Sunday, April 26, 2015

பாடல் - 14

14. குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடியவர்: தொல்கபிலர். இவர் அகநானூற்றில் ஒரு செய்யுளும் (282), குறுந்தொகையில் ஒரு செய்யுளும் (14), நற்றிணையில் நான்கு செய்யுட்களும் (114, 276, 328, 399) இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: இந்தப் பாடலைப் புரிந்துகொள்வதற்கு சங்க காலத் தமிழர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். ஆணும் பெண்ணும் தற்செயலாகச் சந்தித்துப் பழக ஆரம்பிப்பது இயற்கைப் புணர்ச்சி என்றும், சந்தித்த பின்னர் ஒருவர் உள்ளத்தைப் ஒருவர் புரிந்துகொண்டு பழகுவது உள்ளப் புணர்ச்சி என்று அழைக்கப்பட்டது. அவர்கள் பலமுறை சந்தித்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டபிறகு அவர்கள் வாழ்க்கையில் அடுத்த நிகழ்வு திருமணம். பெற்றோர்கள் திருமணத்திற்குச் சம்மதிக்காவிட்டல், காதலர்கள் தங்கள் ஊரைவிட்டு வேறு ஊருக்குச் சென்று முறையாகத் திருமணம் செய்துகொள்வது வழக்கம். பெண்ணின் பெற்றொர்கள் திருமணத்திற்குச் சம்மதிக்காவிட்டால், அவர்களைச் சம்மதிக்க வைப்பதற்காக காதலன் மடலேறுவதும் உண்டு.
தன் காதலியைத் தனக்குத் திருமணம் செய்துகொடுக்க அவள் பெற்றொர்கள் மறுத்தாலோ அல்லது தன் காதலி தன்னைச் சந்திக்க மறுத்தாலோ, காதலன் தன் உடம்பில் சாம்பலைப் பூசிக்கொண்டு, தலையில் எருக்கம் பூவாலான மாலையை அணிந்துகொண்டு, காதலியின் உருவம் வரைந்த படமும் அதில் அவள் பெயரையையும் எழுதி, அப்படத்தைக் கையிலேந்தி, பனைமட்டையால் செய்யப்பட்ட குதிரை மீது ஏறி அமர்ந்துகொண்டு அவன் நண்பர்கள் அந்தக் குதிரையை ஊர்வலமாகத் தெருத்தெருவாக இழுத்துச் செல்லும் நிகழ்வு மடலேறுதல் என்று அழைக்கப்பட்டது. மறைமுகமாக இருந்த காதலர்களின் காதல், காதலன் மடலேறுவதால் ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியவரும். அதனால், அவன் காதலி அவனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்போஅல்லது அவள் பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கும் வாய்ப்போ கிடைக்கும்.
இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் தலைவன் தலைவியைக் காணவருகிறான். அவன் வந்த இடத்தில், தலைவிக்குப் பதிலாகத் தோழி வந்திருக்கிறாள். தோழி, “உங்கள் காதல் தலைவியின் தாய்க்குத் தெரிந்துவிட்டது. அவள் தலைவியை வீட்டைவிட்டு வெளியே போகக் கூடாது என்று கூறிவிட்டாள். உன்னைக் காண்பதற்குத் தலைவி மிகுந்த ஆவலாக உள்ளாள். ஆனால், அவள் தாய் சொல்லைத் தட்ட முடியாமல் தவிக்கிறாள். ஆகவே, இனி நீ அவளைக் காண முடியாது.” என்று கூறுகிறாள். தோழி கூறியதைக் கேட்ட தலைவன், மிகுந்த சினத்தோடு, “நான் எப்படியாவது அவளை அடைந்தே தீருவேன். வேண்டுமானால் மடலேறவும் தயங்க மாட்டேன். அப்பொழுது, நான்தான் அவள் கணவன் என்பது இந்த ஊரில் உள்ளவர்கள் தெரிந்துகொள்வார்கள்.” என்று கூறுகிறான்.
மடலேறுவதை வெளிப்படையாகத் தலைவன் இப்பாடலில் கூறாவிட்டாலும், அவன் கூற்று அதைத்தான் குறிக்கிறது என்பது தொல்காப்பியத்தின் களவியலிலிருந்து (தொல்காப்பியம், பாடல் 1048) தெரியவருகிறது .
அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே பெற்றாங்
கறிகதில் அம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவன் இவனெனப்
பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே.

அருஞ்சொற்பொருள்: பொதிதல் = நிறைதல்; செந்நா = சிவந்த நாக்கு; வார்தல் = நேராகுதல்; இலங்குதல் = விளங்குதல்; வை = கூர்மை; எயிறு = பல்; சின்மொழி = சில சொற்கள்; அரிவை = இளம்பெண்; தில் = விழைவுக் குறிப்பு; அம்மஅசைச்சொல்; மறுகு = தெரு;

உரை: என் காதலியின் நாக்கு அமிழ்தம் நிறைந்தது. அவளுடைய பற்கள் கூர்மையானவையாகவும் ஒளியுடையனவாகவும் உள்ளன. பற்களின் கூர்மையைக் கண்டு அவள் நாக்கு அஞ்சுவதால் அவள் அதிகாமகப் பேசுவதில்லை.  நான் அவளை அடைந்தே தீருவேன். வேண்டுமானால் மடலேறவும் தயங்க மட்டேன். நான் அவளை என் மனைவியாகப் பெற்றபின் அந்தச் செய்தியை  இவ்வூரில் உள்ளவர்கள் அறிந்து கொள்வார்கள். இந்த நல்லவளின் கணவன் இவன்தான் என்று பலரும் கூறுவதைக் கண்டு நாங்கள் சிறிது வெட்கப்படுவோம்.

விளக்கம்: மடலேறுவது நாணத் தகுந்த செயல் என்று கருதப்பட்டது. மடலேறத் துணிந்த பொழுது நாணத்தை முற்றிலும் இழந்தாலும், அவர்களைக் கணவன் மனைவியாக மற்றவர்கள் காணும்பொழுது தான் இழந்த நாணத்தை மீண்டும் பெறப்போவதாகத் தலைவன் எண்ணுகிறான்.


இப்பாடலில், உரிப்பொருளாகிய புணர்ச்சி குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்பாடல் குறிஞ்சித்திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது

No comments:

Post a Comment