Tuesday, April 14, 2015

பாடல் - 1

1.   குறிஞ்சிதோழி கூற்று

பாடியவர்: திப்புத் தோளார் (தீப்புத் தேளார், தீப்புத் தோளார், திட்புத் தோளார் என்றும் பாடபேதம் உண்டு). குறுந்தொகையில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான். இப்பாடலைச் சேர்த்து, குறுந்தொகையில் 401 பாடல்கள் உள்ளன. அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் நானூறு பாடல்களே உள்ளன. குறுந்தொகையில் மட்டும் 401 பாடல்கள் உள்ளன. ஆகவே, இப்பாடல் இடைச்செருகலாக, பிற்காலத்தில் சேர்க்கப் பட்டிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

பாடலின் பின்னணி: தலைவன் ஒருவன் தன் காதலியைத் தேடி வருகிறான். வழக்கமாகச் சந்திக்கும் இடத்தில் தலைவியைக் காணவில்லை. தலைவிக்குப் பதிலாக தலைவியின் தோழி அங்கே இருக்கிறாள். தலைவிக்காக அவன் கொண்டுவந்த செங்காந்தள் பூக்களைத் தோழியிடம் கொடுத்து, அவற்றைத் தலைவியிடம் கொடுக்குமாறு தலைவன் வேண்டுகிறான். அவன் மீது தலைவி கோபமாக இருக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்த விரும்பிய தோழி, ”எங்கள் நாட்டில் உள்ள குன்றுகளில் இது போன்ற பூக்கள் கொத்துகொத்தாக உள்ளன.” என்று கூறி, அவன் கொடுக்கும் பூக்களை வாங்கிக்கொள்ள மறுக்கிறாள்.

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே. 

அருஞ்சொற்பொருள்: செங்களம் = சிவந்த போர்க்களம்; அவுணர் = அசுரர்; தேய்த்தல் = அழித்தல்; கோல் = திரட்சி; கோடு = கொம்பு; செங்கோடு =சிவந்த கொம்பு; கழல்தொடி = உழலும் (அசையும்) வளையல்; சேஎய் = சேய் = முருகன்; காந்தள் = காந்தள் பூ; து = நிறைத்தல்.

உரை: போர்க்களம் இரத்தத்தால் சிவக்கும்படி அசுரர்களைக் கொன்று அழித்த சிவந்த திரண்ட அம்பையும், சிவந்த கொம்புகளை உடைய யானையையும், உழலவிடப்பட்ட வீரவளையலையும் உடைய முருகனுக்குரிய இம்மலையானது இரத்தம்போல் சிவந்த காந்தட்பூக்களின் குலைகளை உடையது.

விளக்கம்:  இப்பாடலில், முதற்பொருளாகக் குன்றும், கருப்பொருளாக முருகன், யானை, காந்தள் ஆகியவையும் குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.


தலைவனை விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று என்று தலைவி விரும்புவதால், தலைவன் அளிக்கும் மலர்களை வாங்கிக்கொள்ளத்  தோழி மறுக்கிறாள் என்பதைப் புலவர்  மறைமுகமாகக் கூறுவதாகத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment