Sunday, April 26, 2015

பாடல் - 10

10. மருதம் - தோழி கூற்று

பாடியவர்: ஓரம்போகியார். ஐங்குறுநூற்றில் மருதம் பற்றிய நூறு செய்யுட்களையும் இயற்றியவர் இவர்.  மற்றும், இவர் அகநானூற்றில் இரண்டு செய்யுட்களையும் (286, 316), குறுந்தொகையில் ஐந்து செய்யுட்களையும் ( 10, 70, 122, 127, 384), நற்றிணையில் இரண்டு செய்யுட்களையும் (20, 360) இயற்றியுள்ளார்.  இவர் சேரமான் ஆதன் அவினி, சோழன் கடுமான் கிள்ளி, பாண்டியன், மத்தி, விராஅன் ஆகியோரைப் பாடியுள்ளார். 

பாடலின் பின்னணி: பரத்தையோடு தொடர்பு காரணமாகத் தலைவியைப் பிரிந்து வாழ்ந்த தலைவன், இப்பொழுது தலைவியைக் காண வருகிறான். அங்கு, தலைவியின் தோழி வருகிறாள். தனக்காகத் தோழியைத் தலைவியிடம் தூது போகுமாறு தலைவன் வேண்டுகிறான்.   தலைவன் செய்த கொடுமைகளையும் தலைவியின் நற்பண்புகளையும் நன்கு அறிந்த தோழி, “தலைவன் செய்த கொடுமைகளை மறைத்த தலைவி, இப்பொழுது அவன் வெட்கப்படுமாறு அவனை ஏற்றுக் கொள்ளப்போகிறாள்என்று தனக்குத் தானே கூறிக்கொண்டு தலைவியை நோக்கிச் செல்கிறாள்.

யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலின் நாணிய வருமே. 

அருஞ்சொற்பொருள்: யாய் = தலைவி (இங்கு தலைவியைக் குறிக்கிறது.); விழவு = உற்சவம், விழா, பாராட்டுதல்; முதல் = காரணம்; ஆட்டி = பெண்பால் விகுதி, பெண், மனைவி; இணர் = கொத்து; பை = பசுமை; படீஇயர் = படும்படி; வாங்கிய = வளைத்த; கமழ்தல் = மணத்தல்; சினை = கிளை; மென்சினை = மெல்லிய கிளை; காஞ்சி ஊரன் = காஞ்சி மரத்தை உடைய ஊரன்; கரத்தல் = மறைத்தல்.

உரை: தலைவன் செல்வம் பெற்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு முதல் காரணமாக இருப்பவள் தலைவி. தலைவனின் ஊரில் மெல்லிய கிளைகளை உடைய காஞ்சி மரங்கள் உள்ளன. அந்த மரங்களின் கிளைகளை உழவர்கள் வளைத்தால், பயற்றின் கொத்தைப்போல் இருக்கும் பூங்கொத்துக்களில் உள்ள பசுமையான பூந்தாதுகள் அவர்கள் மேல் படும்படி விழுகின்றன. அத்தகைய காஞ்சி மரங்களை உடைய ஊரனின் கொடுமைகளை யாருக்கும் தெரியாமல் தலைவி மறைத்தாள். இப்பொழுது, அவன் நாணும்படி அவனை ஏற்றுக்கொள்ள அவள் வருகிறாள்.

விளக்கம்: இப்பாடலில் கருப்பொருளாக உழவர்கள், காஞ்சி மரம், பயறு ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆகவே, இப்பாடல் மருதத் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.


உழவர்கள் வளைத்ததால் கிளைகளிலிருந்து விழும் பூந்தாதுக்கள் போல் தலைவனின் பரத்தமை உள்ளது என்று உள்ளுறை உவமாக இப்பாடலில் புலவர் குறிப்பிடுகிறார்

No comments:

Post a Comment