Wednesday, March 8, 2017

316. தலைவி கூற்று

316.  தலைவி கூற்று
பாடியவர்: தும்பிசேர் கீரனார்.
திணை: நெய்தல்.
கூற்று : "வரைவிடை வேறுபடுகின்றாய்" என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அதனால் தலைவி வருத்தத்துடன் இருக்கிறாள். அவள் கைவளையல்கள் நெகிழ்ந்து, உடல் மெலிந்து காணப்படுகிறாள். தலைவியின் நிலையைக் கண்ட தோழி, “தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் நீ மிகவும் வருந்துகிறாய் போலும். எப்படியாவது, பிரிவைப் பொறுத்துகொள்ள முயற்சி செய். தலைவன் விரைவில் வந்துவிடுவான்.” என்று ஆறுதல் கூறுகிறாள். “தலைவன் திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற காலம் கடந்தது. ஆனால், அவன் இன்னும் வரவில்லை. அவன் என்னைவிட்டுப் பிரிய மாட்டேன் என்று எனக்கு அளித்த உறுதிமொழிகள் எல்லாம் பொய்யாயின. என் வருத்தத்தின் காரணத்தை என் தாய் அறிந்துகொள்வாளோ என்று நான் அஞ்சுகிறேன். அவள் அறிந்து கொண்டால், நான் உயிர் வாழ மாட்டேன்.” என்று தலைவி கூறுகிறாள்.
ஆய்வளை ஞெகிழவு மயர்வுமெய் நிறுப்பவும்
நோய்மலி வருத்தம் அன்னை யறியின்
உளெனோ வாழி தோழி விளியா
துரவுக்கடல் பொருத விரவுமண லடைகரை
ஓரை மகளி ரோராங் காட்ட
வாய்ந்த லவன் துன்புறு துனைபரி
ஓங்குவரல் விரிதிரை களையும்
துறைவன் சொல்லோ பிறவா யினவே.

கொண்டு கூட்டு: தோழி! வாழி! உரவுக்கடல் பொருத விரவு மணல் அடைகரை ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட ஆய்ந்த அலவன் துன்புறு துனைபரிஓங்குவரல் விரிதிரை களையும் துறைவன் சொல்லோ, பிற ஆயின. ஆய்வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும் நோய்மலி வருத்தம் அன்னை அறியின் விளியாது உளெனோ?
அருஞ்சொற்பொருள்: ஆய்வளை = அழகிய வளையல்கள்; உளெனோ = உயிரோடு இருப்பேனோ; ஞெகிழ்தல் = கழலுதல்; அயர்வு = வருத்தம்; நிறுப்பவும் = நிலைக்கச் செய்யவும்; நோய் = துன்பம்; மலிதல் = மிகுதல்; விளியாது = இறவாது; உரவு = வலி; விரவுதல் = கலத்தல்; அடைகரை = மணல் அடைந்த கரை (கரை ஓரம்); ஒரை = சிறுமியர் விளையாட்டு; ஓராங்கு = ஒரேயடியாக; ஆட்ட = துன்புறுத்த; ஆய்தல் = வருந்துதல்; அலவன் = நண்டு ; துனை = விரைவு; பரிதல் = ஓடுதல்; பிற ஆயின = பொய்யாயின.
உரை: தோழி! நீ வாழ்க! வலிய கடல் அலைகள் மோதுவதால், மணல் பரவியுள்ள கடற்கரையில், பெண்கள் ஒரை என்னும் விளையாட்டை விளையாடுகிறார்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்து, அங்குள்ள நண்டு ஒன்றைத் துன்புறுத்துகிறார்கள். அதனால், வருத்தமடைந்த அந்த நண்டு, துன்பத்தோடு விரைந்து ஓடுகிறது. உயர்ந்து வருகின்ற விரிந்த அலை, அந்த நண்டைக் கொண்டு சென்று, அந்த நண்டின் துன்பத்தை நீக்குகிறது. அத்தகைய, துறையையுடைய தலைவன் சொன்ன சொற்கள் பொய்யாயின. அதனால், என் கையிலுள்ள அழகிய வளையல்கள் நெகிழ்ந்தன; உடலில் சோர்வு நீங்காமல் நிலைத்தது. இவ்வாறு என் காமநோயால் எனக்கு உண்டான மிகுந்த வருத்தத்தை என் தாய் அறிவாளாயின், நான் இறவாமல் உயிரோடு இருப்பேனோ?

சிறப்புக் குறிப்பு: மகளிர் துன்புறுத்திய பொழுது, அவர்களுக்கு அஞ்சி விரைந்து ஓடிய நண்டை, அம்மகளிர் கையில் அகப்படாதவாறு அலை கொண்டு சென்றது. அதனால், அந்த நண்டின் துன்பம் தீர்ந்தது.  அதுபோல், தனது காமநோயால் உண்டாகிய மிகுந்த வருத்தத்தையும், ஊரார் கூறும் அலரால் தோன்றிய வருத்தத்தையும், களவொழுக்கத்தைத் தாய் அறிந்து கொள்வாளோ என்ற அச்சத்தையும், தலைவன் தன்னைத் திருமணம் செய்துகொண்டு, போக்க வேண்டும் என்று தலைவி விரும்புகிறாள்.

315. தலைவி கூற்று

315. தலைவி கூற்று 

பாடியவர்: மதுரை வேள்ஆதத்தனார். இவருடைய இயற்பெயர் தத்தன். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. இப்பாடலை இயற்றியவர் குறுந்தொகையில் உள்ள 61 – ஆம் பாடலை இயற்றிய தும்பிசேர் கீரனார் என்றும் கருதப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடை ஆற்றகிற்றியோ என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடச் சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவால் தலைவி வருந்துவாள் என்று எண்ணிய தோழி, “தலைவன் திரும்பிவந்து, உன்னைத் திருமணம் செய்துகொள்ளும்வரை உன்னால் வருந்தாமல், பொறுமையோடு இருக்க முடியுமா?” என்று கேட்கிறாள்அதற்குத் தலைவி. “நான் அவர் விருப்படியே நடப்பவள். அதனால் அவர் வரும்வரை நிச்சயம் பொறுமையோடு காத்திருப்பேன்.” என்று கூறுகிறாள்.

எழுதரு மதியங் கடற்கண் டாஅங்
கொழுகுவெள் ளருவி யோங்குமலை நாடன்
ஞாயி றனையன் தோழி
நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே. 

கொண்டு கூட்டு: தோழி! எழுதரு மதியம் கடல் கண்டாங்கு, ஒழுகு வெள்ளருவி
ஓங்குமலை நாடன் ஞாயிறு அனையன்என் பெரும் பணைத்தோள் நெருஞ்சி அனைய. 
அருஞ்சொற்பொருள்: எழுதரு = எழுகின்ற; பணை = மூங்கில்.
உரை: தோழி!  கடலிலிருந்து மேலெழுகின்ற முழுமதியைக் கண்டால் அதன் ஒளி நம்மை நோக்கி வருவதைப் போல், ஒழுகிக்கொண்டிருக்கின்ற வெண்ணிறமான அருவியையுடைய உயர்ந்த மலைநாட்டையுடைய தலைவன், கதிரவனைப் போன்றவன். மூங்கிலைப் போன்ற என்னுடைய பெரிய தோள்கள், நெருஞ்சி மலர்களைப் போன்றவை.

சிறப்புக் குறிப்பு: நெருஞ்சி மலர் (சூரியகாந்திப் பூவைப் போல்) காலையில் கிழக்குத் திசையில் மலர்ந்து,  கதிரவன் இயங்கும் திசையையே நோக்கித் தானும் இயங்கும். மாலையில் கதிரவன் மறைந்தவுடன் நெருஞ்சி மலர் கூம்பிவிடும்.  நெருஞ்சி மலர் கதிரவனின் இயக்கத்தோடு இணைந்து இயங்குவதைப் போல் தன்னுடைய தோள்களும் இயங்கும் என்று தலைவி கூறுவது, ”நான் தலைவன் கருத்தின்படி வாழ்வேன்.“ என்று தலைவி கூறுவதைக் குறிக்கிறது. அருவிக்குத் திங்களின் ஒளி உவமை; மலைக்குக் கடல் உவமை; தலைவனுக்குக் கதிரவன் உவமை; தலைவியின் உள்ளத்திற்கு நெருஞ்சி மலர் உவமை. இச்சிறிய பாடலில் நான்கு உவமைகள் அடங்கி இருப்பது இப்பாடலின் தனிச் சிறப்பு. “இப் பாடல் உலகக் காதல் பாடல் வரிசையில் வைத்து எண்ணத்தக்கது. ஒருபெரிய புதினத்திற்கான கருத்தாழமும், கற்பனை வளமும் இந்நான்கு அடிகளுள் உள.” என்று இப்பாடலைத் தமிழண்ணல் அவர்கள் தம் நூலில் பாராட்டுகிறார்.

314. தலைவி கூற்று

314. தலைவி கூற்று

பாடியவர்: பேரிசாத்தனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 81 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று : பிரிவிடை வேறுபட்ட கிழத்தி வற்புறுத்துந் தோழிக்குப் பருவங்காட்டி அழிந்து (வருந்திக்) கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிச் சென்றான். கார்காலம் வந்தது. தலைவன் இன்னும் வராததால் தலைவி வருந்துவதைக் கண்ட தோழி, தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். ”அவர் திரும்பிவருவதாகக் கூறிய பருவம் வந்துவிட்டது. ஆனால், அவர் இன்னும் வரவில்லையே!” என்று தலைவி தன் வருத்தத்தைத் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறாள்.

சேயுயர் விசும்பி னீருறு கமஞ்சூல்
தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்பப்
பெயர்தாழ் பிருளிய புலம்புகொள் மாலையும்
வாரார் வாழி தோழி வரூஉம்
இன்னுறல் இளமுலை ஞெமுங்க
இன்னா வைப்பின் சுரனிறந் தோரே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! இன்னா வைப்பின் சுரன் இறந்தோர்சேய் உயர் விசும்பின் நீர்உறு கமம்சூல்தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்பப் பெயல்தாழ்பு இருளிய புலம்புகொள் மாலையும் வரூஉம்இன் உறல் இளமுலை ஞெமுங்க வாரார்.
அருஞ்சொற்பொருள்: சேய் உயர் = நெடுந்தூரம் உயர்ந்த; விசும்பு = ஆகாயம்; உறு = மிக்க; கமம் = நிறை; சூல் = கருப்பம்; குரல் = ஒலி; எழிலி = மேகம்; தாழ்பு = இறங்கி (இறங்கி மழை பெய்தல்); புலம்பு = தனிமை; வாழிஅசைநிலை; இன் உறல் = தொட்டுத் தழுவுவதற்கு இனிய; ஞெமுங்க = அழுந்த; வைப்பு = இடம்.

உரை: தோழி! துன்பத்தைத் தரும் இடங்களையுடைய, பாலைநிலத்தைக் கடந்து சென்ற தலைவர், மிக உயர்ந்த வானத்தில், நீர்மிக்க, நிறைந்த கருப்பத்தையுடைய மேகம்,  குளிர்ச்சியோடும், முழக்கத்தோடும், ஓள்ளிய மின்னலின் ஒளி வீசுமாறு,  மழைபெய்யும் இருண்ட, தனிமையைக் கொண்ட மாலைக்காலம் வந்தும்தொட்டுத் தழுவுவதற்கு  இனிய, என்னுடைய இளமுலைகள் அழுந்தும்படித் தழுவ வாரார்.

313. தலைவி கூற்று

313.  தலைவி கூற்று

பாடியவர்: இவர் பெயர் தெரியவில்லை.
திணை: நெய்தல்.
கூற்று : இரவுக்குறி வந்து ஒழுகுங் காலத்துத் தலைமகனது வரவுணர்ந்து, ”பண்பிலர் என்று இயற்பழித்த தோழிக்கு, ”அவரோடு பிறந்த நட்பு அழியாத நட்பன்றோஎன்று, சிறைப்புறமாகத் தலைமகள் இயற்படமொழிந்தது. (இயற்பழித்தல் = தலைவனின் இயல்பைப் பழித்துரைத்தல்; இயற்பட மொழிதல் = தலைவனது இயல்பைப் போற்றி உரைத்தல்)
கூற்று விளக்கம்: தலைவன் இரவில் வந்து தலைவியைச் சந்திக்கிறான். அவளோடு கூடி மகிழ்கிறான். ஆனால், திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல் காலம் கடத்துகிறான். ஒருநாள், தலைவன் தலைவியைக் காணவந்து, வீட்டுக்கு வெளியே நிற்கிறான். தலைவனின் செயலால் கோபமுற்ற தோழி, அவன் காதில் கேட்குமாறு, அவனைப் பற்றி இழிவாகப் பேசுகிறாள். அதைக் கேட்ட தலைவி, “தலைவனுக்கும் எனக்கும் இடையே உள்ள நட்பு மிகவும் உறுதியானது. எங்கள் நட்புக்கு அழிவில்லை. எங்களை எவராலும் பிரிக்க முடியாது.” என்று தலைவன் கேட்குமாறு தோழியிடம் கூறுகிறாள்.

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந் துண்டு
பூக்கமழ் பொதும்பிற் சேக்குந் துறைவனொடு
யாத்தேம் யாத்தன்று நட்பே
அவிழ்த்தற் கரிதது முடிந்தமைந் தன்றே. 


கொண்டு கூட்டு: பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைநீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்து உண்டுபூக்கமழ் பொதும்பில் சேக்கும் துறைவனொடு நட்பு  யாத்தேம்;
யாத்தன்று; அவிழ்த்தற்கு அரிது; முடிந்து அமைந்தன்று. 
அருஞ்சொற்பொருள்: நீத்து = வெள்ளம்; இரு = கரிய; கழி = கடலோர நீர்நிலை; பொதும்பு = சோலை; யாத்தல் = கட்டுதல், முடிச்சுப் போடுதல்; சேக்கும் = தங்கும்.
உரை: தோழி! பெரிய கடற்கரையில், சிறிய வெண்ணிறமான காக்கையானது, வெள்ளம் போல் நீர் நிறைந்த கழியில் மீனை  இரையாகத் தேடி உண்டு,  மலர் மணம் வீசும் சோலையில் தங்கும் துறையையுடைய தலைவனோடு, நம்மை நட்பில் பிணைத்துக் கொண்டோம். அங்ஙனம் பிணைக்கப்பட்ட  நட்பு நன்றாக உறுதியாகக் கட்டப்பட்டது. அது பிறராற் பிரித்தற்கு அரியது; அது நன்கு முடிச்சுப் போடபட்டதுபோல் அமைந்தது.

சிறப்புக் குறிப்பு:  கடற்கரையில் இரையை உண்ட காகம், பூ மணக்கும் சோலையில் தங்கும் துறையையுடைய தலைவன் என்றது, களவொழுக்கத்தில் வந்து கூடி மகிழும் தலைவன், திருமணம் செய்துகொண்டு தன் இல்லத்திலிருந்து இல்லறம் நடத்த வேண்டும் என்று தலைவி விரும்புவதைக் குறிக்கிறது.

Sunday, February 19, 2017

312. தலைவன் கூற்று

312. தலைவன் கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன்னெஞ்சிற்கு வரைவுடைமை வேட்பக் (திருமணத்தில் விருப்பம் தோன்றக்) கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் இரவில் சந்தித்தார்கள். அதன் பின்னர் தலைவன் தன் இல்லத்திற்குச் செல்கிறான். தலைவி தன்னோடு இருக்கும் பொழுது மனம் ஒன்றி, அன்புடையவளாகப் பழகுவதையும், அவள் தன் சுற்றத்தாரோடு இருக்கும்பொழுது தன் களவொழுக்கத்தை மறைத்து அவர்கள் விருப்பத்திற்கேற்ப நடப்பதையும் நினைத்து, வியந்து, அவளை விரைவில் மணந்துகொள்ள வேண்டும் என்று தனக்குத் தானே கூறிக்கொள்கிறான்.

இரண்டறி கள்விநங் காத லோளே
முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கான நாற வந்து
நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி
அமரா முகத்த ளாகித்
தமரோ ரன்னள் வைகறை யானே. 


கொண்டு கூட்டு: நம் காதலோள் இரண்டு அறி கள்வி!  முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன் முள்ளூர்க் கானம் நாற வந்து, நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்; வைகறையான்கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துசாந்துளர் நறும் கதுப்பு எண்ணெய் நீவி, அமரா முகத்தளாகித் தமர் ஓரன்னள்!
அருஞ்சொற்பொருள்: கள்வி = உள்ளத்தில் உள்ளதை மறைத்து நடப்பவள்; முரண் = பகை; துப்பு = துணைவலி; செவ்வேல் = சிவந்த வேல்; மலையன் = மலையமான் திருமுடிக்காரி (கடையெழு வள்ளல்களில் ஒருவன்);  நள் = செறிவு; கங்குல் = இருள்; ஓரன்னள் = ஒன்றிய தன்மையவள்; வேய்ந்த = சூடிய; விரவுதல் = கலத்தல்; உளர்தல் = பூசுதல்; கதுப்பு = பெண்களின் கூந்தல்; நீவி = தடவி; அமர்தல் = பொருந்துதல்; அமரா = பொருந்தாத; வைகறை = விடியற்காலம்.
உரை: இருவேறு விதமான நடத்தையை அறிந்த கள்ளத் தன்மையை உடைய நம் காதலி, இருள் செறிந்த  இரவில், எப்பகையையும் எதிர்க்கும் வலிமையையுடைய, சிவந்த வேலையுடைய மலையமான் திருமுடிக்காரியின் முள்ளூர் மலைக்காட்டிலுள்ள நறுமணத்தைப் போன்ற மணம் வீசும்படி வந்து, நம்மோடு மனம் ஒன்றியவளாயினாள்; விடியற்காலத்தில், அவள் கூந்தலில் நான் சூட்டிய,  பலவகையான மலர்களை உதிர்த்துவிட்டு, மயிர்ச்சாந்து பூசிக் கோதிய மணமுள்ள கூந்தலில் எண்ணெயைத் தடவி, மாறுபட்ட முகத்துடன், தன் உறவினர்களோடு ஒத்தவளாயினாள்.
சிறப்புக் குறிப்பு: தலைவி தலைவனோடு மனம் ஒன்றிப் பழகுகிறாள். இரவிலே அவனோடு கூடி மகிழ்கிறாள். அவர்கள் இரவில் சந்திக்கும் பொழுது, அவன் அவளுக்குப் பலவகையான மலர்களைச் சூட்டி அவள் அழகைக் கண்டு மகிழ்கிறான். அவளும் அவன் விருப்பத்துக்கு இணங்கி நடந்துகொள்கிறாள். ஒருநாள், காலைவேளையில் தலைவன் தலைவி வீட்டுக்கு விருந்தினனாகச் சென்றான். அவள் தலையில், அவன் முதல் நாள் இரவு சூட்டிய மலர்களைக் காணவில்லை. அவள் அந்த மலர்களை உதிர்த்துவிட்டு, நீராடித் தலையில் எண்ணெயைத்  தடவி வாரியிருந்தாள். அவள் தன் சுற்றத்தாரோடு மனம் ஒன்றிப் பழகினாள். அவனோடு காதலியாக இரவில்  உறவாடியவள் இப்பொழுது அவனைத் தெரியாதவள் போல் நடந்துகொள்கிறாள். இவ்வாறு, இருவேறு விதமான நடத்தையை உடைய கள்வியாக அவள் இருப்பாது அவனுக்கு மிகுந்த வியப்பாக இருக்கிறது.
தலைவி இருவேறு விதமாக நடந்துகொள்ளும் ஆற்றல் உடையவளாக இருந்தாலும், அவளால் நெடுங்காலம் களவொழுக்கத்தை மறைக்கமுடியாது. ஆகவே, விரைவில் அவளைத் திருமணம் செய்துகொள்வதுதான் சிறந்தது என்று தலைவன் நினைக்கிறான்
மலையமான் திருமுடிக்காரி:திருக்கோவலூருக்கு மேற்கே பெண்ணையாற்றின் தென்கரைப் பகுதியும் தென்பகுதியும் சங்க காலத்தில் மலாடு என்ற பெயரால் அழைக்கப்பட்டது.  மலாடு என்ற பகுதிக்குக் கோவலூர் தலைநகராக இருந்தது.  கபிலர் காலத்தில் கோவலூரைத் தலைநகராகக்கொண்ட மலாடு என்ற பகுதியை ஆட்சி புரிந்த குறுநில மன்னனின் பெயர் மலையமான் திருமுடிக்காரி.  இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.  இவன் காரி என்றும் மலையமான் என்றும் கோவற்கோமான் என்றும் தேர்வண்மலையன் என்றும் அழைக்கப்பட்டான்.
            பெண்ணையாற்றுக்குத் தென்மேற்கே உள்ள முள்ளூர் என்ற ஊரும் காரிக்குச் சொந்தமானதாக இருந்தது.  ஒரு சமயம் அதனைக் கைப்பற்ற ஆரிய மன்னர் பெரிய வேற்படையோடு வந்து முற்றுகையிட்டனர்.  காரி அவர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றான்.  இச்செய்தி, ‘ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது ஒருவேற்கு ஓடி ஆங்குஎன்ற நற்றிணைப் பாடலிலிருந்து (170) தெரியவருகிறது.

            மலையமான் திருமுடிக்காரி தமிழ் மூவேந்தருடன் நட்பு கொண்டிருந்தான்.  அவர்களுக்குத் துணையாகப் போர்புரிந்தான்.  உதாரணமாக, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையும் போரிட்ட பொழுது, திருமுடிக்காரி சோழனுக்குத் துணையாக இருந்து சேரனை எதிர்த்துப் போராடியதாகவும், அப்போரில் திருமுடிக்காரியின் உதவியால் சோழன் வென்றதாகவும் புறநானூற்றுப் பாடல் 125 – இல் குறிப்பிடப்பட்டுள்ளது

311. தலைவி கூற்று

311. தலைவி கூற்று
பாடியவர்: சேந்தன் கீரனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: அலரஞ்சிய தலைமகள், தலைமகன் சிறைப் புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்குக் காலம் கடத்திக் கொண்டிருக்கிறான். ஒருநாள், இரவில் தலைவியைக் காண்பதற்காகத் தலைவியின் வீட்டுக்கு வெளியே தலைவன் வந்து நிற்கிறான். அவன் வந்திருப்பது  தலைவிக்கும் தோழிக்கும் தெரியும். “தலைவன் தேரில் வந்ததைத் என் தோழியர் பலரும் கண்டனர். அதனால் அலர் பெருகியது.” என்று  தலைவன் காதில் கேட்குமாறு தலைவி தோழியிடம் கூறுகிறாள். அவள் சொல்லுவதைத் தலைவன் கேட்டால், அவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்று தலைவி எண்ணுகிறாள்.

அலர்யாங் கொழிவ தோழி பெருங்கடற்
புலவுநா றகன்றுறை வலவன் தாங்கவும்
நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர்
யான்கண் டனனோ இலனோ பானாள்
ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னைத்
தாதுசேர் நிகர்மலர் கொய்யும்
ஆயம் எல்லாம் உடன்கண் டன்றே.
கொண்டு கூட்டு: தோழி! பெருங்கடல் புலவு நாறு அகன்துறை, வலவன் தாங்கவும் நில்லாது கழிந்த கல்என் கடுந்தேர் யான் கண்டனனோ, இலனோ? பானாள் ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னைத் தாதுசேர் நிகர் மலர் கொய்யும் ஆயம் எல்லாம் உடன்கண்டன்று. யாங்கு அலர் ஒழிவ?
அருஞ்சொற்பொருள்: அகன்துறை = அகன்ற துறை; வலவன் = தேர்ப்பாகன்; தாங்கவும் = தடுக்கவும்; கடுந்தேர் = விரைந்து செல்லும் தேர்; பானாள் = நடு இரவு; ஓங்கல் = உயர்ச்சி; நிகர் = ஒளி; ஆயம் = தோழியர் கூட்டம்.

உரை: தோழி! பெரிய கடலின், புலால் நாற்றம் வீசும் அகன்ற துறையில், தேர்ப்பாகன் குதிரைகளை இழுத்துப் பிடிக்கவும், நில்லாமல் விரைந்து ஓடி, ”கல்என்னும் ஓசையை எழுப்பிய தலைவனது தேரை நான் கண்டேனோ, இல்லையோ? நடு இரவில், உயர்ந்த வெண்மையான மணல் மேட்டில், தாழ்ந்து வளர்ந்த புன்னை மரத்தின், மகரந்தம் சேர்ந்த ஒளியையுடைய மலர்களைப் பறிக்கும்,  மகளிர் கூட்டத்தினர் அனைவரும் அந்தத் தேரை ஒருங்கே கண்டனர். ஆதலால், நம்மைப் பற்றிய பழிச்சொற்கள் எவ்வாறு ஒழியும்?

310. தலைவி கூற்று

310. தலைவி கூற்று 
பாடியவர்: பெருங்கண்ணனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 289 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று : வரைவிடை முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடச் சென்றிருக்கிறான். தலைவியால் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தோழி, “தலைவன் திருமணத்திற்காகப்  பொருள் தேடத்தான் சென்றிருக்கிறான்.  ஆகவே, இந்தப் பிரிவை நீ பொறுத்துக்கொள்ள வேண்டும்.” என்று வலியுறுத்துகிறாள்.  தோழியின் கூற்றால் கோபமடைந்த தலைவி, ”நான் பொறுத்துகொள்ள வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறுவதை விடுத்து, யாராவது எனக்காகத் தலைவனிடம் சென்று என் நிலையைப் பற்றிக் கூறினால் நான் உயிரோடு இருக்க இயலும்.” என்று தோழியிடம் கூறுகிறாள்.

புள்ளும் புலம்பின பூவுங் கூம்பின
கானலும் புலம்புநனி யுடைத்தே வானமும்
நம்மே போலும் மம்மர்த் தாகி
எல்லை கழியப் புல்லென் றன்றே
இன்னும் உளெனே தோழி இந்நிலை
தண்ணிய கமழு ஞாழல்
தண்ணந் துறைவர்க் குரைக்குநர்ப் பெறினே. 

கொண்டு கூட்டு: தோழி! புள்ளும் புலம்பின; பூவும் கூம்பினகானலும் புலம்பு நனி உடைத்து; வானமும் நம்மே போலும் மம்மர்த்து ஆகி எல்லை கழியப் புல்லென்றன்று. இந்நிலை, தண்ணிய கமழும் ஞாழல் தண்அம் துறைவர்க்கு உரைக்குநர்ப் பெறின் இன்னும் உளென்.

அருஞ்சொற்பொருள்: புள் = பறவை; புலம்பின = ஒலித்தன; நனிமிகுதியாக; மம்மர் =  மயக்கம்; எல்லை = பகல் நேரம்; புல்லென்றன்று = பொலிவிழந்தது; ஞாழல் = ஒருவகை மரம் (புலிநகக் கொன்றை); துறைவன் = நெய்தல் நிலத் தலைவன்.
உரை: தோழி! பறவைகளும் ஒலித்தன;  மலர்களும் குவிந்தன; கடற்கரைச் சோலையும் தனிமை மிகுந்ததாயிற்று. வானமும் நம்மைப் போல் மயக்கத்தை உடையதாகி,  பகல் நேரம் முடிந்ததால் பொலிவிழந்தது.  குளிர்ச்சியுடன் கூடிய மணம் கமழும் மலர்களை உடைய ஞாழல் மரங்கள் வளர்ந்த, குளிர்ந்த அழகிய துறையை உடைய தலைவருக்கு, என்னுடைய இந்த நிலையைப் பற்றி உரைப்பவரைப் பெற்றால், நான் தொடர்ந்து  உயிரோடு இருப்பேன். (இல்லையேல், நான் இறப்பேன்.)

சிறப்புக் குறிப்பு: பூ என்றது ஆம்பல் முதலிய நீர்ப்பூக்களை குறிக்கிறது. நம்மே போலும் மம்மர்த்தாகி என்பதனால் தான் மயக்கமுடையவள் என்பதைத் தலைவி தெரிவிக்கிறாள். தன்னைக் கடிந்துரைப்பவர்கள் மட்டும்தான் உண்டு. தன்னுடைய துயரத்தை உணர்ந்து தனக்காகத் தலைவனிடம் சென்று தன் நிலையை உரைப்பார் யாரும் இல்லையே என்று தலைவி வருந்துகிறாள். இவ்வாறு தலைவி கூறுவது, தோழி தலைவனிடம் சென்று, தன் நிலையைப் பற்றிக் கூற வேண்டும் என்று அவள் விரும்புவதைக் குறிக்கிறது.