Tuesday, July 11, 2017

369. தோழி கூற்று

369. தோழி கூற்று
பாடியவர்: குடவாயிற் கீரத்தனார்.
திணை: பாலை.
கூற்று : தோழி, கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.
கூற்று விளக்கம்: தலைன் தலைவியோடு உடன்போகச் சம்மதித்தான் என்பதை அறிந்த தோழி, “தலைவனுடன் செல்வாயாகஎன்று தலைவியிடம் கூறுகிறாள்.

அத்த வாகை அமலை வானெற்
றரியார் சிலம்பி னரிசி யார்ப்பக்
கோடை தூக்குங் கானம்
செல்வாந் தோழி நல்கினர் நமரே. 

கொண்டு கூட்டு: தோழி நமர் நல்கினர் அத்த வாகை அமலை வால் நெற்று அரிசி அரி ஆர் சிலம்பின் ஆர்ப்பகோடை தூக்கும் கானம் செல்வாம். 

அருஞ்சொற்பொருள்: நமர் = நம் தலைவர்; நல்குதல் = அன்பு காட்டுதல், அருள் செய்தல்; அத்தம் = பாலைவழி; வாகை = ஒருவகை மரம்; அமலை = ஒலி; வால் = வெண்மை; அரி = பரல்; அரிசி = உள்விதை; ஆர்ப்ப = ஒலிக்க; தூக்கும் = காற்று அலைக்கும்; கானம் = காடு.


உரை: தோழி! நம் தலைவர், நம்மீது அருள் செய்தார் (உடன்போகச் சம்மதித்தார்). ஆதலின்,  கடத்தற்கரிய பாலைவழியில் உள்ள வாகைமரத்தின்,  வெண்ணிறமான  நெற்றுக்கள், தம் உள்ளிருக்கும் விதைகளோடு, பரல்களை உள்ளீடாகக் கொண்ட  சிலம்பைப் போல் ஒலிக்குமாறு, மேல்காற்று அலைக்கின்ற, காட்டுவழியில் செல்வோமாக.

368. தலைவி கூற்று

368.  தலைவி கூற்று
பாடியவர்: நக்கீரனார்.
திணை: மருதம்.
கூற்று : வரைவுமலிந்த தோழிக்குக் கிழத்தி கூறியது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குரிய முயற்சிகள் விரைவாக நடைபெறுகின்றன என்ற செய்தியைத் தோழி வழியாகக் கேள்விப்பட்ட  தலைவிஇதுவரை நான் என் அழகை இழந்து துன்புற்றேன். இனி, இடையீடின்றித் தலைவனோடு இன்பமாக இருக்கப் போகிறேன்என்று கூறுகிறாள்.

மெல்லிய லோயே மெல்லிய லோயே
நன்னாண் நீத்த பழிதீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பிற்
சொல்ல கிற்றா மெல்லிய லோயே
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே
நாளிடைப் படாஅ நளிநீர் நீத்தத்
திண்கரைப் பெருமரம் போலத்
தீதில் நிலைமை முயங்குகம் பலவே. 

கொண்டு கூட்டு: மெல்லியலோயே! மெல்லியலோயேநல்நாள் நீத்த பழிதீர் மாமை வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்  சொல்லகிற்றா? மெல்லியலோயே! சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கு  நாள்இடைப் படாஅ நளிநீர் நீத்தத்து  திண்கரைப் பெருமரம் போலத் தீதுஇல் நிலைமை பல முயங்குகம்.

அருஞ்சொற்பொருள்: மெல்லியலோய் = மெல்லிய இயல்பை உடையவளே; நீத்த = நீங்கிய; மாமை = அழகு; வன்பு = வலிமை; சொல்லகிற்றா = சொல்ல இயலாத; இடைப்படா = இடைவிடாமல்; நளிதல் = செறிதல்; நீத்தம் = வெள்ளம்.

உரை:  மெல்லிய இயல்பை உடையவளேமெல்லிய இயல்பை உடையவளே! நல்ல நாளில் நம்மை நீங்கிய நமது குற்றமற்ற அழகின் இயல்பை, நம் மனவலிமையால் பொறுத்துக்கொண்டிருந்தோமே அல்லாமல், அங்ஙனம் நீங்குதற்கு ஏதுவாகிய துன்பத்தைச் சொற்களால், சொல்ல இயலாத நிலையில் இருந்தோம். சிறியோரும் பெரியோரும் வாழ்கின்ற ஊரில், நாள்தோறும் இடைவிடாமல் மிகுந்த வெள்ளம் வரும் கரையில்  உள்ள பெரிய மரத்தைப் போல,  தீங்கில்லாத நிலையிலிருந்து, பலமுறை தலைவரைத் தழுவுவோமாக.


சிறப்புக் குறிப்பு: நல் நாள்என்றது, தலைவனைக் கண்டு, கூடி மகிழ்ந்த நாளைக் குறிக்கிறது.  தன் அழகு மீண்டும் தன்னிடம் வந்து சேரும் என்பதால்  பழிதீர் மாமை என்றாள்.  வெள்ளத்தின் கரையிலுள்ள மரம் நீரால் குறைவின்றி வளம் பெறுவது போலத் தலைவனோடு இடையீடின்றி வாழும் வாழ்க்கையால் தான் இழந்த அழகைத் தலைவி பெறப்போகிறாள் என்பது குறிப்பு. தலைவியின் இன்பத்துக்கும் மகிழ்ச்சிக்கும் வெள்ளம் பெருகிவரும் கரையில் உள்ள பெரியமரம் உவமை.  ”தீதில் நிலைமைஎன்றது அலர், மாமையை இழத்தல் முதலிய, தீங்குகள் இல்லாத நிலைமையைக் குறிக்கிறது.

367. தோழி கூற்று

367. தோழி கூற்று
பாடியவர்: மதுரை மருதனிள நாகனார்.
திணை: மருதம்.
கூற்று -1: வரைவுணர்த்திய தோழி தலைமகட்குக் கழியுவகை மீதூராமை உணர்த்தியது. (கழி உவகைமிகுந்த மகிழ்ச்சி; மீதூராமைமிகவும் அதிகமாகதபடி)
கூற்று -2: வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி, ஆற்றும் வகையால் ஆற்றுவித்தது.
கூற்று விளக்கம் - 1: தலைவன் திருமணம் செய்துகொள்ளப் போகிறான் என்ற செய்தியைத் தலைவிக்கு உணர்த்தும் தோழி, தலைவியின் மகிழ்ச்சி மிகவும் அதிகாமல் இருக்கும் பொருட்டு, “தலைவர் அன்பு காட்டாவிட்டாலும்  அவர் மலையைக் கண்டு ஆற்றி இருப்பாயாகஎன்று கூறுகிறாள்.
கூற்று விளக்கம் – 2: தலைவன் திருமணத்திற்குக் காலம் தாழ்த்துவதால், வருந்திய தலைவியை  ஆற்றுவிப்பதற்காக, “தலைவர் அன்பு காட்டாவிட்டாலும்  அவர் மலையைக் கண்டு ஆற்றி இருப்பாயாகஎன்று தோழி கூறியது.

கொடியோர் நல்கா ராயினும் யாழநின்
தொடிவிளங் கிறைய தோள்கவின் பெறீஇயர்
உவக்காண் தோழி அவ்வந் திசினே
தொய்யல் மாமழை தொடங்கலின் அவர்நாட்டுப்
பூச லாயம் புகன்றிழி அருவியின்
மண்ணுறு மணியின் தோன்றும்
தண்ணறுந் துறுகல் ஓங்கிய மலையே. 

கொண்டு கூட்டு: தோழி! தொய்யல் மாமழை தொடங்கலின் அவர்நாட்டுப்  பூசல் ஆயம் புகன்று இழி அருவியின் மண்ணுறு மணியின் தோன்றும்தண் நறும்  துறுகல் ஓங்கிய மலை கொடியோர் நல்காராயினும் நின் தொடிவிளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர்அவ்வந்திசின்உவக்காண்!

அருஞ்சொற்பொருள்: நல்குதல் = அன்போடு இருத்தல் ; யாழமுன்னிலை அசைச்சொல்; இறை = முன் கை, மணிக்கட்டு; கவின் = அழகு; உவக்காண் = அதோ பார்; அவ் வந்திசின் = அங்கே அருக; தொய்வு = நெகிழ்ச்சி; தொய்யல் மாமழை = நிலத்தை நன்றாக நனைக்கும் பெரிய மழை; பூசல் = ஆரவாரம்; ஆயம் = மகளிர் கூட்டம்; புகன்று = விரும்பி; மண்ணுதல் = கழுவுதல்; துறுகல் = பாறை (குண்டுக்கல்).

உரை: தோழி! நிலத்தை நன்றாக நனைக்கும் பெரிய மழை, பெய்யத் தொடங்கிவிட்டதுஅத்தலைவருடைய நாட்டிலுள்ள, ஆரவாரத்தையுடைய மகளிர் கூட்டம், விரும்பி நீராடுவதற்குப் புகுகின்ற அருவியினால் கழுவப்பட்ட நீல மணியைப் போலத் தோன்றுகின்ற, குளிர்ந்த, மணமுள்ள குண்டுக்கற்கள் பொருந்திய  உயர்ந்த மலையை, கொடுமையையுடைய தலைவர் உன்னிடம் அன்பு காட்டாவிட்டலும், வளையல்கள் விளங்கும் முன்கைகளையுடைய உன்தோள்கள் அழகு பெறும்வண்ணம், அங்கே வந்து  பார்ப்பாயாக!


சிறப்புக் குறிப்பு: திருமணத்தற்குக் காலம் நீட்டிப்பதால், அவர் அன்பு காட்டாவிட்டாலும் அவரது மலையைப் பார்த்து ஆற்றுவாயாகஎன்று தோழி கூறுவது பாடலின் கருத்துக்கு ஏற்றதாக உள்ளது. அதாவது, இரண்டாவது கூற்று, பாடலுக்குப் பொருத்தமானதாக உள்ளது

366. தோழி கூற்று

366. தோழி கூற்று

பாடியவர்: பேரிசாத்தனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : காவல் மிகுதிக்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,“இவ்வேறுபாடு எற்றினான் ஆயது?” என்று செவிலி வினாவத் தோழி கூறியது. (எற்றினான் = எதனால்)
கூற்று விளக்கம்: தலைவியின் பெற்றோர்கள் அவளைக் காவலில் வைத்தார்கள். அதனால், அவளுக்குத் தலைவனைக் காணும் வாய்ப்பில்லை. தலைவனைக் காண இயலாததால், தலைவி மனம் வருந்தி, உடல் மெலிந்து காணப்படுகிறாள். அவள் தோற்றத்தில் மாற்றங்களைக் கண்ட செவிலித்தாய், தோழியை நோக்கி, “உன் தோழிக்கு என்ன ஆயிற்று? அவள் ஏன் இப்படிக் கவலையோடு காட்சி அளிக்கிறாள்?” என்று கேட்கிறாள். செவிலித் தாயின் வினாவுக்குத் தோழியின் மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது.

பால்வரைந் தமைத்த லல்ல தவர்வயிற்
சால்பளந் தறிதற் கியாஅம் யாரோ
வேறியான் கூறவும் அமையாள் அதன்தலைப்
பைங்கண் மாச்சுனைப் பல்பிணி யவிழ்ந்த
வள்ளிதழ் நீலம் நோக்கி உள்ளகை
பழுத கண்ண ளாகிப்
பழுதன் றம்மவிவ் வாயிழை துணிவே. 

கொண்டு கூட்டு: பைங்கண் மாச்சுனைப் பல்பிணி அவிழ்ந்த  வள்ளிதழ் நீலம் நோக்கி, இவ் ஆயிழை உள் அகைபு  அழுத கண்ணள் ஆகி வேறு யான் கூறவும் அமையாள். அதன்தலை அவர் வயின்  துணிவு  பால் வரைந்து அமைத்தல் அல்லது சால்பு அளந்து அறிதற்கு யாம் யாரோ? பழுது அன்று. அம்ம!

அருஞ்சொற்பொருள்: பால் = ஊழ்வினை; சால்பு = தகுதி; அதன்தலை = அதற்கு மேலும்; பைங்கண் = பசுமையான இடம்; மா =பெரிய; சுனை = நீர்நிலை; அகைபு = வருந்தி; ஆயிழை = தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவள்.

உரை: பசுமையான இடத்தையுடைய பெரிய நீர்நிலையில் பல கட்டு அவிழ்ந்த, வளமான இதழ்களையுடைய நீலமலர் ஒன்றைப் பார்த்து, (அதைப் பறிக்க முடியாததால்),  தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்த இத்தலைவி, நெஞ்சுள்ளே வருந்தி, அழுத கண்களோடு இருந்தாள்.  நான் வேறு ஒரு கருத்தைக் (இப் பூவைப் பறிக்க முடியாவிட்டால் வெறொரு பூவைப் பறித்துக்கொள்ளலாம் என்று) கூறவும் அவள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு, அங்கு வந்த ஒரு ஆண்மகனிடம் தனக்கு உதவுமாறு கேட்கத் துணிந்தாள். பின்னர் இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். இது ஊழ்வினையினாலே வரையறுத்து முடிவு செய்யப்பட்டதே அன்றி, அத்தலைவரின் தகுதியை அளவிடுவதற்கு நாம் யார்? இந்தக் காதலில் குற்றம் ஒன்றும் இல்லை. நான் கூறுவதைக் கேட்பாயாக!


சிறப்புக் குறிப்பு: ”ஒருநாள், தலைவி அவள் ஒரு நீர்நிலையில் உள்ள பூவைப் பறிக்க விரும்பினாள். ஆனால், நீரில் இறங்கி அவளால் அந்தப் பூவைப் பறிக்க முடியவில்லை. அப்பொழுது, அங்கு வந்த ஆண்மகன் ஒருவன், அவளுக்கு அந்தப் பூவைப் பறித்துக் கொடுத்தான். அதுமுதல், இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினார்கள். இப்பொழுது, தன் காதலனைக் காணா முடியாமல் காவலில் வைக்கப்பட்டதால், அவள் வருத்தத்தோடு, உடல் மெலிந்து காணப்படுகிறாள்என்று விளக்கம் அளித்துத் தலைவியின் களவொழுக்கத்தைத் தோழி செவிலித்தாய்க்குத் தெரியப்படுத்தினாள் (அறத்தொடு நின்றாள்).  இவ்வாறு, ஊழ்வினையால், தலைவன் தலைவியைச் சந்தித்து, அவளுக்குப்   பூவைப் பறித்துக் கொடுத்து, அவர்கள் ஒருவரை காதலிக்க ஆரம்பிப்பது, “பூத்தரு புணர்ச்சிஎன்று அழைக்கப்படுகிறது

365. தோழி கூற்று

365. தோழி கூற்று
பாடியவர்: மதுரை நல்வெள்ளியார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : யான் வரையுந்துணையும் ஆற்றவல்லளோ?” என்று வினாய கிழவற்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்காகத் தலைவன் பொருள் தேடுவதற்குச் செல்ல விரும்புகிறான். நான் பொருளோடு திரும்பிவந்து தலைவியைத் திருமணம் செய்துகொள்ளும்வரை அவளால் என் பிரிவைப் பொறுத்துக்கொண்டு இருக்க முடியுமா?” என்று கேட்ட தலைவனை நோக்கித் தோழி, “அவளால் அதுவரை பொறுத்துக்கொண்டு இருக்க முடியாதுஎன்றாள்.

கோடீர் இலங்குவளை நெகிழ நாளும்
பாடில கலிழ்ந்து பனியா னாவே
துன்னரும் நெடுவரைத் ததும்பிய அருவி
தன்ணென் முரசின் இமிழிசை காட்டும்
மருங்கிற் கொண்ட பலவிற்
பெருங்கல் நாடநீ நயந்தோள் கண்ணே. 

கொண்டு கூட்டு: துன்னரும் நெடுவரைத் ததும்பிய அருவிதன்ணென் முரசின் இமிழிசை காட்டும்மருங்கிற் கொண்ட பலவிற் பெருங்கல் நாட ! நீ நயந்தோள் கண், கோடுஈர் இலங்குவளை நெகிழ,  நாளும் பாடுஇல கலிழ்ந்து, பனி ஆனா.

அருஞ்சொற்பொருள்: கோடு = சங்கு ; ஈர்தல் = அறுத்தல்; இலங்குதல் = விளங்குதல்; பாடுஇல= கண்படுதல் இல்லாமல் ( உறங்காமல்); aஅனா = நீங்கா; கலிழ்தல் = அழுதல்; துன்னரும் = நெருங்குதற்கரிய; வரை = மலை; இமிழ்தல் = ஒலித்தல்; மருங்கு = பக்கம்; நாடன் = குறிஞ்சி நிலத்தலைவன்; நயந்தோள் = விரும்பப்பட்டவள்.


உரை: நெருங்குதற்கரிய நெடிய மலையிலிருந்து ததும்பி  வழியும் அருவியானது, தண் என்ற ஒலியையுடைய முரசைப்போல,  ஒலிக்கின்ற இசையை வெளிப்படுத்தும் பக்கத்தில்,  பலாமரங்கள் உள்ள, பெரிய மலையையுடைய குறிஞ்சி நிலத்தலைவனே! உன்னால் விரும்பப்பட்ட தலைவியின் கண்கள், சங்குகளை அறுத்துச் செய்த, விளங்குகின்ற வளையல்கள் நெகிழ,  நாள்தோறும் உறக்கம் இல்லாதனவாகி, அழுவதால், கண்ணீர்த் துளிகள் நீங்காமல் இருக்கும்.

364. இற்பரத்தை கூற்று

364. இற்பரத்தை கூற்று
பாடியவர்: ஔவையார்.
திணை: மருதம்.
கூற்று : வேறொரு பரத்தை தன்னைப் புறங்கூறினாளெனக் கேட்ட இற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது.
கூற்று விளக்கம்: இற்பரத்தை என்பவள் ஒருவனுக்கே உரிமையுடைய பரத்தை. சேரிப்பரத்தை என்பவள் அத்தகைய வரையறை இல்லாமல் பலரோடும் உறவுகொள்ளும் பொதுமகள். தலைவனுக்கு ஒரு இற்பரத்தை இருந்தாள். அவளைப் பற்றிச் சேரிப்பரத்தை ஒருத்தி புறங்கூறியதாக அவள் கேள்விப்பட்டாள். “மகளிர் துணங்கைக் கூத்தை ஆடும் நாளும் வந்ததுஅப்பொழுது, தலைவன் தானாகவே வந்து என்னிடம் அன்பு கொள்வதை அனைவரும் அறியலாம்என்று தலைவனின் இற்பரத்தை , சேரிப்பரத்தையின் தோழியர் காதுகளில் கேட்குமாறு கூறுகிறாள்.

அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉம் ஊரன்
பொற்கோல் அவிர்தொடித் தற்கெழு தகுவி
எற்புறங் கூறும் என்ப தெற்றென
வணங்கிறைப் பணைத்தோள் எல்வளை மகளிர்
துணங்கை நாளும் வந்தன அவ்வரைக்
கண்பொர மற்றதன் கண்ணவர்
மணங்கொளற் கிவரும் மள்ளர் போரே. 

கொண்டு கூட்டு: அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய் வாளை நாளிரை பெறூஉம் ஊரன் பொற்கோல் அவிர்தொடித் தற்கெழு தகுவிஎற்புறங் கூறும் என்ப! தெற்றென
வணங்கு இறைப் பணைத்தோள் எல்வளை மகளிர் துணங்கை நாளும் வந்தன. அவ்வரைகண்பொர, மற்று அதன்கண் அவர் மணங்கொளற்கு மள்ளர் போர் இவரும். 

அருஞ்சொற்பொருள்: அரில் = பின்னல்; பவர் = கொடி; வாளை = வாளை மீன்; ஊரன் = மருதநிலத் தலைவன்; கோல் = திரட்சி; அவிர் = ஒளி; தொடி = வளையல்; தகுவி = தகுதி உடையவள்; தெற்றென = தெளிவாக; இறை = முன்கை; பணை = மூங்கில்; எல் = ஒளி; துணங்கை = முடக்கிய இருகைகளையும் விலாப்புடைகளில் ஒற்றி அடித்துக்கொண்டு அசைந்தாடும் ஒருவகைக் கூத்து; அவ்வரை = +வரை = அக்காலத்தில் (அப்பொழுது); கண்பொர = ஒருவர் கண்பார்வை மற்றொருவர் கண்பார்வையை எதிர்கொள்ளுதல்; இவர்தல் = விரும்புதல்; மள்ளர் = வீரர்.

உரை: பின்னிக் கிடக்கும் பிரப்பங்கொடியைப் போன்ற, கோடுகள் பொருந்திய முதுகையுடைய நீர் நாயானது, வாளை மீனை நாள் தோறும் உணவாகப் பெறுகின்ற ஊருக்குத் தலைவன் அவன். பொன்னாலாகிய திரண்டு விளங்குகின்ற வளையல்களை அணிந்த, தன்னைத் தானே தகுதியுள்ளவள் என்று சொல்லிக் கொள்ளும் சேரிப்பரத்தை, என்னைப் பற்றிப் புறங்கூறினாள் என்று சொல்லுகின்றனர். அவள் கூறுவது உண்மையா பொய்யா என்பது விளங்கும்படி, வளைந்த முன்கையையும், மூங்கிலைப் போன்ற தோள்களையும் உடைய , ஒளிபொருந்திய வளையல்களை அணிந்த பெண்கள், துணங்கைக் கூத்தாடும் நாட்களும் வந்தன; அப்பொழுது, ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண் மாறுபட்டு, அத்துணங்கைக் கூத்தில், அம் மகளிரைத் தழுவிக்கொள்ளும் பொருட்டு, வீரர்களின் விளையாட்டுப் போரும் விருப்பத்தோடு நடைபெறும்.


சிறப்புக் குறிப்பு: விழாக்காலத்தில், மகளிர் துணங்கை கூத்து ஆடுவர். அவர்களோடு ஆடவரும் கலந்து ஆடுவர். ஆடவர் தாம் யாரை விரும்புகிறார்களோ அவர்களோடு சேர்ந்து ஆடுவர். ”இப்பொழுது விழாக்காலம் வந்தது. துணங்கைக் கூத்து நடைபெறப்போகிறது. அப்பொழுது தலைவனும் வருவான். அவன் தானாகவே வந்து, என்னோடுதான் சேர்ந்து ஆடுவான். அதைக் கண்டதும், அவன் என்னை விரும்புவதை யாவரும் அறிந்துகொள்வர். ” என்று தலைவனின் இற்பரத்தை கூறுகிறாள்.

363. தோழி கூற்று


363. தோழி கூற்று

 பாடியவர்: செல்லூர்க் கொற்றனார்.
திணை: பாலை.
கூற்று : பிரிவுணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிந்து செல்ல நினைத்தான். தான் பிரிந்து செல்லப் போவதைப் பற்றித் தலைவியிடம் கூறினால் அவள் அதற்கு உடன்பட மாட்டாள் என்று எண்ணிய தலைவன், தோழியிடம் தான் செல்லப் போவதைப் பற்றிக் கூறுகிறான். அதைக் கேட்ட தோழி, “ இனிய தலைவியைப் பிரிந்து கொடிய பாலை நிலவழியில் செல்லுவது இனிதாகுமோ?” என்று வினவுகிறாள்.

கண்ணி மருப்பின் அண்ணநல் லேறு
செங்கோற் பதவின் வார்குரல் கறிக்கும்
மடக்கண் மரையா நோக்கிவெய் துற்றுப்
புல்லரை உகாஅய் வரிநிழல் வதியும்
இன்னா அருஞ்சுரம் இறத்தல்
இனிதோ பெரும இன்றுணைப் பிரிந்தே. 

கொண்டு கூட்டு: பெரும! கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு, செங்கோற் பதவின் வார் குரல் கறிக்கும் மடக்கண் மரையா நோக்கி, வெய்துற்றுப் புல்அரை உகாஅய் வரிநிழல் வதியும்இன்னா அருஞ்சுரம் இன்துணைப் பிரிந்து  இறத்தல் இனிதோ?

அருஞ்சொற்பொருள்: கண்ணி = தலைமேற் சூடப்படும் மாலை; மருப்பு = கொம்பு; அண்ணல் = தலைமைவாய்ந்த (பெருமிதமான தோற்றமுள்ள); கோல் = தண்டு; பதவு = அறுகம்புல் ; வார் குரல் = நீண்ட கொத்து; மரையா = மரை + = காட்டுப் பசு; கறித்தல் = கடித்துத் தின்னுதல்; வெய்துறுதல் = பெருமூச்சு விடுதல்; உகாய் = ஒருவகை மரம்; வரி = புள்ளி; வதியும் = தங்கியிருக்கும்; சுரம் = பாலை நிலம்; இறத்தல் = கடத்தல்.

உரை:  பெரும! கொம்பில் மாலை அணிந்த, பெருமிதமான தோற்றத்தையுடைய நல்ல மலை எருது, சிவந்த தண்டுகளையுடைய அறுகினது நீண்ட கொத்தைக் கடித்துத் தின்னும், மடப்பம் பொருந்திய கண்ணையுடைய காட்டுப் பசுவைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டுக்கொண்டு, சிறிய அடிப்பக்கத்தையுடைய உகாஅய் மரத்தின் புள்ளிகளையுடைய நிழலில் தங்குகின்ற, துன்பம் நிறைந்த கடத்தற்கரிய பாலை நிலத்தை, இனிய துணைவியைப் பிரிந்து கடத்தல் இனிமை உடையதோ?


சிறப்புக் குறிப்பு: ”வரி நிழல்என்றது, பாலை நிலத்தின் வெப்பத்தின் கொடுமையால், உகாய் மரத்தில் இலைகள் அடர்த்தியாக இல்லாததால், நிழலும் அடர்த்தியாக இல்லை என்பதைக் குறிக்கிறது. தான் விரும்பும் இனிமையான தலைவியைவிட்டுக் கொடிய பாலைலநிலத்தைக் கடந்து செல்லுவது  இனிமையானதன்று என்று கூறித் தலைவன் பிரிந்து செல்லுவதைத் தோழி தடுக்க முயற்சி செய்கிறாள். காட்டில் மேய்கின்ற பொழுது, எருதின் கொம்பில் சுற்றிய கொடி, தலையில் அணியப்படும் மாலைபோல் தோற்றம் அளித்ததால், “கண்ணி மருப்புஎன்று குறிப்பிடப்பட்டது.