Monday, August 29, 2016

238. தோழி கூற்று

238. தோழி கூற்று

பாடியவர்: குன்றியனார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: மருதம்.
கூற்று: தலைமகன் பரத்தையின் மறுத்தந்து வாயில் வேண்டித் தோழியிடைச் சென்று தெளிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது. (மறுத்தந்து - மீண்டு வந்து, தெளித்தல் - சூள் கூறித் தேற்றுதல்.)
கூற்று விளக்கம்: பரத்தையிடம் இருந்து மீண்டுவந்த தலைவன், தலைவியோடு வாழ விரும்புகிறான். அவன் தன் மனைவியின் தோழியைத் தனக்காகத் தலைவியிடம் தூதுசெல்லுமாறு வேண்டுகிறான்.  “நான் என் தவறை உணர்ந்தேன். இனி, இது போன்ற தவறு செய்ய மாட்டேன்.” என்று தோழியிடம் சூளுரைக்கிறான். தோழி , “நான் உன்னுடைய சூளை நம்ப மாட்டேன். என் நலத்தைத் திருப்பித் தந்துவிட்டு, உன் சூளை நீயே எடுத்துக்கொண்டு செல்வாயாக.” என்று கூறித் தோழி அவனுக்காகத் தலைவியிடம் தூது போக மறுக்கிறாள்.

பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்ட லயரும்
தொண்டி யன்னவென் நலந்தந்து
கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே. 

கொண்டு கூட்டு: மகிழ்ந! பசு அவல் இடித்த கருங்காழ் உலக்கை ஆய்கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றிஒள் தொடி மகளிர் வண்ட ல் அயரும் தொண்டி அன்ன என் நலன் தந்து, நின் சூள் கொண்டனை சென்மோ!

அருஞ்சொற்பொருள்: பாசவல் = பசு+அவல் = பசுமையான அவல்; காழ் = வயிரம்; ஆய் = அழகு; வரம்பு = வரப்பு; துயிற்றி = படுக்கைக்குப் பக்கத்தில் வைத்து; வண்டல் = சிறுமியர் வீடுகட்டி விளையாடும் விளையாட்டு; அயர்தல் = விளையாடுதல்; தொண்டி  - அழகும் சிறப்பும் மிகுந்த துறைமுகமாக விளங்கிய ஒரு  வளமான நகரம். மகிழ்நன் = மருத நிலத் தலைவன்.

உரை: மகிழ்நபச்சை அவலை இடித்த, கரிய வயிரம் பாய்ந்த உலக்கையை, அழகிய கதிரை உடைய நெற்பயிர் நிறைந்த வயல் வரப்பில் படுக்க வைத்துவிட்டு,  ஒளி பொருந்திய  வளையல்களை உடைய பெண்கள் விளையாடுகின்ற, தொண்டி என்னும் பட்டினத்தைப் போன்ற, எனது பெண்மை நலத்தைத் தந்து விட்டு,  உன் சூளை நீயே எடுத்துக் கொண்டு செல்வாயாக.
   

சிறப்புக் குறிப்பு: பெண்களின் அழகுக்கு அழகான நகரத்தை ஒப்பிடுவது வழக்கம். தலைவிக்கும் தனக்கும் இருந்த ஒற்றுமை குறித்து தலைவியின் நலனைத் தன் நலமாகத் தோழி  கருதுகிறாள்

No comments:

Post a Comment