Monday, August 29, 2016

241. தலைவி கூற்று

241.  தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான்தலைவனின் பிரிவைத் தலைவி பொறுத்துக்கொண்டு இருக்கிறாள். அவளைக் கண்டு ஆறுதல் கூற, தோழி வருகிறாள். தோழியிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஊர்ப்பொதுவிடத்தில், சில சிறுவர்கள் ஆரவாரத்தோடு செய்த ஒலியைத் தலைவனுக்குரிய மலை எதிரொலித்தது. அதைக் கேட்டுத் தலைவியின் வருத்தம் அதிகமாகிறது. அவளை அறியாமலேயே, அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகுகியது. அதைக் கண்ட தோழி, “பிரிவைப் பொறுத்துக்கொள்ள முயற்சி செய். அவர் விரைவில் வந்துவிடுவார்என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். தலைவி, “ நான் பொறுத்துக்கொண்டுதான் இருக்க முயற்சி செய்கிறேன். ஆனால், என் கண்கள்தாம்  அவரை முதன்முதலாகக் கண்டன. அதனால், அவை, அவரோடு கொண்ட  நட்பினால், உரிமையோடு அழுகின்றனஎன்று விடை கூறித் தன் வருத்தத்தை வெளிப்படுத்தாமல் மறைக்க முயற்சி செய்கிறாள்.

யாமெங் காமந் தாங்கவும் தாந்தம்
கெழுதகை மையி னழுதன தோழி
கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர்
மன்ற வேங்கை மலர்பத நோக்கி
ஏறா திட்ட ஏமப் பூசல்
விண்டோய் விடரகத் தியம்பும்
குன்ற நாடற் கண்டவெங் கண்ணே.

கொண்டு கூட்டு: தோழியாம் எம் காமம் தாங்கவும், கன்று ஆற்றுப் படுத்த புன்தலைச் சிறாஅர் மன்ற வேங்கை மலர்பதம் நோக்கி, ஏறாது இட்ட ஏமப் பூசல்விண்தோய் விடரகத்து இயம்பும் குன்றம் நாடன் கண்ட எம் கண், தாம் தம் கெழுதகைமையின் அழுதன.

அருஞ்சொற்பொருள்: தாங்குதல் = வெளிப்படாது அடக்குதல்; கெழுதகைமை = நட்புரிமை; ஆற்றுப் படுத்தல் = மேய்ச்சல் நிலத்தை நோக்கி ஓட்டிச் செல்லுதல்புன்தலை =சிறிய தலை; மன்றம் = பொதுவிடம்; பதம் = பருவம்; ஏமம் = இன்பம்; பூசல் = ஆரவாரம்; விடர் = பிளவு; இயம்புதல் = எதிர் ஒலித்தல்.

உரை: தோழி! நான் என்  காம நோயைப் பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். கன்றுகளை மேய்ச்சல் நிலத்தை நோக்கிச் செலுத்திக்கொண்டு செல்லும்  சிறிய தலையை உடைய சிறுவர்கள், பொதுவிடத்தில் உள்ள வேங்கை மரம், மலரும் பருவத்தில் இருப்பதைப் பார்த்து, அம் மரத்தின் மேல் ஏறாமல், மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தார்கள். அவர்கள் ஆரவாரத்தோடு எழுப்பிய ஒலி, வானத்தை அளாவிய மலைக்குகைகளிலிருந்து எதிரொலிக்கிறது. எம் கண்கள் அத்தகைய  குன்றுகளை உடைய நாட்டிற்குத் தலைவனை முதலில்  கண்டு காதல் கொண்டதால், தம்முடைய நட்புரிமையால், தலைவர் பிரிந்ததைக் கருதித் தாமே அழுதன.


சிறப்புக் குறிப்பு: வேங்கை மரத்தில் கடவுள் இருப்பதாக நம்பிக்கை இருந்ததால், எவரும்  வேங்கை மரத்தில் ஏறும் வழக்கம் இல்லை என்று தெரிகிறது.

No comments:

Post a Comment