருஞ்சொற்பொருள்: தலையும்  = பின்னும்; நறவு = கள், மது; விழைதல் = விரும்புதல்; வெய்து = விருப்பத்தைக் கொடுப்பது; வெய்துறுதல் = விருப்புறுதல்; ஒய்தல் = செலுத்துதல்; சகடம் = வண்டி; பெயல் = மழை; தலைய = மழைபெய்து விடுதல்; வீதல் = கெடுதல், அழிதல்; இரு = கரிய; பல் = பல (மிகுந்த); இயல் = இயற்கை; அணி = அழகு.
உரை: நெஞ்சே, பலவாகத் தொகுக்கப்பட்ட இவளது கரிய கூந்தலின் இயற்கை அழகைக் கண்டு, நீ இவளை விரும்பினாய். அவள் உன்னை மறுத்தவுடன், ஏறுதற்கரிய கரையில் நின்ற, உப்பைக் கொண்டுசெல்லும் வண்டி, பெரிய மழை பொழிந்ததனால் அழிந்ததுபோல, நீ நாணத்தையும் வலிமையையும் இழந்தாய். ஒருமுறைக்  கள்ளுண்டு அறிவிழந்து களித்தவன், பிறகும்  கள்ளை உண்பதைப்போல், அவளை நீ முன்பு விரும்பியபொழுது அவள் உன்னை மறுத்தாலும், இப்பொழுது  அவளை நீ மீண்டும் விரும்புகிறாய்.

சிறப்புக் குறிப்பு: ஒருமுறை கள்ளுண்டவன் மீண்டும் கள்ளுண்ண விரும்புவதை காமமுடையவர்களின் நிலைக்கு ஒப்பிடுவது வழக்கு. இதை

             களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
             வெளிப்படுந் தோறும் இனிது”                     (குறள் 1145)
என்ற குறளிலும் காணலாம்.


(பொருள்: காமம் அலரால் (பிறருடைய பழிச்சொற்களால்) வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.)

164. காதற்பரத்தை கூற்று

164. காதற்பரத்தை கூற்று

பாடியவர்: மாங்குடி மருதனார். இவர் மாங்குடி கிழார் என்றும் அழைக்கப்பட்டார்.  இவர் காஞ்சிப் புலவன் என்றும் மதுரைக் காஞ்சிப் புலவன் என்றும் அழைக்கப்பட்டதாக, நற்றிணைக்கு உரை எழுதிய பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அவர்கள் தம்முடைய நூலில் கூறுகிறார்.  இப்புலவர் புறநானூற்றில் ஆறு பாடல்கள் (24, 26, 313, 335, 372, 396) இயற்றியதோடு மட்டுமல்லாமல், பத்துப்பாட்டிலுள்ள மதுரைக் காஞ்சியையும், அகநானூற்றில் ஒரு பாடலையும் (89), குறுந்தொகையில் மூன்று பாடல்களையும் (164, 173, 302), நற்றிணையில் இரண்டு பாடல்களையும் (120, 123) இயற்றியுள்ளார்.  ”நான் தலையாலங்கானத்துப் போரில் தோல்வியுற்றால், மாங்குடி மருதன் போன்ற புலவர்கள் என்னைப் பாடாது என் நாட்டைவிட்டு நீங்குக” என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் புறநானூற்றுப் பாடல் 72-இல் கூறுவதிலிருந்து, இவரால் பாடப்படுவதை அவன் மிகவும் பெருமையாகக் கருதினான் என்பது தெரியவருகிறது.
திணை: மருதம்.
கூற்று: காதற்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவி தன்னைப் பழித்துக் கூறினாள் என்பதை அறிந்த பரத்தை, தன் தோழியரிடம், தலைவியின் தோழியின் காதில் கேட்குமாறு, “ தலைவி  எம்மை வெறுப்பதற்குரிய குற்றம் ஏதேனும் நாம் செய்திருந்தால், கடல் தெய்வம் எம்மை வருத்துவதாகுக.” என்று கூறுகிறாள்.

கணைக்கோட்டு வாளை கமஞ்சூல் மடநாகு
துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பவ்வம் அணங்குக தோழி
மனையோள் மடமையிற் புலக்கும்
அனையே மகிழ்நற்கியா மாயினம் எனினே. 

கொண்டு கூட்டு: தோழி! மனையோள் மடமையின் புலக்கும் அனையேம்  மகிழ்நற்கு யாம் ஆயினம் எனின், கணைக்கோட்டு வாளை கமம்சூல் மடநாகு துணர் தேக்கொக்கின் தீம்பழம் கதூஉம், தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது தண்பெரும் பவ்வம் அணங்குக!

அருஞ்சொற்பொருள்: கணை = திரண்ட; கோடு = கொம்பு; வாளை = வாளை மீன்; கமம் = நிறைந்த; சூல் = கருப்பம்; மடம் = இளமை; நாகு = பெண்மை ( இங்கு பெண்மீனைக் குறிக்கிறது); துணர் = கொத்து; தேக்கொக்கு = தேமா (இனிய பழங்களையுடைய மாமரம்); தீ = இனிமை; கதூஉம் = கவ்வும்; தொன்று = பழைய; முதிர் = மூப்பு; தொன்றுமுதிர் = மிகப்பழைய; குணாது = கிழக்கே; தண் = குளிர்ச்சி; பவ்வம் = கடல்; அணங்கு = வருத்தம்; புலத்தல் = வெறுத்தல்; மகிழ்நன் = மருதநிலத் தலைவன்.
உரை: தோழி! தலைவி தன் அறியாமையால் எம்மை வெறுக்கின்றாள். அவள் எம்மை வெறுக்கும் அளவுக்கு நாம் மருதநிலத் தலைவனுக்குத் தீங்கிழைத்திருப்போமானால்,  திரண்ட கொம்பையுடைய, நிறைந்த கருப்பத்தையுடைய இளம் பெண் வாளை மீன், தேமாவின் உதிர்ந்த இனிய பழத்தைக் கவ்வும் இடமாகிய, மிகப் பழைய வேளிரது குன்றூருக்குக் கிழக்கே உள்ள, குளிர்ச்சியையுடைய பெரிய கடல், எம்மை வருத்துவதாக.
    

சிறப்புக் குறிப்பு:  குளத்தில் தானாகவே உதிர்ந்து விழுந்த மாங்கனியை வாளைமீன் கவ்வி உண்டது என்பது உள்ளுறையாகத்  தன்னை நாடி வந்த தலைவனோடு, பரத்தை இன்பம் நுகர்ந்தாள் என்பதைக் குறிக்கிறது. மாம்பழம் தலைவனுக்கும், வாளைமீன் பரத்தைக்கும், உண்ணுதல் இன்பம் நுகர்வதற்கும் உவமை. “கடல் எம்மை வருத்துவதாக” என்றது “கடல் தெய்வம் எம்மை வருத்துவதாக” என்ற பொருளில் கூறப்பட்டது.

163. தலைவி கூற்று

163. தலைவி கூற்று

பாடியவர்: அம்மூவனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 49 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: தன்னுட் கையாறெய்திடு கிளவி. (கையாறு - செயலறுதல்.) 
கூற்று விளக்கம்: தலைவனது பிரிவினால் துன்புற்ற தலைவி காமமிகுதியால் செயலற்று, கடலை நோக்கி, “நள்ளிரவிலும் உன் குரல் கேட்கிறதே! உன்னை யார் வருத்தமடையச் செய்தது?” என்று வருந்திக் கூறுகிறாள்.


யாரணங் குற்றனை கடலே பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
வெள்வீத் தாழை திரையலை
நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே. 

கொண்டு கூட்டு: கடலே! பூழியர் சிறுதலை வெள்ளைத் தோடு பரந்தன்ன,  மீன் ஆர் குருகின் கானலம் பெருந்துறை வெள்வீத்தாழை திரையலை நள்ளென் கங்குலும் கேட்கு நின் குரலே! யார் அணங்குற்றனை?

அருஞ்சொற்பொருள்: அணங்கு = வருத்தம்; பூழி = ஒரு நாடு ( ஆடுகள் மிகுந்த நாடு); வெள்ளை = வெள்ளாடு; தோடு = தொகுதி (கூட்டம்) ; பரத்தல் = பரவுதல் ; ஆர்தல் = உண்ணுதல்; குருகு = கொக்கு (நாரை); கானல் = கடற்கரைச் சோலை; வீ = பூ; அலைக்கும் = அசைக்கும்; நள் = நடு,செறிவு; கங்குல் = இரவு.

உரை: கடலே! பூழி நாட்டாரது, சிறிய தலையையுடைய, வெள்ளாட்டுக் கூட்டம் பரவினாற்போன்ற, மீனை உண்ணும் கொக்குகள் பரவி இருக்கும்  சோலை சூழ்ந்த பெரிய நீர்த்துறையில், வெண்ணிறமான பூவையுடைய தாழையை, அலைகள் மோதி அசைக்கின்ற, நடு இரவிலும்,  உன் குரல் கேட்கிறது. நீ யாரால் வருத்தம் அடைந்தாய்?


162. தலைவன் கூற்று

162.  தலைவன் கூற்று

பாடியவர்: கருவூர்ப் பவுத்திரனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: முல்லை.
கூற்று: வினைமுற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பானாய் உரைத்தது.

கூற்று விளக்கம்: தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், தான் மேற்கொண்ட செயல்களை முடித்துத் திரும்பி வருகிறான். அவன் திரும்பி வரும்பொழுது, வழியில் முல்லைக்கொடிகளிலில் இருந்த அரும்புகளைப் பார்க்கிறான். அவை தன்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பதுபோல் அவனுக்குத் தோன்றுகிறது. அவன்  முல்லையைப் பார்த்து, “நீ தனிமையில் இருப்பவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுவது தகுமோ?” என்று கேட்கிறான்.

கார்புறத் தந்த நீருடை வியன்புலத்துப்
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை
முல்லை வாழியோ முல்லை நீநின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே. 

கொண்டு கூட்டு: முல்லை வாழியோ, முல்லை! கார் புறந்தந்த நீருடை வியன்புலத்துப்
பலர் புகுதரூஉம் புல்லென் மாலை நீ நின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை!
தமியோர் மாட்டே நகுவை போலக் காட்டல் மற்றிது தகுமோ. 

அருஞ்சொற்பொருள்: புறந்தருதல் = பாதுகாத்தல்; வியன் = அகன்ற; வியன்புலம் = அகன்ற நிலம்; புகுதரும் = புகும்; புல்லென் = ஒளியிழந்த; முகை = மொட்டு; முறுவல் = புன்னகை; மற்று – அசைச்சொல்; தமியோர் = தனித்திருப்போர்.
உரை: முல்லையே! நீ வாழ்வாயாக! முல்லையே, கார்காலத்து மழையால் பாதுக்காப்பட்ட, நீரையுடைய அகன்ற நிலத்தின்கண், பலரும் தம் வீடுகளுக்குச் செல்லும் ஒளியிழந்த மாலைக் காலத்தில், நீ உன் சிறிய வெண்ணிறமான அரும்புகளால் புன்னகை கொண்டாய். அது, தன் துணையைப் பிரிந்து தனிமையுடன் இருப்பவர்களைப் பார்த்து நீ எள்ளி நகைப்பது போல் உள்ளது. இது உனக்குத் தகுமோ?


சிறப்புக் குறிப்பு: கார்காலம் தொடங்குவதற்கு முன்பே வந்துவிடுவதாகத் தலைவியிடம் தலைவன் கூறிச் சென்றான். இப்பொழுது கார்காலம் வந்துவிட்டது. மழையும் பெய்ய ஆரம்பித்துவிட்டது. தான் கார்காலத்திற்கு முன்னதாகவே வராததால் முல்லை தன்னைப் பார்த்துச் சிரிப்பதாக அவன் நினைக்கிறான். 

161. தலைவி கூற்று

161. தலைவி கூற்று

பாடியவர்: நக்கீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 78 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்பு மிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: ஒருநாள் இரவு தலைவன் தலைவியைச் சந்திக்க வந்தான். அவன் வந்ததை அறிந்தும், வீட்டுக்கு வெளியே வந்து, தலைவியால் அவனைக் காண முடியவில்லை. மறுநாள் இரவு தலைவன் அவளைக் காண வந்திருக்கிறான் என்பதை அறிந்த தலைவி, “நேற்று இரவு மழை பெய்தபொழுது தலைவன் வந்தான். அப்பொழுது என் அன்னை தூங்காமல் விழித்துக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில், தலைவன் வந்து வீட்டுக்கு வெளியே நின்றான். என்னால் அவனைக் காண முடியவில்லை. ஐயோ! அவன் என்ன நினைத்தானோ? என்ன செய்தானோ? ” என்று தலைவனின் காதில் கேட்குமாறு தோழியிடம் கூறுகிறாள். 

பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
கழுதுகண் பனிப்ப வீசும் அதன்றலைப்
புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி
அன்னா வென்னும் அன்னையு மன்னோ
என்மலைந் தனன்கொல் தானே தன்மலை
ஆரம் நாறு மார்பினன்
மாரி யானையின் வந்துநின் றனனே. 

கொண்டு கூட்டு: பொழுதும் எல்லின்று;  பெயலும் ஓவாது, கழுது கண்பனிப்ப வீசும். அதன்தலைப் புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி அன்னையும் ”அன்னா” என்னும்.
தன்மலை ஆரம் நாறு மார்பினன் மாரி யானையின் வந்து நின்றனனே. அன்னோ! தான் என் மலைந்தனன் கொல்?

அருஞ்சொற்பொருள்: பொழுது = கதிரவன்; எல் = ஓளி; பெயல் = மழை; ஓவாது =  ஓயாமல்; கழுது = பேய்; பனித்தல் = நடுங்குதல்; வீசும் = வேகமாகப் பெய்யும்; தலை = மேல்; புல்லுதல் = தழுவுதல்; அன்னா = அன்னையே (அன்னையே அன்பது மருவி அன்னா என்று வந்தது.); அன்னோ – இரக்கக் குறிப்பு; மலைதல் = செய்தல்; ஆரம் = சந்தனம்; மாரி யானை = மழையில் நனைந்த யானை.
உரை:  கதிரவனின் ஒளி குறைந்து இருள் சூழ்ந்தது.  பேய்கள் அடிக்கடித் தங்கள் கண்களை இமைத்து நடுங்கும்படி, மழை ஓயாமல் வேகமாகப் பெய்தது. அதற்கும் மேலே, என் தாய், புலிப்பல் கோத்த தாலியை அணிந்த தன் மகனைத் (என் தம்பியைத்)  தழுவிக்கொண்டு, ”அன்னையே” என்று என்னை அழைத்தாள். அப்பொழுது,  தனது மலையில் விளைந்த சந்தனம் மணக்கின்ற மார்பையுடைய தலைவன், மழையில் நனைந்த யானையைப் போல வீட்டுக்கு வெளியே வந்து நின்றான்; அந்தோ! அவன் பின்னர் என்ன செய்தானோ?


சிறப்புக் குறிப்பு: இரவில் பேய்கள் அச்சமின்றித் திரிவதாக ஒரு நம்பிக்கை அக்காலத்தில் நிலவியது. ”கழுது கண்பனிப்ப வீசும்” என்றது மழையின் கொடுமையைக் குறிக்கிறது. பொன்னாலான  சங்கிலியில் புலிப்பல்லை அமைத்துச் சிறுவர்கள் அணிவது வழக்கம். புதல்வனைத் தழுவிக்கொண்டிருந்த தாய் தன்னையும் அழைத்ததால், தான் தாய்க்கு அருகில் இருக்க வேண்டியதாயிற்று என்று தலைவி தலைவனுக்குத் தெரியப்படுத்துகிறாள்.  தலைவன் வழக்கமாக அணியும் சந்தனத்தின் மணத்தைத் தலைவி அறிந்தவளாதலால், அவன் வெளியே வந்து நின்றவுடன், அந்தச் சந்தன மணத்தால் அவள் தலைவனின் வருகையை அறிந்தாள். கொல், என்பது ஐயத்தைக் குறிக்கிறது. தான், ஏ ஆகிய இரண்டும் அசைச்சொற்கள்.