Saturday, March 26, 2016

172. தலைவி கூற்று

172.  தலைவி கூற்று

பாடியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார்.   இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 30 – இல் காணலாம்.  
திணை: நெய்தல்.
கூற்று: வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவால் தலைவி வருந்துவாள் என்று எண்ணித் தோழி அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள். ஆனால், தலைவி பிரிவால் நான் வருந்துவதாக நீ நினைக்கிறாய். நான் வருந்துவது உண்மைதான். அதைவிட, என்னைப் பிரிந்து சென்ற தலைவர் எவ்வாறு துன்பப்படுகிறாரோ என்று நினைத்து என் நெஞ்சு இடைவிடாமல் வருந்துகிறது என்று கூறுகிறாள்.

தா அம் சிறை நொப்பறை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்
தமியர் ஆக இனியர் கொல்லோ?
ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
உலை வாங்கு மிதிதோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே.

கொண்டு கூட்டு: தாஅ அம் சிறை நொ பறை வாவல், பழுமரம் படரும் பையுள் மாலை எமியம் ஆக ஈங்குத் துறந்தோர், தமியராக இனியர் கொல்லோ? ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த உலைவாங்கும் மிதிதோல் போலத் தலைவரம்பு அறியாது, என் நெஞ்சு வருந்தும்.

அருஞ்சொற்பொருள்: தா = வலிமை; சிறை = இறகு; நொய்ம்மைமென்மை; பறை = பறத்தல்; வாவல் = வௌவால்; படர்தல் = செல்லுதல்; பையுள் = துன்பம்; எமி = தனிமை; தமியர் = தனியராய் இருப்போர்; யாத்த = அமைத்த; உலை = கொல்லர்களின் ஊதுலை; வாங்குதல் = மூச்சு முதலியன உட்கொள்ளுதல்; மிதிதோல் = துருத்தி; தலைவரம்பு = எல்லை.

உரை: தோழி! வலிமையையுடைய அழகிய சிறகையும்,  மென்மையாகப் பறக்கும் இயல்பையும் உடைய வௌவால்கள், பழுத்த மரங்களை நோக்கிச் செல்லும், தனியாக இருப்பவர்களுக்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், நாம் தனியாக இருக்கும்படி,  இங்கு எம்மைவிட்டுப் பிரிந்த தலைவர், தாம் தனிமையாக இருப்பதால் மகிழ்ச்சியாக இருப்பாரோ? ஏழு ஊரில் உள்ளவர்களுக்குப் பொதுவாகப் பயன்படும்படி, ஓர் ஊரில் அமைத்த, கொல்லன் உலையில் பொருத்திய துருத்தியைப் போல, எல்லையில்லாத் துன்பத்தை அடைந்து என் நெஞ்சு வருந்துகிறது.


சிறப்புக் குறிப்பு: ஏழு ஊரில் உள்ளவர்கள் கொடுக்கும் வேலையைச் செய்து முடிப்பதற்கு ஒரே ஒரு உலையில் உள்ள துருத்தி இடைவிடாமல் வேலை செய்வதுபோல், என் நெஞ்சு இடைவிடாமல் தலைவரை நினைத்து வருந்துகிறது என்று தலைவி கூறுகிறாள்.

171. தலைவி கூற்று

171. தலைவி கூற்று

பாடியவர்: பூங்கணுத்திரையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 48 – இல் காணாலாம்.
திணை: மருதம்.
கூற்று: வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்குத் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியின் காதலைப் பற்றி அறியாத பெற்றோர் அவள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். அவளைப் பெண் கேட்க சிலர் வந்தனர். இதையெல்லாம் கண்ட தோழி தலைவிக்குத் தலைவன் அல்லாத வேறு எவரோடாவது திருமணம் நடந்து விடுமோ?” என்று கவலைப்படுகிறாள். தோழியின் கவலையைக் கண்ட தலைவி, இந்த முயற்சிகளால் எவ்விதப் பயனும் இல்லை என்று தோழியிடம் கூறுகிறாள்.

காண் இனி வாழி தோழி யாணர்க்
கடும்புனல் அடைகரை நெடுங்கயத்து இட்ட
மீன்வலை மாப் பட்டாஅங்கு
இது மற்று எவனோ நொதுமலர் தலையே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! இனி காண்! யாணர்க் கடும்புனல் அடைகரை நெடுங்கயத்து இட்ட மீன்வலை மா பட்டாஅங்கு நொதுமலர் தலை!  இது மற்று எவனோ

அருஞ்சொற்பொருள்: இனி = இப்பொழுது; யாணர் = புது வருவாய்; கடும் புனல் = விரைந்து வரும் நீர் (வெள்ளம்); அடைகரை = அடைந்தகரை; கயம் = குளம்; நெடுங்கயம் = ஆழமான குளம்; மா = விலங்கு; மற்றுஅசை நிலை; நொதுமலர் = அயலார்; தலை = இடம்.


உரை: தோழி! நீ வாழ்க! இப்பொழுது பார்! புதிதாக விரைந்து வரும் நீரும்  அதற்கேற்ற கரையையுமுடைய, ஆழமான குளத்தில் மீனுக்காக வீசிய வலையில் விலங்கு அகப்பட்டதுபோல், தலைவனைத் தவிர வேறு ஒருவரிடத்து என்னைத் திருமணம் செய்விக்கும் இந்த முயற்சி என்ன பயனைத் தரப்போகிறது? 

170. தலைவி கூற்று

170. தலைவி கூற்று

பாடியவர்: கருவூர்கிழார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான்.  தலைவி தனிமையில் வருந்துவாள் என்று எண்ணித் தோழி அவளைக் காணவந்தாள். ” தலைவர் உன்னைவிட்டுப் பிரிந்திருப்பதால் பலரும் பலவிதமாகப் பேசுகிறார்கள். அதைப் பற்றி நீ கவலைப் படாதேஎன்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். தலைவி, “எங்கள் காதல் விதிவசத்தால் தோன்றியது. அதற்கு என்றும் அழிவில்லை. யார் எதை வேண்டுமானலும் பேசட்டும். அதைப் பற்றி என்க்குக் கவலை இல்லைஎன்று தோழியிடம் கூறுகிறாள்.


பலவும் கூறுகவஃ தறியா தோரே
அருவி தந்த நாட்குர லெருவை
கயனா டியானை கவள மாந்தும்
மலைகெழு நாடன் கேண்மை
தலைபோ காமைநற் கறிந்தனென் யானே.

கொண்டு கூட்டு: அருவி தந்த நாட்குரல் எருவை  கயம் நாடு யானை கவளம் மாந்தும்  மலைகெழு நாடன் கேண்மை  தலைபோகாமை யான் நன்கு அறிந்தனென்.  அஃது அறியாதோர் பலவும் கூறுக

அருஞ்சொற்பொருள்: கெழு = பொருந்திய; நாள் குரல் = புதிய கொத்து; எருவை = கொறுக்காந்தட்டை (நாணல்); கயம் = குளம்; நாடும் = ஆராயும்; கவளம் = வாயளவு கொண்ட உணவு; மாந்துதல் = உண்ணூதல்; கேண்மை = நட்பு; தலைபோதல் = பெருங்கேடுறுதல், முடிதல், அழிதல்; தலைபோகாமை = கெடாமை; நற்கு = நன்கு.
உரை: தோழி! அருவியால் விளைந்த புதிய கொத்தாக இருக்கும் கொறுக்காந்தட்டையை, ஆழமான நீர்நிலையை ஆராய்கின்ற யானை, கவளமாக உண்ணும். அத்தகைய,  மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனது நட்பு, கெடாமையை  நான் நன்றாக அறிவேன். அதனை, அறியாதவர்கள்தான் பலவிதமாகப் பேசுவார்கள்.

சிறப்புக் குறிப்பு:  அருவியை ஊழிற்கு உவமை கூறுவது மரபு. “நீர்வழிப் படூஉம் புணைபோலாருயிர் முறைவழிப்படூஉம்என்று கணியன் பூன்குன்றனார் புறநானூற்றுப் பாடல் 192 – இல் கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.


குளத்தை நாடிச் செல்லும் யானை, எவ்வித முயற்சியும் இல்லாமல், அருவியின் நீரால் விளைந்த கொறுக்கந்தட்டையை உண்டதைப் போல, விதிவசத்தால் நானும் தலைவனும் சந்தித்துக் காதலித்தோம். எங்கள் காதல் என்றும் அழியாதுதலைவன் என்னை விரைவில்  திருமணம் செய்துகொள்வான். இதை அறியாதவர்கள் பலவாறாகப் பேசுவார்கள்என்று தலைவி கூறுகிறாள்.

169. தலைவி கூற்று

169. தலைவி கூற்று

பாடியவர்: வெள்ளிவீதியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 29 - இல் காணலாம்.
திணை: மருதம்.
கூற்று -1:  கற்புக்காலத்துத் தெளிவிடை விலங்கியது.  (விலங்கியது = மாறுபட்டது)
கூற்று - 2: இனி, தோழி வரைவு நீட்டித்தவழி வரைவுகடாயதூஉம் ஆம்.
கூற்று விளக்கம் -1: கணவன் பரத்தையரோடு தொடர்பு கொண்டான் என்று எண்ணி மனைவி அவனோடு ஊடல் கொண்டாள். தனக்குப் பரத்தையரோடு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அவன் மிகத் தெளிவிவாகக் கூறிய பிறகும், அவள் அவனை நம்பாமல், “நான் என் உயிரையே வெறுக்கிறேன். நான் உன்னோடு வாழாமல் இறப்பதே நல்லதுஎன்று கூறுகிறாள்.
கூற்று விளக்கம் -2: தலைவன் திருமணம் செய்துகொள்வதற்குக் காலம் தாழ்த்துகிறான். அதனால் தலைவி வருத்தம் அடைந்தாள். அவள் வருத்தத்தை அறிந்த தோழி, “நீ திருமணம் செய்து கொள்வதற்குக் காலம் கடத்துகிறாய். நீ அவள் நலனை நுகர்ந்தாய். இனி, உன்னைத் திருமணம் செய்துகொள்ளாமலே அவள் உயிர் நீங்குவதாகுகஎன்று தலைவனிடம் கூறுகிறாள்.

சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற்
றெற்றென இறீஇயரோ ஐய மற்றியாம்
நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே
பாணர், பசுமீன் சொரிந்த மண்டைபோல
எமக்கும் பெரும்புல வாகி
நும்மும் பெறேஎம் இறீஇயரெம் முயிரே. 

கொண்டு கூட்டு: ஐய! யாம் நும்மொடு நக்க வால்வெள் எயிறு சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற் தெற்றென இறீஇயரோ!  பாணர் பசுமீன் சொரிந்த மண்டைபோல எமக்கும் பெரும்புலவு ஆகி நும்மும் பெறேஎம், எம் உயிர் இறீஇயர்!
அருஞ்சொற்பொருள்: சுரம் =பாலைநிலம்; கல் = மலை; கோடு = யானையின் தந்தம்; தெற்றென = விரைவாக; இறீஇயர் = கெடுவதாக ( முறிந்து போவனவாக, அழிவதாக); மற்றுஅசை; நக்க = சிரித்த; வால் = தூய்மை, வெண்மை; எயிறு = பல்; மண்டை = இரப்பவர்கள் பயன்படுத்தும் பாத்திரம், வாயகன்ற பாத்திரம்; புலவு = புலால் நாற்றம்; புலவுதல் = வெறுத்தல்.
உரை: ஐய! உம்மோடு மகிழ்ந்து சிரித்த என்னுடைய தூய வெண்மையான பற்கள், பாலை நிலத்தில் செல்லும் யானையின், மலையைக் குத்திய கொம்பைப் போல, விரைவாக, முறியட்டும்.  எனது உயிர், பாணர் தாம் பிடித்த பச்சை மீனை வைத்திருகிகும் பாத்திரத்தைப் போல, எனக்குப் பெரிய வெறுப்பைத் தந்து, உம்மையும் நான் பெறாமல் அழியட்டும்.

சிறப்புக் குறிப்பு: நாம் முன்பு அன்போடு மகிழ்ந்து சிரித்துப் பழகினோமே! அதை எல்லாம் மறந்து என்னிடம் கோபித்துக் கொள்கிறாயேஎன்று தலைவன் கூறியதற்குத், தலைவி,  “அவ்வாறு உம்மோடு மகிழ்ந்து சிரித்த என் பற்கள் முறியட்டும்என்று கூறியதாகவும் கருதலாம். ”வால்வெள் எயிறுஎன்பதற்குத்தூய வெண்மையான பற்கள்அல்லதுமிகவும் வெண்மையான பற்கள்என்று பொருள்கொள்ளலாம். இது ஒருபொருட் பன்மொழிக்கு எடுத்துக்காட்டு.

முதற் கருத்து: தலைவனின் பரத்தமையால் சினங்கொண்ட தலைவி, “பாணர் மீன் பிடித்துத் தமக்குரிய பாத்திரங்களில் போட்டு வைத்ததால் அப்பாத்திரம் மீன் நாற்றத்தால் வேறு எதற்கும் பயன்படாதது போல,  என் உயிர் எனக்கே வெறுப்புத் தருவதாயிற்று; உமக்கும் நான் இனிப் பயன்பட மாட்டேன். ஆகவே, என் உயிர் போகட்டும்என்று தலைவனை நோக்கிக் கூறுவதாகத் தோன்றுகிறது.


 இரண்டாவது கருத்து: ”நீ இன்னும் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்றாய். நீ தலைவியின் நலனை நுகர்ந்தாய்; அவள் உன்னை அடைய மாட்டாள் போலத் தோன்றுகிறது. ஆகவே, இனி அவள் வாழ்ந்து என்ன பயன்?. அவள் உயிர் போகட்டும்என்று தோழி கூறியதாகவும், அவ்வாறு கூறினால், தலைவன் தலைவியை விரைவில் மணந்துகொள்வான் என்று தோழி கருதுவதாகவும் பொருள் கொள்ளலாம். இந்தக் கருத்தைவிட, முதற்கருத்து பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

Monday, March 14, 2016

168. தலைவன் கூற்று

168. தலைவன் கூற்று

பாடியவர்: சிறைக்குடி யாந்தையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 56-இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: பொருள்வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவியைப் பிரிந்து, பொருள் தேடச் செல்லத் துணிந்த தன் நெஞ்சை நோக்கி, “தலைவியைப் பிரிய முடியவில்லை. பிரிந்தால் உயிர் வாழ முடியாதுஎன்று தலைவன் கூறுகிறான்.


மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை
இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து
பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன
நறுந்தண் ணியளே நன்மா மேனி
புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள்
 
மணத்தலுந் தணத்தலு மிலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே. 

கொண்டு கூட்டு: நல் மாமேனி  மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து பெரும்பெயல் விடியல் விரித்துவிட்டன்ன,
நறுந்தண்ணியள் புனற்புணை அன்ன சாய் இறைப் பணைத்தோள் மணத்தலும் தணத்தலும் இலம்பிரியின் வாழ்தல் அதனினும் இலமே. 

அருஞ்சொற்பொருள்: மாரி = மழை; பித்திகம் = பிச்சிப்பூ; கொழுமுகை = கொழுவிய முதிர்ந்த மொட்டு; இரு = பெரிய; பனம் = பனை; பொதிந்து = மூடி; பெயல் = மழை; விடியல் = விடியற்காலம்; நறுமை = மணம்; தண் = குளிர்ச்சி; நல் = நல்ல; மா = கருமை; புனல் = நீர்; புணை = தெப்பம்; சாய்தல் = மெலிதல்; இறை =உடலுறுப்பின் மூட்டுவாய் (மணிக்கட்டு); பணை = மூங்கில்; மணத்தல் = கூடுதல்; தணத்தல் = பிரிதல்.


உரை:, தலைவி, நல்ல கருநிற மேனி உடையவள்.  அவள், மழைக்காலத்தில் மலரும் பிச்சியின், நீர் ஒழுகும் கொழுவிய முதிர்ந்த மொட்டுக்களில் பலவற்றைப்  பெரிய பசுமையான பனங்குடையில் ஒருங்கே வைத்து மூடி, பெருமழை பெய்யும்  விடியற்காலத்தில், விரித்துவிட்டாற் போன்ற,  நறுமணமும் குளிர்ச்சியும் உடையவள். என் காதல் வெள்ளத்தைக் கடந்து செல்லப் பயன்படும் தெப்பம் போன்றவள். அழகிய, மெல்லிய முன்கையையும், மூங்கில் போன்ற தோளையும் உடைய அவளைத் தழுவுந்தோறும் பிரிய முடியவில்லை. அவளைவிட்டுப் பிரிந்தால் உயிர் வாழ்தலும் இல்லை.

167. செவிலித்தாய் கூற்று

167. செவிலித்தாய் கூற்று

பாடியவர்: கூடலூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 166 –இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று: கடிநகர்ச் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது. (கடிநகர்மணவீடு; இங்கு, திருமணமான பிறகு கணவனும் மனைவியும் நடத்தும் தனிக்குடித்தனத்தைக் குறிக்கிறது.)

கூற்று விளக்கம்: தலைவி ஒரு செல்வந்தர் வீட்டுப் பெண். அவள் தன் வீட்டில்  செல்லமாக வளர்ந்தவள்அவளுக்குச் சமைத்துப் பழக்கமில்லை. திருமணம் முடிந்தவுடன் தன் கணவனுடன் தனிக்குடித்தனம் போய்விட்டாள். ”அவளுக்குச் சமைக்கத் தெரியாதே! அவள் என்ன செய்கிறாளோ? எப்படிக் குடும்பம் நடத்துகிறாளோ?” என்று தலைவியின் தாய் வருந்துகிறாள். அப்பொழுது அங்கு வந்த தலைவியின் செவிலித்தாய் ( தலைவியை வளர்த்தவள்) தான் போய்த் தலைவி எப்படி இருக்கிறாள் என்று பார்த்துவருவதாகத் தலைவியின் தாயிடம் சொல்லிவிட்டு, தலைவியின் வீட்டிற்கு போகிறாள்அங்கு, தலைவி மோர்க்குழம்பு செய்வதையும், கணவனுக்கு அவள் அதைப் பரிமாறும் காட்சியையும்,  ”நீ சமைத்த மோர்க்குழம்பு மிகவும் இனிமையாக இருக்கிறதுஎன்று சொல்லி,  மகிழ்ச்சியோடு அவள் கணவன் உண்ணுவதையும், கணவனின் பாராட்டுதலைக் கேட்ட தலைவி புன்முறுவல் பூப்பதையும் பார்த்த செவிலித்தாய் அந்தக் காட்சியைத் தலைவியின் தாயிடம் கூறுகிறாள்.

முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே. 

கொண்டு கூட்டு: முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ, குவளை உண்கண் குய்ப்புகை கமழத்தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்ஒள்நுதல் முகன் நுண்ணிதின் மகிழ்ந்தன்று. 

அருஞ்சொற்பொருள்: முளி = நன்றாகக் காய்ச்சிய பாலால் உண்டாக்கிய கெட்டித் தயிர்; காந்தள் = காந்தள் மலர்; கழுவுறுதல் = துடைத்தல்; கலிங்கம் = ஆடை; கழாஅது = கழுவாமல் (துவைக்காமல்); உடீஇ = உடுத்தி; உண்கண் = மை தீட்டிய கண்கள்; குய் = தாளிப்பு, கழுமல் = நிறைதல்; துழத்தல் =கலத்தல்; அட்ட = சமைத்த; தீ = இனிமை; பாகர் = குழம்பு; பாகம் = பக்குவமய்ச் செய்தது; ஒள் = ஒளி; நுதல் = நெற்றி.

உரை: கட்டித் தயிரைப் பிசைந்த, காந்தள் மலரைப் போன்ற மெல்லியவிரல்களைத் துடைத்துக் கொண்ட ஆடையைத் துவைக்காமால் உடுத்திக்கொண்டு,  குவளை மலரைப் போன்ற, மைதீட்டிய கண்களில், தாளிப்பின் புகை நிறைய, தானே துழாவிச் சமைத்த, இனிய, புளிப்பையுடைய மோர்க்குழம்பைத் தன் கணவன், இனிதென்று உண்பதனால், தலைவியின் முகம் மிக நுட்பமாகத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.


சிறப்புக் குறிப்பு:  தயிர் கட்டியாக இருந்ததால், தலைவி மோர்க்குழம்பு செய்யும் பொருட்டுத் தன் மெல்லிய விரல்களால் துழாவித் தாளிதம் செய்தாள். விரைவில் சமைக்க வேண்டுமென்று விரும்பியதால் தயிர் பிசைந்த கையைத் துடைத்த ஆடையை மாற்றிக்கொள்வதற்குத்  தலைவி மறந்தாள்அவள் சமைத்த உணவைத் தன் கணவன்இனிதுஎன்று விரும்பி உண்டதால், தலைவியின் அகமகிழ்ச்சியை அவள் முகம் வெளிப்படுத்தியது. இயல்பாகவே அழகாக இருந்த நெற்றி, மகிழ்ச்சியால் மேலும் அழகாகத் தோன்றியது

166. தோழி கூற்று

166. தோழி கூற்று

பாடியவர்: கூடலூர் கிழார். சங்க காலத்தில், கூடலூர் என்ற ஓரூர், இன்று கேரள மாநிலத்தில் உள்ள பாலைக்காட்டு வட்டத்தில் இருந்தது. இப்புலவர் அந்த ஊரைச் சார்ந்தவராக இருந்திருக்கலாம் என்று ஔவை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இப்புலவர் புறநானூற்றில் இயற்றிய  ஒருபாடல் (229) மட்டுமின்றி, குறுந்தொகையில் மூன்று பாடல்களையும் (166,167, 214) இயற்றியுள்ளார்.  சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் வேண்டுகோளுக்கு இணங்கி, எட்டுத்தொகையில் உள்ள ஐங்குறுநூறு என்னும் நூலை இவர் தொகுத்ததாகக் கூறப்படுகிறது. இவர் வானவியலில் மிகவும் சிறந்த அறிஞர் என்பது அவர் இயற்றிய புறநானூற்றுப் பாடலிலிருந்து நன்கு தெரியவருகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தாய் முதலியோரின் பாதுகாவலில் வைக்கப்பட்டதால், தலைவி தலைவனோடு பழக முடியவில்லை. தலைவனைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லாததால், தலைவி வருத்தமாக இருந்தாள். அவள் வருத்தத்தைக் கண்ட தோழி, “ இந்த மரந்தையூர் நல்ல ஊராக இருந்தாலும், தனிமையில் இருப்பவர்களுக்கு அது மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறதுஎன்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை
நாரை நிரைபெயர்ந் தயிரை யாரும்
ஊரோ நன்றுமன் மரந்தை
ஒருதனி வைகிற் புலம்பா கின்றே. 

கொண்டு கூட்டு: தண்கடற் படுதிரை பெயர்த்தலின், வெண்பறை நாரைநிரை பெயர்ந்து அயிரை ஆரும். மரந்தை ஊரோ நன்றுமன். ஒருதனி வைகின் புலம்பாகின்றே. 

அருஞ்சொற்பொருள்: தண் = குளிர்ச்சி; படு திரை = தோன்றும் அலை; பறை = சிறகு; நிரை = கூட்டம்; அயிரை = அயிரை மீன்; ஆர்தல் = உண்ணுதல்; மரந்தை = சேர நாட்டிலிருந்த கடற்கரை நகரம்; ஒருதனி = தனியாக; வைகுதல் = இருத்தல்; புலம்பு = தனிமையால் வரும் வருத்தம்.
உரை: குளிர்ந்த கடலில் தோன்றும் அலைகள் மீன்களைப் இடம்பெயரச் செய்வதால்,  வெண்மையான சிறகுகளையுடைய நாரையின் கூட்டம் அங்கிருந்து  பெயர்ந்து அயிரை மீன்கள் உள்ள இடத்திற்குச் சென்று அவற்றை உண்ணும். அத்தகைய ஊராகிய மரந்தை, தலைவனோடு இருக்கும்பொழுது மிகவும் நன்றாக உள்ளது. ஆனால், தலைவனைப் பிரிந்து தனியே இருந்தால் வருத்தத்தைத் தருகிறது.


சிறப்புக் குறிப்பு:  அலைகள் அயிரை மீன்களை இடம்பெயரச் செய்தாலும், அவை இருக்கும் இடத்தே சென்று, நாரைகள் அவற்றை உண்பது போல, தாய் முதலியோர் தலைவியை வீட்டில் காவலில் வைத்திருந்தாலும் தலைவன் தலைவியிருக்குமிடத்து வந்து அவளைக் கண்டு இன்புற வேண்டுமென்பது குறிப்பு.