Tuesday, April 14, 2015

பாடல் - 8

8. மருதம் - காதற் பரத்தை கூற்று

பாடியவர்: ஆலங்குடி வங்கனார். இவரது இயற்பெயர் வங்கன். இவர் சோழ நாட்டிலுள்ள ஆலங்குடி என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் ஆலங்குடி வங்கனார் என்று அழைக்கப்பட்டார். இவர் அகநானூற்றில் ஒருபாடலும் (106), குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (8,45), நற்றிணையில் மூன்று பாடல்களும் (230, 330, 400), புறநானூற்றில் ஒருபாடலும் (319) இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: ஒரு தலைவன் தன் மனைவியைவிட்டுச் சிலகாலம் ஒரு பரத்தையோடு தொடர்புகொண்டு, அவள் வீட்டில் தங்கியிருந்தான். அங்கிருந்தபொழுது அவள் விருப்பப்படி நடந்துகொண்டான். பிறகு, தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்று தன் மனைவியோடு வாழ ஆரம்பித்தான். தலைவி (தலைவனின் மனைவி) தன்னை இழித்துப் பேசியதை அறிந்த பரத்தை, “இங்கிருந்த பொழுது என் மனம்போல் நடந்து கொண்டான். இப்பொழுது தன் மனைவிக்கு அடங்கி வாழ்கிறான்என்று தன் கருத்தைத் தலைவியின் அருகில் உள்ளவர்கள் கேட்குமாறு பரத்தை கூறுகிறாள்.

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே. 

அருஞ்சொற்பொருள்: கழனி = வயல்; மா = மா மரம்; உகுதல் = உதிர்தல்; தீம்பழம் = இனிய பழம் ; பழனம் = பொய்கை; வாளை = ஒருவகை மீன்; கதுவுதல் = பற்றுதல்; ஊரன் = ஊரை உடைய தலைவன்; ஆடி = கண்ணாடி; பாவை = கண்ணாடியில் தோன்றும் உருவம் ; மேவல் = விரும்பல்.

உரை: வயல் அருகில் உள்ள மா மரத்திலிருந்து, பழுத்துத் தானாக விழுகின்ற இனிய பழங்களைக் கவ்வி உண்ணும் வாளை மீன்கள் வாழும் ஊரை உடைய தலைவன், என் வீட்டிலிருந்த பொழுது என்னை வயப்படுத்துவதற்காக என்னைப் பெருமைப்படுத்தும் மொழிகளைப் பேசினான். இப்பொழுது, தன்னுடைய வீட்டில், முன்னால் நிற்பவர்கள் கையையும் காலையும் தூக்குவதால் தானும் தன் காலையும் கையையும் தூக்கும் கண்ணாடியில் தோன்றும் உருவத்தைப்போல், தன் புதல்வனின் தாய் (மனைவி) விரும்பியவற்றைத் தலைவன் செய்கிறான்.

விளக்கம்: இப்பாடலில் முதற்பொருளாக வயலும், கருப்பொருளாக வாளைமீன் , மாம்பழம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்பாடல் மருதத்திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

தலைவனின் மனைவியை மனைவிஎன்று குறிப்பிடாமல்,  ”தலைவனின் புதல்வனின் தாய்என்று குறிப்பிடுவது பரத்தை தலைவி மீது கோபமாக இருக்கிறாள் என்பதைக் குறிக்கிறது.


வயலருகில் உள்ள மாமரத்திலிருந்து விழும் பழங்களைக் கவ்வும் வாளைமீன் என்பது எவ்வித முயற்சியும் இன்றி, தலைவனை எளிதில் பற்றி அவனோடு இன்புறும் பரத்தையரின் செயலை உள்ளுறை உவமமாகக் குறிக்கிறது.. 

6 comments:

  1. Maha Tejo Manadala Guru,

    நன்றி. தொடர்ந்து படியுங்கள்.

    அன்புடன்,
    பிரபாகரன்

    ReplyDelete
  2. அருமையான விளக்கம், ஐயா

    ReplyDelete
  3. அன்பிற்குரிய கௌரி அவர்களுக்கு,
    நன்றி. தொடர்ந்து படியுங்கள்.
    அன்புடன்,
    பிரபாகரன்

    ReplyDelete
  4. சிறப்பு.. குறுந்தொகையில் காதற்பரத்தையற் கூற்று எதன் அடிப்படையில் அமைகிறது.

    ReplyDelete