Tuesday, April 14, 2015

பாடல் - 4

4.   நெய்தல் - தலைவி கூற்று

பாடியவர்: காமஞ்சேர் குளத்தார். குறுந்தொகையில் இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே உள்ளது.

பாடலின் பின்னணி: தலைவனும் தலைவியும் கூடியிருந்தபொழுது, எக்காரணத்திலாவது தலைவி வருத்தமுற்று அழுதால், தலைவன் அவளுக்கு ஆறுதல் கூறி அவள் கண்ணீரைத் துடைப்பது வழக்கம். இப்பொழுது, தலைவி தலைவனைப் பிரிந்து வருந்துகிறாள். முன்பு ஆறுதலாக இருந்து, தன் கண்ணீரைத் துடைத்த தன் தலைவன் இப்பொழுது தன் அருகே இல்லாததால் தான் வருத்தப்படுவதைத் தன் தோழியிடம் தலைவி கூறுகிறாள்.

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே. 

அருஞ்சொற்பொருள்: நோ = வருத்தம்; நோம் = வருந்துகிறது; தீத்தல் = சுடுதல்; தாங்கி = தடுத்து; அமைதல் = உடன்படுதல்

உரை: என் நெஞ்சம் வருந்துகிறது; என் நெஞ்சம் வருந்துகிறது. இமைகளைச் சுடும் சூடான என் கண்ணீரைத் துடைத்து, எனக்கு ஆதரவாக இருந்த நம் தலைவர் இப்பொழுது எனக்கு  ஆதரவாக இல்லாமல் பிரிந்திருத்தலால், என் நெஞ்சம் வருந்துகிறது.

விளக்கம்: இப்பாடலில், நெய்தல் திணைக்குரிய உரிப்பொருளாகிய இரங்கல் கூறப்படுவதால், இப்பாடல் நெய்தல் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
நோம் என் நெஞ்சேஎன்று தலைவி மூன்றுமுறை கூறுவது அவள் வருத்தத்தின் மிகுதியைக் குறிக்கிறது.

No comments:

Post a Comment