Tuesday, April 14, 2015

கடவுள் வாழ்த்து

குறுந்தொகை

முன்னுரை

தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம். தொல்காப்பியம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல். அந்த நூலில், இருநூறுக்கும் மேலான இடங்களில், தொல்காப்பியர், “என்ப”, “மொழிப”, ”கூறுப”, “என்மனார் புலவர்என்று மற்ற இலக்கண நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார்.  இதிலிருந்து, தொல்காப்பியத்துக்கு முன்னரே பல இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. எள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் எண்ணெய். அதுபோல், இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம் இருக்க முடியும். ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் இல்லை. தமிழில் இருந்த இலக்கியம் எல்லாம் செய்யுள்களாகத்தான் இருந்தன. அவை எல்லாம் தனிப்பாடல்களாக இருந்தன.
அகத்திணையும் புறத்திணையும்
பாடல்களை அகத்திணைப் பாடல்கள் புறத்திணைப் பாடல்கள்  என்று இருவகையாகத் தொல்காப்பியம் பிரிக்கிறது. திணை என்ற சொல் நிலம்’, ‘இடம்’, ’குடி’, ‘ஒழுக்கம்’, ‘பொருள்என்ற பல பொருட்களையுடைய ஒரு சொல். தமிழ் இலக்கியத்தில் திணை என்ற சொல் பொருள்என்பதைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அகம், புறம் என்று பிரிப்பது தமிழ் இலக்கிய மரபு. தலைவனும் தலைவியும் தாமே ஓரிடத்தில் சந்தித்துக் காதலித்து, உள்ளத்தால் ஒன்றுபட்டுப் பின்னர் முறையாகத் திருமணம் செய்துகொண்டு வாழும் வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் பற்றிய செய்திகள் வெளிப்படையாகப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவையாகையால், அவை அகப்பொருள் எனப்படும். அகப்பொருளைப்பற்றிப் பாடும் பாடல்கள் அகத்திணையில் அடங்கும். பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம், அன்புடன் கூடிய காதல் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து திணைகளாகப் பிரிக்கிறது. காதலைத் தவிர வாழ்க்கையின் மற்ற கூறுபாடுகள் புறப்பொருள் எனப்படும். போர், வீரம், வெற்றி, புகழ், கொடை, நிலையாமை முதலிய பொருட்களை மையமாகக்கொண்ட பாடல்கள் புறத்திணையில் அடங்கும். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய திணைகள் புறத்திணையின் ஏழு பிரிவுகள் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

சங்க இலக்கியம்
சங்க காலம் என்பது கி.மு. 1000 முதல் கி.பி. 200 வரை என்று சிலரும், கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை என்று சிலரும் கி.மு 300 முதல் கி. பி. 300 வரை என்று வேறு சிலரும் கூறுகின்றனர். அக்காலத்தில் இருந்த பாடல்களை நூல்களாகத் தொகுக்குமாறு பிற்கால மன்னர்கள்  புலவர்களுக்கு ஆணையிட்டனர். அதற்கேற்ப, சங்க காலத்தில் இருந்த பாடல்களில் நீண்ட பாடல்களில் பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, புலவர்கள் பத்துப்பாட்டு என்று அழைக்கப்படும் பத்து நூல்களாக்கினார்கள். மூன்று முதல் 140 அடிகளுடைய  பாடல்களை எட்டு நூல்களாகப் புலவர்கள் தொகுத்தார்கள்.

பத்துப்பாட்டு
கீழ்வரும் பாடலில் பத்துப்பாட்டு நூல்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநெல்வாடை, குறிங்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்.

இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகியவை ஆற்றுப்படை என்னும் வகையைச் சார்ந்தவை. இவை ஐந்து நூல்களும் மதுரைக் காஞ்சியும் புறத்திணையைச் சார்ந்தவை. முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு மற்றும் பட்டினப்பாலை ஆகியவை அகத்திணையைச் சார்ந்தவை. நெடுநல்வாடை அகத்திணையைச் சார்ந்ததா அல்லது புறத்திணையைச் சார்ந்ததா என்பது ஆய்வுக்குரியது. பத்துப்பாட்டில் உள்ள பாடல்களுள் முல்லைப்பாட்டு 103 அடிகளை உடைய மிகச் சிறிய பாடலாகும்; மதுரைக் காஞ்சி 782 அடிகளை உடைய மிகப் பெரிய பாடலாகும்.

எட்டுத்தொகை நூல்கள்
            நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்று அழைக்கப்படுகின்றன.   கீழ்வரும் பாடலில் எட்டுத்தொகை நூல்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.
·         எட்டுத்தொகை நுல்களில் அகத்திணையைச் சார்ந்தவை:நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.
·         புறத்திணையைச் சார்ந்தவை: புறநானூறு, பதிற்றுப்பத்து.
·         அகமும் புறமும் கலந்தது பரிபாடல்.
எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இதில் அடங்கிய எட்டு நூல்களும் ஒவ்வொரு நூலும் பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டவை. இவற்றில் பல பாடல்களில் அவற்றை எழுதியவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. இத்தொகையுள் ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உண்டு. ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102.
எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்து 3 அடிகள் சிற்றெல்லையாகவும் 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. இந்நூல்கள் கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். தொகுக்கப்பட்ட காலம் கி.பி.3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர்.
ஐங்குறுநூறு:           3 முதல் 5 அடிகளுடைய பாடல்கள்
குறுந்தொகை:         4 முதல் 8 அடிகள் உடைய பாடல்கள்; பாடல்கள் 307 மற்றும் 391       ஆகியவை 9 அடிகளைக் கொண்டவை
நற்றிணை:               9 முதல் 12 அடிகளுடைய பாடல்கள்
பரிபாடல்:                32 முதல் 140அடிகளுடைய பாடல்கள்
பதிற்றுப் பத்து:        8 முதல் 57 அடிகளுடைய பாடல்கள்
கலித்தொகை:         11 முதல்80 அடிகளுடைய பாடல்கள்
அகநானூறு:            13 முதல் 31 அடிகளுடைய பாடல்கள்
புறநானூறு:               4 முதல் 40 அடிகளுடைய பாடல்கள்

குறுந்தொகையைப் பற்றிய சில செய்திகள்
·         கடவுள் வாழ்த்து: பாடியவரின் பெயர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
·         பாடல்களின் எண்ணிக்கை: 402
·         தொகுத்தவர்: பூரிக்கோ
·         தொகுப்பித்தவர்: தெரியவில்லை
·         ஐந்திணைப் பாடல்கள்
o   குறிஞ்சி – 147; நெய்தல் – 71; பாலை -90; முல்லை – 45; மருதம் - 48
·         பாடிய புலவர்கள்: 203 புலவர்கள்.  பெண்பாற் புல்வர்களின் எண்ணிக்கை - 13
·         பெயர் தெரியாத புல்வர்கள்10; சில புலவர்களின் பெயர்கள் பாடல்களின் அடிகளைக் கொண்டவையாக உள்ளன. உதாரணம்: ஓரேருழவர், காக்கைப் பாடினியார், செம்புலப்புயல் நீரார்.
·          பதிப்பித்தவர்: சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது, பல சுவடிகளைச் சோதித்து முதன்முதலில் திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன் என்பவர், தான் எழுதிய புதிய உரையோடு குறுந்தொகையை 1915 இல் பதிப்பித்தார்.
·         உரைகள்: முதன் முதலில் குறுந்தொகைக்கு உரை எழுதியவரின் பெயர் பேராசிரியர். ஆனால் அவர்குறுந்தொகையில் உள்ள முதல் 380 பாடல்களுக்கு மட்டுமே உரை எழுதினார். நச்சினார்க்கினியர் என்பவர் குறுந்தொகையில் உள்ள மற்ற பாடல்களுக்கும் உரை எழுதி, பேராசிரியர் உரையுடன் சேர்த்தார். ஆனால் அந்த உரை இப்பொழுது கிடைக்கவில்லை. பின்னர்,.வே. சாமிநாத ஐயர், தமிழண்ணல், . வே சுப்பிரமனியன், புலியூர் கேசிகன், துரை. இராசாராம் ஆகியோரும் வேறு பலரும் தங்கள் உரைகளை வெளியிட்டுள்ளனர்.
·         வரலாற்றுச் செய்திகள்: குறுந்தொகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன.
உள்ளுறை உவமம், இறைச்சி
 புலவர் விளக்கிக் கூறக் கருதும் பொருள், 'பொருள்'அல்லது 'உவமேயம்' எனப்படும். அப்பொருளை விளக்கவோ அழகுபடுத்தவோ அவர் இயைத்துக் கூறும் மற்றொரு பொருள்'உவமை' அல்லது 'உவமானம்' எனப்படும்.தாமரை போன்ற முகம்என்று புலவர் கூறினால், புல்வர் விளக்கக் கருதிய பொருள் முகம். ஆகவே, “முகம்உவமேயம். முகத்தை விளக்குவதற்கு, புலவர் முகத்திற்குத் தாமரையை ஒப்பிடுகிறார். இங்கு, தாமரை உவமானம். புலவர் உவமையை (உவமானத்தை) மட்டும் கூறி அவர் விளக்க விரும்பிய பொருளை மறைமுகமாக நமது கற்பனைக்கு விட்டுவிட்டால் அது உள்ளுறை உவமம். உள்ளுறை உவமத்திற்கு அப்பாலும் அதனோடு தொடர்புடைய ஒரு பொருள் இருந்தால் அது இறைச்சி எனப்படும். உள்ளுறை உவமமும் இறைச்சியும் அகத்திணைப் பாடல்களில் மட்டும் வரும். இவை இரண்டும் தெய்வம் ஒழிந்த ஏனைய கருப்பொருட்கள் மூலம் பிறக்கும்.

குறுந்தொகையில் உள்ள பல பாடல்களில் புலவர்கள் உள்ளுறை உவமத்தைப் பயன்படுத்தியுள்ளனர். உள்ளுறை உவமத்தையும் இறைச்சியையும் புரிந்துகொள்வதற்கு குறுந்தொகையிலிருந்து  ஒரு உதாரணம்.

குறுந்தொகை 69,  கடுந்தோட் கரவீரனார்
குறிஞ்சித் திணை தோழி சொன்னது 

கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே
.
பொருள்: கரிய கண்ணையுடைய ஆண் குரங்கு ஒன்று மரணம் அடைந்ததால், அதன் மீது காதல் கொண்ட  அதன் துணையாகிய பெண்குரங்கு, முதிர்ச்சி அடையாத தன் குட்டியை உறவினர்களிடம் கொடுத்து விட்டு, உயர்ந்த மலையின் சரிவிலிருந்து குதித்து மரணம் அடைந்த மலை நாடனே!  வாழ்த்துக்கள்!  நீ இனி நடு இரவில்  இங்கு வராதே.  அவ்வாறு நீ வந்தால் நானும் தலைவியும் மிகவும் வருத்தம் அடைவோம்.

உள்ளுறை உவமம்
     ஆண் குரங்கு இறந்ததால், கைம்மையுடன் வாழ விரும்பாத பெண் குரங்கு உயிரைப் போக்கிக் கொண்டதைப்போல், நீ இரவில் வரும்பொழுது புலி, யானை, பாம்பு ஆகியவற்றின் கொடுமையால் இறக்க நேர்ந்தால், தலைவியும் கைம்மையுடன் வாழ விரும்பாது இறந்துவிடுவாள்.

இறைச்சி

     தலைவ! உன் நாட்டில் அஃறிணைப் பொருளாகிய பெண்குரங்குகூடத் தன் துணை இறக்கத் தான் உயிர் வாழாது இறக்குமெனின், நீ இறந்தால் எம் தலைவி மட்டும் எப்படி உயிர் வாழ்வாள்? அவளுடைய உணர்ச்சியை உன்னால் புரிந்துகொள்ள முடியாதா

5 comments:

  1. ._குன்றத்தை ஆண்டுவரும் ஆண்குரங்கு கைவிட்டால்,
    தன்வாழ்வை நீட்ட விரும்பாத பெண்குரங்கு,
    வாழ்வுஅறியாக் குட்டிகளைச் சுற்றத்துள் விட்டுவிட்டு
    உச்சிமலை ஏறி, குதித்துத்தன் உயிர்விடும்
    குன்றுகளைக் கொண்ட_ மலைவேந்தன், நள்ளிரவும்
    வாரமல் போனால்** முடிவெடுப்போம் நாமே!
    --

    ReplyDelete
    Replies
    1. வாழ்க ஐயா ... குறுந்தொகைக்கு விளக்கத்தை மருட்பாவில் அமைத்திருக்கிறேன் ( வெண்டளை பயின்று அகவலில் முடியும்) .... 200க்கும் மேற்பட்டப் பாடல்களில் முன்னோரின் விளக்கத்திலிருந்து முறன்பட்டிருக்கிறேன் .. இந்தப்’பா’விலும் தான்

      பொருள் :
      கருங்கல் – மலைக்கல் பாறைக்கல்
      தா – கைப்பற்றுதல் சம்பாதித்தல் இயற்றுதல்
      பிறிது - வேறானது
      வாரல் – வரவேண்டாம்
      வாழித்தல் - மதர்த்துப்போதல்
      வாழி - 'வாழ்க' என்னும் பொருளில் வரும் வியங்கோட்சொல் / ஓர் அசைச்சொல்.

      செய்தி : ஆண்விலங்கு விலகினால் பெண்விலங்கே வாழாத ஊரில் , பெண் என்ன முடிவெடுப்பாள் சொல் !











      Delete
  2. இணையத்தில் உலாவும் விளக்கங்களில் தங்களின் விளக்கத்தையே எனக்கு மிக நெருக்கமாக உணர்ந்தேன் ஐயா. மிக நன்றி.. வாழ்த்துகள்

    ReplyDelete