15. பாலை - செவிலி
கூற்று
பாடியவர்: ஔவையார். தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற
பெயரில் பெண்பாற் புலவர்கள் பலரைக் காண்கிறோம்.
சங்க காலத்தில் வாழ்ந்து, அதியமான் நெடுமான்
அஞ்சியோடு நெருங்கிய நட்பு கொண்டு அவனைப் புகழ்ந்து பாடிய ஔவையார் மற்ற
ஔவையார்களைவிடக் காலத்தால் முந்தியவர்.
இவர் புறநானூற்றில் 33 பாடல்களும், அகநானூற்றில் 4 பாடல்களும், குறுந்தொகையில்
15 பாடல்களும், நற்றிணையில் 7 பாடல்களும் இயற்றியவர். இவர்
அதியமான், தொண்டைமான், நாஞ்சில்
வள்ளுவன், சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன்
கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம்
வேட்ட பெருநற்கிள்ளி, அதியமான் மகன் பொகுட்டெழினி ஆகிய பல
அரசர்களைப் பற்றிப் பாடிய 33 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.
சங்க காலத்துப் புலவராகிய ஔவையார்க்குப் பின்னர், நாயன்மார்கள்
காலத்தில் (கி.பி. எட்டாம் நூற்றாண்டில்) ஔவையார் ஒருவர் மிகுந்த சிவ பக்தியோடு
வாழ்ந்ததாகவும் சிலர் கருதுகின்றனர்.
அடுத்து, மற்றுமொரு ஔவையார் கம்பர், ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்கள் வாழ்ந்த காலத்தில் (கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில்)
வாழ்ந்தவர். இவர், அக்காலத்துச்
சோழ அரசனுடைய அவைக்களத்திலும், சிறு பகுதிகளை ஆண்ட
தலைவர்களோடும் ஏழை எளியவர்களோடும் பழகியவர்.
இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி முதலிய நீதி நூல்களைச் சிறுவர்கள்
கற்பதற்கு ஏற்ற எளிய நடையில் இயற்றியவர்.
அடுத்து, ஞானக்குறள் என்ற ஒரு நூல் ஔவையார் என்ற
ஒருவரால் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நூலில், உயிரின் தன்மையையும் யோகநெறியையும் பற்றிய
ஆழ்ந்த கருத்துகள் காணப்படுகின்றன.
விநாயகர் அகவல் என்ற பக்திச் சுவை ததும்பும் நூல் ஔவையார் என்ற ஒருவரால் இயற்றப்பட்டதாகக்
கருதப்படுகிறது. இவர் ஞானக்குறள் எழுதிய
ஔவையார் அல்லாமல் வேறொருவராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஆகவே, தமிழ் இலக்கிய வரலாற்றில் பல ஔவையார்கள்
காணப்பட்டாலும், சங்க காலத்து ஔவையார் காலத்தால்
முந்தியவர். அவர் பாடல்கள்தான்
புறநானூற்றில் அடங்கி உள்ளன. ஔவையார் என்ற
பெயர் கொண்ட புலவர்களின் வரலாறு தனியே ஆய்வு செய்தற்குரியது.
பாடலின் பின்னணி: ஒரு
தலைவனும் தலைவியும் தற்செயலாகச் சந்தித்தார்கள். அவர்கள் நெருங்கிப்
பழகிக் கருத்தொருமித்தனர். அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள்.
ஆனால், தலைவியின் பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. ஆகவே, அவர்கள் யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் தங்கள்
ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள். தலைவனும் தலைவியும் தங்கள் ஊரைவிட்டு
வெளியூருக்குப் போவதற்குத் தோழியும் தோழியின் தாயும் உதவியாக இருந்தார்கள். ஆகவே,
தலைவனும் தலைவியும் ஊரைவிட்டுச் சென்ற செய்தி அவர்களுக்குத் தெரியும்.
அது மட்டுமல்லாமல், தலைவனும் தலைவியும் வெளியூருக்குச்
சென்று திருமணம் செய்துகொண்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். பொழுது விடிந்த பின்னர், தன் மகளைக் காணவில்லையே என்று
தலைவியின் தாய் தேடுகிறாள். தன் மகள் எங்கே போயிருக்கக்கூடும்
என்று தன் மகளின் தோழியின் தாயைக் கேட்கிறாள். ” நீங்கள் அவர்களின்
திருமணத்திற்குச் சம்மதிக்காததால், உன் மகளும் அவள் காதலனும்
ஊரைவிட்டுச் சென்றுவிட்டார்கள். இந்நேரம் அவர்களுடைய திருமணம்
நடந்து முடிந்திருக்கும். அவர்கள் ஒருவரை ஒருவர் மிகவும் காதலிக்கிறார்கள்.
ஆகவே, உன் மகள் சிறப்பாகத் தன் கணவனோடு இல்வாழ்க்கை
நட்த்துவாள். நீ வருந்தாதே.” என்று தோழியின்
தாய் தலைவியின் தாய்க்கு ஆறுதல் கூறுகிறாள்.
பறைபடப்
பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.
அருஞ்சொற்பொருள்: பறை = முரசு; பணிலம் = சங்கு; ஆர்த்தல் = ஒலித்தல்;
இறை = தங்கல்; கொள்பு
= கொண்டு; தொல் = பழைய
; மூது = பழைமை ; ஆலத்து
= ஆலமரத்து; பொதியில் = பொதுவிடம்
; கோசர் = பழைய வீரர் குடியினருள் ஒரு சாரார் ;
வாய் = உண்மை; ஆய்
= அழகு; கழல் = ஆடவர் காலில்
அணியும் அணிகலன்; சேயிலை = செம்மையாகிய
இலை; வெள்வேல் = வெண்மையான் வேல்
; விடலை = பாலை நிலத் தலைவன், வீரன், ஆண்மகன்.
உரை: அழகிய
வீரக் கழலையும்,
செம்மையாகிய இலையை உடைய வெண்மையான வேலையும் கொண்ட, பாலை நிலத்தலைவனோடு, பல வளையல்களை தன் முன்கைகளில் அணிந்த உன்மகள் செய்த நட்பானது,
நாலூரில் மிகப்பழைய ஆல மரத்தடியின்கண் உள்ள பொதுவிடத்தில் தங்கியிருந்த
கோசரது நன்மையுடைய மொழி உண்மையாவதைப் போல, முரசு முழங்கவும்,
சங்கு ஒலிக்கவும், திருமணம் செய்துகொண்டதால் உண்மை
ஆகியது.
விளக்கம்: தொல்காப்பியத்தில்
”அறத்தொடு நிற்றல்” என்ற ஒருசெய்தி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அகத்திணைப் பாடல்களில் காதல் வாழ்க்கையை களவு – கற்பு என்று இரண்டாகப் பிரிப்பது வழக்கம். திருமணத்திற்கு முந்திய காதல் வாழ்கை களவு என்றும் திருமணத்திற்குப் பிந்திய
காதல் வாழ்க்கை கற்பு என்றும் கருதப்பட்டது. தலைவனும் தலைவியும்
அவர்களின் பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியாமல் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருந்ததை
முறையாக வெளிப்படுத்துவது அறத்தொடு நிற்றலாகும். தலைவியின் காதல்
தோழிக்குத் தெரியும். தக்க சமயத்தில் தோழி, தலைவன் – தலைவி காதலைத் தன் தாய்க்குத் தெரிவிப்பாள்.
தோழியின் தாய் அந்தச் செய்தியைத் தலைவியின் தாய்க்குத் தெரிவிப்பாள்.
தலைவியின் தாய் தன் கணவனுக்குத் தெரிவிப்பாள். பின்னர் திருமணம் நடைபெறும். இவ்வாறு தோழி, தோழியின் தாய், தலைவியின் தாய் ஆகியோர் தலைவன்
– தலைவியின் காதலை முறையாக வெளிப்படுத்துவதின்
நோக்கம் அவர்கள் காதல் திருமணத்தில் நிறைவு பெறவேண்டும் என்பதுதான். தலைவன் – தலைவியின் காதல், களவொழுக்கத்திலிருந்து
கற்பொழுக்கமாக மாறுவதற்காகத் தோழி, தோழியின் தாய், தலைவியின் தாய் ஆகியோர் செய்யும் செயல்கள்
அறத்தொடு நிற்றல் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
இப்பாடலில், தலைவன்,தலைவி ஆகியோர் பெற்றோரைவிட்டுப் பிரிந்து
செல்வதால், இப்பாடல் பாலைத்திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
எளிமையான நடையில் உள்ள உங்கள் கருத்துக்களை படிக்க சுலபமாக உள்ளது ஐயா. குடிமைப் பணி தேர்வுக்கு பயன்பெறுகிறது.
ReplyDeleteஅன்பிற்குரிய ரஞ்சித்குமார் அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
உங்கள் பதிவுக்கு நன்றி. குடிமைப் பணி தேர்வுக்கு என்னுடைய உரையும் விளக்கமும் உங்களுக்குப் பயனுள்ளவையாக இருக்கின்றன என்பதைக் கேள்விப்பட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் குடிமைப் பணித் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகிறேன். தொடர்ந்து படியுங்கள்.
நன்றி.
அன்புடன்,
பிரபாகரன்
Apologise for typing in English, your brief and in-depth explanation is lovely to see and easy to remember. It is surely helpful for me in my civil service preparation, wherever u are, sir, hope u have a long life and do this lovely work in this language.
ReplyDelete